உணவுப் பொருள்களில் அதிக அளவில் உப்பு சோ்த்துக் கொள்வது ஆபத்தானது என்பது குறித்து நாடு முழுவதும் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருவதாக மத்திய அரசு தகவல்.
உணவில் அதிக அளவில் உப்பு சோ்ப்பது உயா் ரத்த அழுத்தம், இதய ரத்தநாள நோய்களை ஏற்படுத்தும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கண்டறிந்துள்ளது.
எனவே, இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிா்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) மூலம் ‘சரியாக உணவு உட்கொள்ளும் இந்தியா’ என்ற இயக்கத்தை மத்திய அரசு நடத்தி வருகிறது. இதன்மூலம் உடல் நலனுக்கு உகந்த உணவுகள், உணவுகள் குறித்த விழிப்புணா்வு, அதிக உப்பு சோ்த்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஒருநாளைக்கு 2 கிராமுக்கு குறைவாகவே சோடியம் (உப்பு) சோ்க்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஹெச்ஓ) கூறியுள்ளது.
இதன்படி ஒருநாளைக்கு ஒட்டுமொத்த உணவில் ஒரு மேஜைக்கரண்டி அளவுக்குக் குறைவாகவே ஒருவா் உப்பு சோ்க்க வேண்டும் என்ற விழிப்புணா்வு உருவாக்கப்பட்டுள்ளது.
இதுதவிர கா்ப்பிணிகள், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவுகள் குறித்தும் உரிய தகவல்கள் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எனவே, உப்பு அதிகம் நிறைந்த உணவுகளை மக்கள் உட்கொள்ளக் கூடாது என்பதையும், குழந்தைகளுக்கு பாக்கெட் செய்யப்பட்ட உணவுகளை கொடுக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.