அப்படித்தான் "இன்பதுரை எதிர் அப்பாவு' வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும், அதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் நாம் பார்க்க வேண்டும்.
மாறாக, உச்சநீதிமன்றம் மாறிவரும் சூழ்நிலைகளுக்கு இணையாக புதிய முயற்சிகளைச் செய்கிறது என எடுத்துக்கொள்ள வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜெயச்சந்திரன் கிட்டத்தட்ட உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பு வழங்கும் கடமையைச் சரியாக செய்யவில்லை என்ற அறச் சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
2021-ஆம் ஆண்டு நடைபெற்ற ராதாபுரம் சட்டப்பேரவைத் தேர்தலில் 5,925 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரையை தோற்கடித்து வெற்றி பெற்று அப்பாவு சட்டப்பேரவை உறுப்பினராகி, பேரவைத் தலைவராகவும் ஆனார். முன்னதாக, 2016-ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் 49 வாக்குகளில் இன்பதுரையிடம் தோற்றதாக அப்பாவு அறிவிக்கப்பட்டார்.
அதை எதிர்த்து அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில், தனக்கு விழுந்த வாக்குகள் தவறாக தள்ளுபடியாகிவிட்டன என்றும், 19, 20, 21-ஆவது சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கைகளில் குளறுபடிகள் நடைபெற்றதாகவும், குறிப்பாக தனக்கு வந்த தபால் வாக்குகளில் நடுநிலைப் பள்ளித்தலைமை ஆசிரியரால் சான்று செய்யப்பட்டிருந்தும், அவற்றைத் தள்ளுபடி செய்தது சரியல்ல என்று தேர்தல் மனு எண். 2/2016 தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த மே 21 -ஆம் தேதி இறுதித் தீர்ப்பை வழங்கியது. மறு எண்ணிக்கையில் அப்பாவு 153 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் முன் இருந்த ஒரே பிரச்னை இடைநிலைப் பள்ளித் தலைமையாசிரியரால் சான்று அளிக்கப்பட்ட தபால் வாக்குகளை கணக்கில் எடுத்துக் கொள்ளலாமா? வேண்டாமா? என்பதுதான்.