திருமயிலாடுதுறை காவிரி நதிக்கரையில் காசிக்கு நிகராக கருதப்படும் பாடல் பெற்ற சிவத்தலம் அருள்மிகு மாயூரநாதர் சுவாமி திருக்கோயில் ஆகும். மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. பார்வதி தேவி மயில் வடிவில் சிவபெருமானை வழிபட்டதால் இத்தலம் இப்பெயரைப் பெற்றது.
திருவையாறுதிருவையாறு ஐயாறப்பர் கோயில், தஞ்சாவூரிலிருந்து 16 கி.மீ தொலைவில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது. அப்பருக்குக் கயிலைக் காட்சி அருளிய இத்தலம், பாடல் பெற்ற 276 தேவாரத் தலங்களில் ஒன்றாகும். இங்கு சிவன் சுயம்புவாக அருள்பாலிக்கிறார்.
திருவெண்காடுதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில் சமய குரவர்களாகிய சம்பந்தர் அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11வது சிவத்தலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
திருவிடைமருதூர் காவிரி நதிக்கு நிகரான புனிதத் தலமாகவும், காசிக்கு இணையான முக்தித் தலமாகவும் போற்றப்படும் திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில், கும்பகோணத்தில் இருந்து சுமார் 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் தலம்.
திருவாஞ்சியம்காவிரி நதிக்கரையில் காசிக்கு நிகராகவும், அதைவிட 116 மடங்கு மேலாகவும் கருதப்படும் திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள குப்த கங்கை தீர்த்தம், காசி கங்கையை விட புனிதமானது. இறப்பிற்குப் பின் முக்தி தரும் பூலோக கைலாசம் என்று இத்தலம் போற்றப்படுகிறது.
திருசாய்க்காடுதிருச்சாய்க்காடு (சாயாவனம்), சோழநாடு காவிரி வடகரையில் அமைந்துள்ள தேவாரம் பாடல் பெற்ற திருத்தலமாகும். கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட இவ்வாலயத்தின் மூலவர் சாயவனேஸ்வரர், இறைவி குயிலினும் நன்மொழியம்மை. 'சாய்' என்றால் கோரை என்று பொருள். கோரைப்புல் அடர்ந்த காடாக இருந்ததால் இப்பெயர் பெற்றது.