மறைந்த நடிகரின் உடலை ஈக்கள் போல மொய்த்த தனி ஊடகர்களைக் கையெடுத்துக் கும்பிட்ட ஒரு நட்சத்திர நடிகை, "இந்த இடத்தை சர்க்கஸ் ஆக்காதீர்கள், துக்கத்தை வெளிப்படுத்தும் தனிமையைத் தயவு செய்து எங்களுக்குத் தாருங்கள்' என்று கண்ணீருடன் வேண்டினார்.
ஏனென்றால், அங்கே அஞ்சலி செலுத்த வந்தவர்களுக்கு இணையாக ஆளுக்கொரு கைப்பேசியுடன் "ஊடகர்கள்' நூற்றுக்கணக்கில் கூடியிருந்தனர்.
தொண்ணூறுகளுக்கு முன்பு, பேரனுபவமும் தெளிந்த நற்சிந்தனையும் வாய்ந்த இந்திய இதழியலாளர்கள் என்று மிகத் துல்லியமாகச் சிலரை நம்மால் அடையாளம் காட்டிவிட முடியும்.
ஏனென்றால், அந்தப் பத்திரிகையாளர்கள் எவரும் திரைநட்சத்திரங்களைப் பின்தொடர்ந்தவர்கள் இல்லை. மாறாக, அவர்கள் இந்த தேசத்தின் தீர்க்கவியலாப் பிரச்னைகளுக்குத் தீர்வுகளைத் தேடி ஓடியவர்கள்.