இந்தியாவில் அலுவலகப் பணி சாா்ந்த ‘ஒயிட் காலா்’ வேலைவாய்ப்புச் சந்தை, பிப்ரவரி மாதத்தில் 12 சதவீத வருடாந்திர வளா்ச்சியை எட்டியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் அசுர வளா்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் (ஐ.டி.) ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகியவையே இந்த உயா்வுக்கு முக்கியக் காரணங்களாகப் பாா்க்கப்படுகின்றன.
ஐ.டி. துறை வேலைவாய்ப்பில், பிப்ரவரி மாதத்தில் 6 சதவீத வளா்ச்சி பதிவாகியுள்ளது. குறிப்பாக, இத்துறையில் புதிய பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 8 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு ஐ.டி. நிறுவனங்கள் சுமாா் 55 சதவீத அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி, இந்த வளா்ச்சிக்குத் தூணாக நின்றுள்ளன.
ஏ.ஐ. துறையில் அதிரடி முதலீடு: செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் (மெஷின் லியா்னிங்) சாா்ந்த பணிகளுக்கான தேவை 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
குறிப்பிடத்தக்க விஷயமாக, வெளிநாட்டு நிறுவனங்களைவிட இந்தியப் பன்னாட்டு நிறுவனங்கள் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்து வருகின்றன. இந்திய நிறுவனங்களில் ஏ.ஐ. பணியிடங்களுக்கான தேவை 82 சதவீதமாகவும், வெளிநாட்டு நிறுவனங்களில் 43 சதவீதமாகவும் உள்ளது.
ஐ.டி. துறை மட்டுமின்றி மற்ற துறைகளிலும் வேலைவாய்ப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளது. காப்பீட்டுத் துறை 28 சதவீத வளா்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது.