நண்பர்களிடையே நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உணர்வால், மது மற்றும் போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கத்தை பல இளைஞர்கள் அவர்களுடைய நண்பர்களிடம் இருந்து கற்றுக் கொள்கின்றனர். தனிப்பட்ட குடும்பப் பிரச்னைகளால் ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து தற்காலிகமாக விடுபட போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் இளைஞர்களும் உண்டு.
சென்னை உள்ளிட்ட இந்தியப் பெருநகரங்களில் அமைந்துள்ள பல்கலைக்கழக வளாகங்கள் மற்றும் உயர் கல்வி கல்லூரி விடுதிகளில் மாணவர்களிடையே போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கம் 1960-களில் வெளிப்பட்டது.
தொடர்ந்து, சென்னை நகரில் போதைப் பொருள்கள் நடமாட்டத்தைக் கண்காணித்து, நடவடிக்கை எடுப்பதற்காக சி.பி.சி.ஐ.டி. காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் "போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு' என்ற அமைப்பு சென்னை நகரில் முதன்முதலில் 1963-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த நுண்ணறிவுப் பிரிவு தமிழ்நாட்டிலுள்ள பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
நகரங்கள், கிராமங்கள் என மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் போதைப் பொருள்கள் வெளிப்படையாக விற்பனை செய்யப்படுவதும், மாணவர்களிடையே போதைப் பழக்கம் வேகமாகப் பரவி வருவதும், போதைப் பொருள்கள் பயன்பாடு பல கொடுங்குற்றங்கள் நிகழ்வதற்குக் காரணமாக அமைந்திருப்பதும் கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்களிடையே அச்சத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளன.