ஆனால் கடந்த 50 ஆண்டுகளில், மிகவும் அதிகமாக வதைத்துப் பயிற்றுவிக்கப்பட்டு பெருமளவில் தங்களது இயல்பறிவை இழந்தவர்கள், கண்டுகொள்ளாமல் விடப்பட்டவர்களாகவும் உரிய முறையில் வழிநடத்தப்படாதவர்களாகவும் மாறிப் போயுள்ளவர்கள் என இன்றைய நமது சமூகத்தின் பல லட்சக்கணக்கான குழந்தைகள் இரு வேறு கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.
உலக அளவில் சிறுவர் - சிறுமிகளின் பதின்பருவ காலங்களில் பெரும்பகுதி, பள்ளிக் கல்விக் காலமாகவே அமைகிறது. அந்தக் காலகட்டங்களில் அவர்களுக்குப் புகட்டப்படுகின்ற நற்கல்வி முறைகள்தான், பிற்காலங்களில் அவர்களைப் பல்துறை ஆளுமையாளர்களாக வடிவமைக்கின்றன. எனவேதான், மாணவர்களின் வாழ்வில் உயர்கல்வியைவிட, பள்ளிக் கல்வியே முதன்மையான சிறப்புகளைக் கொண்ட வலிமையான அடித்தளமாகப் பார்க்கப்படுகிறது.
தங்களின் கல்லூரி ஆசிரியர்களைச் சந்திப்பதைவிட வயது முதிர்ந்து ஓய்ந்திருக்கிற தங்களின் பள்ளி ஆசிரியர்களைத் தேடிச் சென்று சந்தித்து வாழ்த்து பெறுவதையே இன்றளவும் பலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதற்குக் காரணம், பள்ளிக் கல்வியும் பள்ளி ஆசிரியர்களுமே தங்களைப் பண்படுத்திப் பயிற்றுவித்து, உருவாக்கி உயர்த்தியதாக அவர்கள் உணருகிற உண்மைதான்!
"நிகழ்காலத்தின் மாணவர்களுக்கான மிகப் பெரிய சிக்கலாக வளர்ந்து கொண்டிருக்கிறது, கட்டுப்பாடுகளற்ற சமூக ஊடக நுகர்வுக் கலாசாரம். இதன் தீமைகள் குறித்து கல்லூரி மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி விளங்க வைப்பதைவிட, பள்ளிப் பிள்ளைகளுக்கு எடுத்துரைத்து அவர்களை மீட்டெடுத்தால்தான், தங்களின் கல்லூரிக் காலத்திலும் அதற்குப் பிறகும் அவர்கள் விழிப்புடன் இருப்பார்கள்.
பள்ளிக் கல்வியில் கற்பிக்கத் தவறிய நற்பண்புகளை உயர் கல்வியில் கற்பித்துப் போதிய அளவு வெற்றிபெற முடியாது' என்கிறார்கள், சமூக ஊடகக் கல்வி விழிப்புணர்வுச் செயற்பாட்டாளர்கள். எனவே, பள்ளிக் கல்வி என்பது பிள்ளைகளைப் படிக்க வைப்பது மட்டுமல்ல, வாழ்வில் மேன்மையுற ஏதுவாக அவர்களை வடித்தெடுப்பதும்தான்!