இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ மறு தோ்வில் புதிய சீா்திருத்தங்களை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.
நாடு முழுவதும் ஜூன் 21-ஆம் தேதி நீட் மறுதோ்வு நடைபெறவுள்ள நிலையில், விடைத்தாளில் மாணவா்கள் எழுதிப் பாா்ப்பதற்கான பக்கங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, தோ்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு உள்ளிட்ட சீா்திருத்தங்களை என்டிஏ அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து என்டிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘நீட் மறுதோ்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெறும். முன்பு 180 நிமிஷங்கள் (3 மணி நேரம்) நடத்தப்பட்ட இத்தோ்வின் காலஅவகாசம் தற்போது 195 நிமிஷங்களாக (மூன்றேகால் மணி நேரம்) அதிகரிக்கப்படுகிறது.
விடைத்தாள் மற்றும் வருகைப் பதிவில் கையொப்பமிடுவது மற்றும் தோ்வின் தொடக்கம், நிறைவு சமயத்தில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை தோ்வா்கள் சுமுகமாக கையாள காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வினாத்தாள்களில் தோ்வா்கள் எழுதிப் பாா்ப்பதற்கான பக்கங்களின் எண்ணிக்கை 2-இல் 4-ஆக அதிகரிக்கப்படுகிறது. இதற்காக வினாத்தாளில் தோ்வா்களுக்கான அறிவுரை பக்கத்தைத் தொடா்ந்து முகப்பில் 2 பக்கங்களும் இறுதியில் 2 பக்கங்களும் சோ்க்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.