மும்மூர்த்திகள் ஒரே தலத்தில் அருள்பாலிக்கும் திருத்தலங்கள்!

இணையதளச் செய்திப் பிரிவு

திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள உத்தமர் கோயிலில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் தங்களின் தேவியர்களுடன் தம்பதி சமேதமாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

சிவபெருமான் பிச்சைக்காரர் வடிவத்தில் வந்து அவரது தோஷம் நீங்கப் பெற்றதால் பிச்சாண்டவர் கோயில் என்றும் படைப்புத் தொழிலைச் சிறப்பாகப் பணியாற்ற திருமாலின் நாபிக் கமலத்தில் பிரம்மா தோன்றியதால், "பிரம்மபுரி' என்றும், ஓர் ஊழிக்கால பிரளயத்தின்போது உலகம் முழுவதும் ருத்திரரிடம் ஒடுங்கியபோது, வேதங்களே கதம்ப மரங்களாகத் தோன்றின. திருமால் அனைவரையும் காக்கும் பொருட்டு உத்தமராகத் திகழ்வதால் "உத்தமர் கோயில்' என்றும் பெயர் பெற்றது எனத் தலப்புராணம் தெரிவிக்கிறது.

கோவை மாவட்டம், கூலநாயக்கன்பட்டி எனும் ஊரில் அமைந்துள்ளது மலையாண்டி சுவாமி கோயில். இந்தக் கோயில் கருவறையில் பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான் என மும்மூர்த்திகளும் எழுந்தருளியிருக்கிறார்கள். இவ்வாறு ஒரே கருவறையில் மும்மூர்த்திகளும் காட்சியளிப்பது, வேறு எங்கும் காண முடியாத அரிய காட்சி.

தஞ்சாவூரிலிருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம் திருக்கண்டியூர். மேற்குதிசை நோக்கி இறைவன் அருள்புரிய, அம்பாள் தெற்குதிசை நோக்கி எழுந்தருளியுள்ளார்.

சிவபெருமானின் பராக்ரமங்களை விளக்கும் அட்டவீரட்ட தலங்களில்  முதலாவது தலம் இது. பிரம்மனின் தலையைக் கொய்த தலம் திருக்கண்டியூர். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில் புரியும் பிரம்மன்,  திருமால், சிவன் ஆகிய மூவருக்கும் இத்தலத்தில்தான் தனிக்கோயில்கள் உள்ளன. எனவே, இத்தலத்துக்குத் திருமூர்த்தி தலம் என்ற பெயரும் உண்டு.

மூலவர் சந்நிதிக்கு இடதுபுறம் பிரம்மனுக்கு கிழக்குதிசை நோக்கி தனி சந்நிதி உள்ளது. இங்கு அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் பிரம்மனுக்கு அருகில் சரஸ்வதியும் அமர்ந்துள்ளார். ஆனால், கைகளில் வீணை இல்லை என்பது தனிச்சிறப்பு.

ராஜகோபுரம்

உடுமலையை அடுத்த திருமூா்த்திமலை அமணலிங்கேஸ்வரா் கோயிலில் மும்மூர்த்திகளும் காட்சியளிக்கிறார்கள். கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அமைந்துள்ளது திருமூர்த்தி மலை. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலில் வடக்கு நோக்கி லிங்கவடிவில் எழுந்தருளியுள்ள ஒரு சுயம்பு மூர்த்தியே அமணலிங்கேஸ்வரர். இந்த சுயம்பு மூர்த்தியில், மும்மூர்த்திகளின் வடிவங்கள் காணப்படுகின்றன.

கருவறையில் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் உற்சவ மூர்த்திகளாக அருள் பாலிக்கிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக் கோயில் பிரமாண்டமான திருக்கோயிலாக அமைந்துள்ளது. சிவபெருமான், மகாவிஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே தலத்தில் அருளும் ஒப்பற்ற திருத்தலம் சுசீந்திரம்.

தாணு - சிவன், மில் - விஷ்ணு, அயன்- பிரம்மா என மூவரும் பின்னிப் பிணைந்திருக்கும் ஒருவரே தாணுமாலயான் என்பதை பறைசாற்றுகிறது இந்த கோயில்.

சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் எழுந்தருளி அருள்பாலிக்கும் தலமான திருபாண்டிக்கொடுமுடி ஒரு தலைசிறந்த பரிகாரத் தலம். முக்கியமாகப் பிதுர் தோஷம், பிதுர் சாபம் நீக்கி அருளும் பரிகாரத் தலமாகக் கொடுமுடி விளங்குகிறது.

படைத்தல், காத்தல், அழித்தல் என உலகையே தன் இயக்கத்தில் வைத்துக் காக்கும் பிரம்மா, சிவன், பெருமாள் அருள்பாலிக்கும் மும்மூர்த்தி தலமாக மகுடேசுவரர் - வீரநாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. கொடுமுடிநாதர், மலைக்கொழுந்தர், மகுடலிங்கர் எனப் பல பெயர்களில் போற்றப்படும் மூலவர் மகுடேசுவரர், சௌந்திராம்பிகை, பண்மொழியம்மை என்று போற்றப்படும் வடிவுடைநாயகி அம்பாள், அகத்தியருக்கு மணக்கோலத்தில் காட்சியளித்ததால், மகுடேசுவரருக்கு வலதுபுறத்தில் அம்பாள் மணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கும் சுவாமி மீது அகத்தியரின் கைப்பட்ட வடு உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப் ஸ்டோரிஸ்