சிகரெட் தயாரிப்பதற்கான புகையிலை, இதில் உள்ள நச்சுத்துகள்கள், வேதிப்பொருள்கள், புகைப்பவர்களையும், அருகில் இருப்பவர்களையும், அடுத்த தலைமுறையையும் பாதிக்கும்.
புகைபிடிப்பதால், புற்றுநோய், ரத்தநாளக் கோளாறுகள், காசநோய், சிறுநீரகக் கோளாறுகள், வயிற்றுப்புண், இதய நோய்கள், பக்கவாதம், நாள்பட்ட நுரையீரல் நோய்கள் போன்ற உயிருக்கு ஆபத்தான பல பாதிப்புகள் ஏற்பட்டு, இறுதியில் திடீரென உயிரிழப்பும் ஏற்படும்
புகையிலை பயன்படுத்தும் பழக்கத்தால் ஒவ்வோர் ஆண்டும் 70 லட்சம் பேர் இறப்பதாகவும், அதில் 13 லட்சம் பேர் இந்தியாவில் மட்டுமே இறப்பதாகவும், உலக சுகாதார அமைப்பு மதிப்பிடுகிறது.
பிரிட்டனில் 2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது 01.01.2009 முதல் பிறந்த யாருக்கும் சிகரெட் அல்லது புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது என்பது சட்டப்படி குற்றம்.
ஒவ்வோர் ஆண்டும் பிரிட்டனில் பல லட்சம் பேர் புகைபிடித்தல் சார்ந்த நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களின் உடல்நிலை பாதிப்பு ஒரு பக்கம் என்றால், இவர்களுக்கு சிகிச்சையளிக்க ஆகும் செலவு, பிரிட்டனுக்கு பெரும் சுமையாக இருக்கிறது.
"ஒரு மனிதன் தன்னையே மாற்றிக்கொண்டால் உலகமே மாறிவிடும். நல்ல சிந்தனைகள், நல்ல செயல்களை உருவாக்கும், நல்ல செயல்கள் நல்ல வாழ்க்கையைத் தரும்' என்றார் சுவாமி விவேகானந்தர்.
நாம் எந்தத் தீய பழக்கத்தைக் கைக்கொள்கிறோமோ, அதற்கு அடிமையாகிறோம். "சிறந்து விளங்குவது என்பது ஒரு செயல் அல்ல, அது ஒரு பழக்கம்' என்றார் அரிஸ்டாட்டில்.
விருப்பம் இருக்கிறது என்பதற்காக அவசியமில்லாத அல்லது தீமைகளைத் தரும் செயல்களைச் செய்யவே கூடாது. முதலில் வெளி அடக்கம் உண்டானால்தான் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளடக்கம் சிந்திக்கும்.