இந்தச் சமுதாயத்தில் குழந்தைகளின் நிலை என்ன?, அவர்களது உரிமைகள் என்ன?, அவர்களது உடல் மற்றும் மனநலன் குறித்த புரிதலும், அவற்றைப் பேண வேண்டும் என்ற பொறுப்புணர்வும் நமக்கு உள்ளனவா? சற்றே ஆராய்ந்து பார்ப்போம்.
குழந்தைகளின் அடிப்படைத் தேவைகள் - உடல் நலனுக்கு - உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க வீடு. மன நலனுக்கு- ஒழுக்கத்துடன் கூடிய கல்வி, மன அழுத்தம் போக்கும் சூழல், பாதுகாப்பு ஆகியவை தேவை. இவற்றை இந்தச் சமுதாயம் தருகிறதா?
மன நலன் என்று வரும்போது தான் மிகப் பெரிய பாகுபாடு உண்டாகிறது. கல்வியை எடுத்துக் கொள்வோம். எல்லோருக்கும் ஒரே மாதிரி கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் 'சமச்சீர்க் கல்வித் திட்டம்' கொண்டுவரப்பட்டது. அதற்கு முன்னர் இருந்த மாநில, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டங்கள் நீக்கப்பட்டு, 'சமச்சீர் பாடத் திட்டம்' என்ற ஒரே பாடத் திட்டமாக மாற்றியமைக்கப்பட்டது.
பெரும்பாலான பெற்றோர் சமச்சீர் பாடத் திட்டம் தரமற்றது என்றும் மத்திய பாடத் திட்டங்களே தரமானவை என்றும் தவறாகக் கருதிக் கொண்டு தங்கள் குழந்தைகளை மத்திய பாடத் திட்டங்கள் உள்ள பள்ளிகளில் மிக அதிகக் கட்டணம் செலுத்திச் சேர்க்கிறார்கள். அரசுப் பள்ளிகளிலும், வெகு சில தனியார்ப் பள்ளிகளிலும் மட்டும்தான் சமச்சீர் பாடத் திட்டம் பயிற்றுவிக்கப்படுகிறது.
பெற்றோர் இருவரும் வேலைக்குப் போனால்தான் குழந்தையை நல்லபடியாக வளர்க்க முடியும் என்று பொருளாதாரம் நிர்ப்பந்திக்கிறது. பெண்களுக்குப் பேறுகால விடுமுறை போல, குழந்தைக்கு ஒரு வயதாகும் வரை ஊதியத்துடன் கூடிய விடுப்பு தந்து, ஐந்து வயதாகிப் பள்ளியில் சேர்க்கும் வரை வீட்டிலிருந்து பணிபுரியும் வசதிகளைச் செய்து தரலாம்.