சர்வதேச சட்டம்: தோற்றமும் - வளர்ச்சியும்!

சர்வதேச சட்டம்: தோற்றமும் - வளர்ச்சியும்!

சர்வதேச சட்டம்: தோற்றமும் - வளர்ச்சியும்!

International Law: Origin and Development

சர்வதேச சட்டத்தின் தோற்றம், மத்திய காலத்தின் முடிவிற்குப் பின்னர் ஐரோப்பாக் கண்டத்தில் முதன்முதலாக உருவான தேசிய அரசு (Nation State)களின் தோற்றத்துடன் தொடர்புடையது. புதிதாக உருவான ஐரோப்பிய நாடுகளின் சுதந்திர அரசுகள் தங்களுக்கிடையிலான உறவுகளை ஒழுங்கமைத்துக் கட்டுப்படுத்தும் முயற்சியில் உருவாக்கப்பட்ட விதிகளே சர்வதேசச் சட்ட விதிகளாயின. சர்வதேச சட்டத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியை பின்வருமாறு பகுத்துக் காணலாம்.

  1. புராதன மற்றும் பழங்காலம்
  2. மத்திய காலம்
  3. ஐரோப்பாவில் தேசிய அரசுகள் உருவான காலம்
  4. நாடுகளிடையே வணிகம் பெருகிய காலம்
  5. ஏகாதிபத்தியம் மற்றும் மற்றும் காலனிகள் காலம்
  6. முதல் உலகப் போரும் அதன் பிந்தய காலமும்
  7. இரண்டாம் உலகப் போரும் அதன் பிந்தய காலமும்

புராதன மற்றும் பழங்காலம் (Primitive and Ancient Period)

முந்தய புராதன காலத்தில் அரசுகளோ அவற்றின் சட்டங்களோ கிடையாது. எனவே அக்காலத்தில் சர்வதேசச் சட்டத்தின் கூறுகள் உருவாவதற்கான வாய்ப்பு இல்லை. அதன்பிறகு சிறு சிறு இனக்குழு அரசுகள் தோன்றி அவற்றுக்கிடையே பண்டமாற்று வணிகமும் பிற பரிவர்த்தனைகளும் ஏற்படத் தொடங்கிய பழங்காலத்தில் சர்வதேசச் சட்டத்தின் சுவடுகளை ஆங்காங்கே காண முடிகிறது.

லாகேஷ்

உம்மா

கி.மு.2100-இல் மெசபடோமியா பகுதியில் லாகாஷ் (lagash) பகுதியின் ஆட்சியாளருக்கும் உம்மா (Umma) என்னும் பகுதியின் ஆட்சியாளருக்கும் இடையே உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தின் ஹிட்டீஸ் பதிப்பு( இஸ்தான்புல் தொல்லியல் அருங்காட்சியகம்)

The Hittite version (above, at the Istanbul Archaeology Museums)

ஒப்பந்தத்தின் எகிப்து பதிப்பு( அமுன்-ரீஎல்லையிலுள்ள கர்நாக் கோயில்)

Egyptian (the Precinct of Amun-Re in Karnak tempel)

அதேபோல் கி.மு.1258-இல் எகிப்தின் பாரோ மன்னனுக்கும் (Pharaoh) ஹிட்டீஸ்-இன் மன்னனுக்கும் இடையே காதேஷ் போரின் போது (Battle of Kadesh) ஒரு ஒப்பந்தம் (Egyptian–Hittite peace treaty) ஏற்பட்டுள்ளது. அதுபோல் மத்திய கிழக்கு பகுதியின் பேரரசர்களுக்கு இடையில் பல உடன்படிக்கைகள் ஏற்பட்டுள்ளன. (காதேஷ்: தற்போதைய சிரியா)

பழந்தமிழர்களின் சர்வதேச தொடர்புகள் ( International Relations of Ancient Tamils)

