மஹாளய பக்ஷம் எனும் புண்ணிய காலம் செப். 26 முதல் பித்ரு பக்ஷம் எனப்படும் மஹாளய பக்ஷம் ஆரம்பமாகி நாளை அக். 10 மஹாளய அமாவாசையோடு முடிவடையப் போகிறது.
இந்த பதினைந்து நாள்களும் மறைந்த முன்னோர்கள் நம் வீடு தேடி வருவார்கள் என்பது நம்பிக்கை. மஹாளய அமாவாசையன்று பித்ரு வழிபாடு செய்வது சிறப்பு.
மஹாளயம் என்றால் கூட்டமாக வருதல். மறைந்த நம் முன்னோர் மொத்தமாக கூடும் நேரமே மஹாளய பக்ஷம். "பக்ஷம்' என்றால் 15 நாள்கள்.
இது புரட்டாசி மாத பௌர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கும்.
தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட உயர்ந்தது மஹாளயம்.
இறந்தவர்களின் ஆன்மாக்கள் பித்ரு லோகத்தில் இருந்து தர்மராஜனின் அனுமதியோடு பூலோகத்திற்கு வந்து தனது சந்ததியினரையும், தெரிந்தவர்களையும் காண வரும் காலமே இந்த மஹாளய பட்சம் என்று சொல்லப்படுகிறது.
இந்த பதினைந்து நாள்களும் முன்னோர்களின் நினைவாக சுபநிகழ்வுகளைத் தவிர்த்து அவர்களுக்குரிய சிரார்த்தம், தர்ப்பணம் ஆகியவற்றைச் செய்வதால் அவர்களது ஆன்மாக்கள் சாந்தி பெறும் என்பது நம்பிக்கை.