நடுப்பக்கம்
எம்.பி., எம்எல்ஏக்களின் இந்த "விலைபேசும் அரசியல்' மூலம் அரசுகளும் அமைக்கப்பட்டன. இதனால், 1967 டிசம்பர் 8-இல், மக்களவையில் ஒருமனதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, கட்சி தாவும் பிரச்னையை அனைத்து கோணங்களிலும் ஆய்வு செய்ய உயர்நிலைக் குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
அந்தக் குழு, கட்சி மாறிய உறுப்பினர் ஓராண்டுகாலத்துக்கு அல்லது மீண்டும் தேர்தலில் வெற்றி பெறும் வரை, அமைச்சர் பதவி, மக்களவைத் தலைவர், பேரவைத் தலைவர் பதவி அல்லது ஊதியம் பெறும் எந்தவொரு பொதுப் பதவியையும் வகிக்கத் தகுதியற்றவராக அறிவிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
இருப்பினும், 1985-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 52-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் மூலமாகத்தான், அரசமைப்பின் பத்தாவது அட்டவணையில் கட்சித் தாவல் தடைச் சட்டம் இணைக்கப்பட்டது.
ஆனால் அதன் பின்னர், தனிப்பட்ட உறுப்பினர்கள் கட்சி மாறுவது குறைந்து, அதற்குப் பதிலாக மொத்தக் குழுக்களாக திட்டமிட்டு கட்சி தாவுவது அதிகரித்தன. பத்தாவது அட்டவணையின் பிரிவு 3-இல் இருந்த, மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பிரிந்தால் அது செல்லுபடியாகும் என்ற விதி, மொத்தமாகக் கட்சி மாறுவதற்கான சட்டப்பூர்வ உரிமையாக மாறியது.