சங்க காலம் முதற்கொண்டு தமிழர்கள் கடல் கடந்து உலகமெங்கும் வணிக, அரசியல், பண்பாட்டுத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டவர்கள் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. இந்தியாவில் வாழ்ந்த பிறமொழி பேசும் மக்களுடனும் கடல் கடந்த நாடுகளில் வாழும் பிறமொழி பேசும் மக்களுடனும் வணிகம், பண்பாட்டுத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். பண்டைத் தமிழரும் கிரேக்கரும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதற்குச் சான்றுகள் பல உள்ளன. ‘சேர நாட்டு மிளகு, பாண்டிய நாட்டு முத்து, சோழ நாட்டு ஆடை’ என்பன யவனர் தமிழ்நாட்டிலிருந்து தம் நாட்டுக்கு எடுத்துச் சென்ற பொருட்களில் சிலவாகும். யவனர் குடியிருப்புகள் தமிழ்நாட்டில் இருந்தது. யவனர் மதுவைத் தமிழ்நாட்டார் அருந்தியது. யவன மல்லர் தமிழக மன்னர்களுக்கு மெய்க்காப்பாளர்களாக விளங்கியது. யவனர் காசு தமிழ்நாட்டில் புழங்கியது போன்ற அனைத்துச் செய்திகளும் வரலாற்று உண்மைகளாகும். எனவே கிறித்து பிறப்பதற்கு முன்பிருந்தே பிறமொழி பேசும் மக்களுடன் கலந்து கருத்துகளையும் பொருட்களையும் பரிமாற்றம் செய்யுமளவு பிறமொழி அறிவுடையராகத் தமிழர் விளங்கினர்.

தமிழர் கிரேக்க மொழியை அறிந்திருந்தது போலவே கிரேக்கரும் தமிழ்மொழியைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். சீனாவுக்கும் தமிழகத்திற்கும் பொ.ஆ.மு. 2 ஆம் நூற்றாண்டு முதலே வணிக உறவு நிலவியிருக்கிறது. பெலியட் கூற்றின்படி பொ.ஆ.மு. 2 ஆம் நூற்றாண்டு முதல் சீனாவிற்கு தமிழ் நாட்டின் காஞ்சிபுரத்துக்கும், தொடர்பு இருந்தது உறுதியாகிறது.

சீனக் காசு

அக்காலக் கட்டத்தைச் சேர்ந்த சீனக் காசுகள் ஓலையக் குன்னம், (பட்டுக்கோட்டை), விக்ரமம், தளிக்கோட்டை போன்ற பகுதிகளிலிருந்து வெளிக்கொணரப் பெற்றுள்ளன. ஓலையக் குன்னத்திலிருந்து 323 காசுகள் கிடைத்துள்ளன. (இவற்றில் பொ.ஆ.மு. 142 மற்றும் பொ.ஆ.மு. 126 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்பட்ட காசுகள் அடங்கும்) விக்ரமம் (பட்டுக்கோட்டை) பகுதியில் கிடைத்த 20 காசுகள் கி.பி. 713க்கும் கி.பி. 1241க்கும் இடைப்பட்ட காலத்தில் வெளியிடப்பட்டவையாகும். தளிக்கோட்டையில் (மன்னார்குடி) கிடைத்த 1822 காசுகள் பொ.ஆ. 1260 – 1268 முடிய உள்ள காலத்தைச் சேர்ந்தவையாகும்.

பொ.ஆ. 8 ஆம் நூற்றாண்டில் சீன அரசரின் வேண்டுகோளுக்கிணங்கி சீன வணிகர்களுக்காகப் பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மன், நாகப்பட்டினத்தில் புத்த ஸ்தூபி ஒன்றை அமைத்தான் என்று அறிய முடிகிறது. இது பிற்காலத்தில் சீனக் கோயில் என்று அழைக்கப்பட்டுள்ளது.

சோழர்கள் ஆட்சியின் பொழுதும் சீன நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் வணிகத் தொடர்பு இருந்துள்ளது என்பதை பொ.ஆ. 10 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரையிலான சீனர்களது காசுகள் மற்றும் பீங்கான், பானை ஓடுகள் தமிழ்நாட்டில் கிடைத்திருப்பதைத் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை கொற்கையிலும், திரு.ச.செல்வராஜ் தலைமையில் கங்கை கொண்ட சோழபுரத்திலும் மேற்கொண்ட அகழாய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. மேலும் தரங்கம்பாடி (நாகப்பட்டினம்), பெரியபட்டினம் (இராமநாதபுரம்), அரிக்கமேடு போன்ற பல இடங்களில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மற்றும் இந்திய தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வுகளிலும் பல சீன நாட்டுக் குடுவைகள் மற்றும் பானை ஓடுகள் கிடைத்துள்ளன. அண்மையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையினர் மேற்கொண்ட அகழாய்விலும் சீனப் போர்சிலின் (porcelain) பானை ஓடுகள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே தமிழகத்துடனான சீனரது வணிக உறவு பொ.ஆ.மு. 200 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி 15 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து இருந்துள்ளதை இக்காசுகள் கொண்டு அறியலாம்.

பண்டைய கொங்கு நாட்டில் இன்றைய ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்தில் நொய்யல் ஆற்றின் வடகரையில் கொடுமணல் அமைந்துள்ளது

கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்
பந்தர் பயந்த பலர் புகழ் முத்தம்

என்னும் பதிற்றுப்பத்து (74:5-6) சங்க இலக்கியக் குறிப்புகளிலிருந்து இப்பகுதி சங்ககாலத்தில் பல்வேறு வெளிநாட்டினர் வந்து சென்ற சிறப்புப் பெற்ற பன்னாட்டு வணிகத் தலமாக (பந்தர்) இருந்தது என்பதை அறிய முடிகிறது

கொடுமணல் அகழாய்வில் இரும்புக் கருவிகளான கத்தி, வாள், ஈட்டி, கேடயம், மணிகள் (beads), அங்கவடி (horse-stirrups) என ஏராளமாகக் கிடைத்துள்ளன. குதிரையின் அங்கவடி கிடைத்துள்ளமை குதிரை அக்கால வணிகத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்ததை வெளிப்படுத்துகிறது. மத்திய தரைக்கடல் பகுதிகளிலிருந்து கடல்வழியாக குதிரைகள் ஏராளமாக தமிழகம் வந்திறங்கியதைப் பட்டினப்பாலை (185) குறிப்பிடுவது இங்கு ஒப்பு நோக்கத்தக்கதாகும். கார்னீலியன் (carnelian), அகேட் (agate) ஜாஸ்பர் (jasper) பெரில் (beryl), பளிங்கு (quartz), லாபியஸ் லசுலி (Lapius Lajuli), போன்ற அரிய கற்களால் செய்யப்பட்ட பல்வேறு வகைகளைச் சேர்ந்த மணிகள் (beads) ஆயிரக்கணக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை கொடுமணல் அக்காலத்தில் ஒரு பெரிய தொழிற்கூட நகரமாக (industrial city) இருந்திருக்கிறது என்பதைப் புலப்படுத்துகிறது. அக்காலத்தில் ரோமானியர் பிரியமுடன் பயன்படுத்திய அரிய கல் வகைகளாக இ.எச்.வார்மிங்டன் (warmington,E.H.,) அவர்தம் நூல் The commerce between the Roman Empire and India (1948)-இல் குறிப்பிட்டுள்ளவையாவும் கொடுமணல் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். கருப்பு-சிவப்பு, கருப்பு நிறம் கொண்ட சங்ககால மண்கலங்களுடன் ரோமானிய மண்கலங்களான அரிட்டெய்ன் மற்றும் ரூலெட் பானை ஓடுகளும் கலந்து காணப்படுவது தமிழ்ப் பண்பாட்டுடன் யவனப் பண்பாடு கலந்து காணப்படுவதைக் காட்டுகிறது. 

அக்காலத் தமிழ்ப் பண்பாட்டோடு பிராகிருத மொழி பேசிய மக்களின் கலப்பு இருந்ததற்கான பல சான்றுகளும் (காட்டாக: நிகம, விஸாகீ) பானை எழுத்துப் பொறிப்புகளின் வாயிலாக வெளிப்படுவதைக் காணமுடிகிறது. இது இப்பகுதியினுடன் பிறநாடுகளைச் சேர்ந்தவர்கள் வணிக நிமித்தமாகக் கலந்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது.

பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் வணிக முறைமைகளை மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் விரிவாக ஆய்வு செய்துள்ளார். பாடலிபுரம், சாவகம், மலேயா, பர்மா, இலங்கை, அரபு நாடுகள், எகிப்து, உரோம் ஆகிய பிற பகுதிகளுடன் தமிழர்கள் கொண்டிருந்த வணிக உறவை இந்நூல் மூலம் அறிய முடிகிறது. ‘சாத்து’ எனப்படும் வணிகக் குழுக்கள் மேற்குறித்தப் பகுதிகளுக்குச் சென்று வணிகம் செய்தனர். பேரா. நொபுரு கரோஷிமா தலைமையில், தொல்பொருள் துறைசேர்ந்த அறிஞர்கள் பலர், தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வணிகச் சாத்துகள் தொடர்பான பல்வேறு கல்வெட்டுக்களை அண்மையில் கண்டறிந்துள்ளனர். வணிகம் செய்தவர்கள் யார்? அவர்களுக்கு சமூகத்தில் கொடுக்கப்பட்ட மரியாதை எவ்வகையில் அமைந்திருந்தது? ஆகியவை குறித்த பல்வேறு விவரங்களையும் அறிய முடிகிறது.

திணை சார்ந்த வாழ்க்கை முறை பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நடைமுறையில் இருந்ததை அறிகிறோம். இவர்களிடத்தில் பண்ட மாற்று முறையே பெரிதும் நடைமுறையில் இருந்ததைக் காணமுடிகிறது. இம்முறைமை நடைமுறையில் இருந்தபோதே காசுகளும் புழக்கத்தில் இருந்ததை மயிலை சீனி. குறிப்பிடுகிறார். இதன் மூலம் ஒரே சமயத்தில் இரண்டுமே நடைமுறையில் இருந்ததை அறிகிறோம். அண்மைக் காலத்தில் கிடைத்துள்ள சங்க காலக் காசுகள் இதனை உறுதிப் படுத்துகின்றன.

வணிகத்தை மேற்கொண்டவர்கள் எவ்வகையான போக்குவரத்தைக் கைக்கொண்டிருந்தனர் என்பதும் முக்கியமாகும். கோவேறு கழுதைகள், குதிரைகள், மாட்டுவண்டிகள், கழுதைகள் ஆகிய பிற புழக்கத்தில் இருந்ததை அறிய முடிகிறது. தரை வாணிகம் புழக்கத்தில் இருந்த காலத்தில், கடல் வாணிகமும் நடைமுறையில் இருந்தது.. பசிபிக் கடலில் உள்ள பல்வேறு தீவுகளுக்கும் வணிகம் நிமித்தம் பயணம் செய்திருப்பதை மயிலை சீனி. உறுதிப்படுத்துகிறார். இதன் மூலம் ஆழ்கடல் பகுதிகளுக்கும் சென்றிருப்பதை அறியமுடிகிறது.

அரபு நாட்டினர், யவணர், சாவக நாட்டினர், ஆகிய பிறர் தமிழ்நாட்டிற்கு வணிகத்திற்காக வருகைபுரிந்தனர். இதற்காக பல்வேறு துறைமுகங்களும் உருவாக்கப்பட்டன. குமரித் துறைமுகம், கொல்லந்துறை துறைமுகம், எயிற்பட்டின துறைமுகம், அரிக்கமேடு துறைமுகம், காவிரிபூம்பட்டின துறைமுகம், தொண்டித் துறைமுகம், மருங்கூர்ப் பட்டின துறைமுகம், தொண்டி, முசிறி துறைமுகங்கள், இலங்கையில் பல இடங்களில் இருந்த துறைமுகங்கள் எனப் பல்வேறு இடங்களில் துறைமுகங்கள் இருந்ததைஅறிய முடிகிறது. பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் காணப்படும் வணிகம் தொடர்பான செய்திகள், சர்வதேச தொடர்புள்ள நாகரிகம் மிக்க சமூகமாக தமிழ்ச் சமூகம் இருந்ததை உறுதிப்படுத்துகிறது.

வணிகக் குழுக்கள்

கல்வெட்டுகளில் பல்வேறு வணிகக் குழுவினர் பெயர்கள் காணப்படுகின்றன. நானாதேசி, திசையாயிரத்து ஐநூற்றுவர், மணிக்கிராமத்தார், ஆயிரவர், பன்னிரண்டார், இருபத்துநான்கு மனையார், நகரத்தார், வளஞ்சியர், அஞ்சு வண்ணம், சித்திரமேழிப் பெரியநாடு என அவர்கள் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. நானாதேசி என்போர் எல்லா நாடுகட்கும் சென்று வணிகம் செய்வோர். திசையாயிரம் என்பது வணிகர் செல்லும் எல்லாத் திசைகளும் என்று பொருள்படும். ஐநூற்றுவர் என்பது ஐந்நூறு வணிகர்களைக் குறிக்கும்.  கல்வெட்டுகள் அவர்களைப் பஞ்சசதவீரர் என்று கூறுகின்றன. மணிக் கிராமத்தார் என்னும் வணிகக் குழுவினர் பல ஊர்களில் இருந்துள்ளனர். 'கொடும்பாளூர் மணிக்கிராமத்தார்' என்போர் அவர்களில் ஒருவர். மணிக்கிராமம் என்பது வணிகர்க்குரிய பட்டம் என்று ஒரு கல்வெட்டால் அறிகிறோம். 'இரவி கொற்றனாகிய சேரமான் லோகப்பெரும் செட்டிக்கு மணிக்கிராமப்பட்டம் கொடுத்தோம்' என்பது ஒரு கல்வெட்டுத் தொடர். ‘அஞ்சு வண்ணம்' என்பது இசுலாமிய வணிகக்குழு என்பர். வெளிநாட்டில் இருந்த தமிழ்வணிகர் நலன் காக்கவே முதலாம் இராசேந்திரன் கடாரத்தின்மீது படையெடுத்தான் என்பர்.

வணிகக் குழுக்கூட்டம்

பல ஊர்களில் வணிகர்கள் கூட்டம் கூடியதைப் பல கல்வெட்டுக்கள் கூறுகின்றன. அக்கூட்டத்தில் கூடியவர்கள் பற்றிய விபரத்தைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. ஈரோடு மாவட்டம் சர்க்கார் பெரியபாளையத்திலும், சிவகங்கை மாவட்டம் பிரான்மலையிலும் கி.பி. 13ஆம் நூற்றாண்டில் பெரும் வணிகக் கூட்டங்கள் கூடியுள்ளன. அவர்களைப் பின்வருமாறு கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

(1) நான்கு திசை சமஸ்தலோக பதினெண் விஷயத்தார்,

(2) ஏறுசாத்து, இறங்கு சாத்து விளங்கு திசையாயிரத்து ஐநூற்றுவர்,

(3) நாடு, நகரங்களில் திசைவிளங்கு திசையாயிரத்து ஐநூற்றுவர்,

(4) கேரளசிங்க வளநாட்டு அருவிமாநகரமான குலசேகரபட்டினத்து நகரத்தார்

(5) திருக்கோட்டியூர் மணியம்பலத்து நகரத்தார்.

(6) ஐம்பொழில் வளநாட்டு கல்வாயல் நாட்டு சுந்தரபாண்டியபுரத்து நகரத்தார்

(7) மண்டலிகள் கம்மரப் பெருந்தெரு நகரத்தார்

(8) கருவூர், கண்ணபுரம், பட்டாலி, தலையூர், இராசராசபுரம், கீரனூர் உள்ளிட்ட கொங்கு நகரத்தார்

ஆகியவர்களைப் பிரான்மலைக் கல்வெட்டுக் கூறுகிறது.

சித்திரமேழி

வணிகர்குழுக் கூட்டம் பெரும்பாலும் ‘சித்திரமேழிப் பெரியநாட்டார் சபை' என்று கூறப்படும். வணிகர் குழுக் கூட்டம் பற்றிய கல்வெட்டுகளில் வணிகர்களுக்குரிய தனி மெய்க்கீர்த்தி கூறப்பட்டிருக்கும்.

தென்தமிழ்வடகலை தெரிந்துணர்ந்து
நீதிசாத்திர நிபுணர்ஆகி
இன்சொல்லால் இனிதளித்து
வன்சொல்லால் மறங்கடிந்து
செங்கோலே முன்னாகவும்
சித்திரமேழியே தெய்வமாகவும்
செம்பொற்பசும்பையே வேலியாகவும்
உன்னியதுமுடிக்கும் ஒண்டமிழ்வீரர்
வாட்டம் இன்றிக் கூட்டம் பெருகி'

கூடியதாக அவர்கள் மெய்க்கீர்த்திப் பகுதிகள் உள்ளன. அவர்கள் ஐம்பொழில் பரமேசுவரியை வணங்குபவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

பண்டைய இந்திய துணைக் கண்டம்

பண்டைய இந்திய துணைக் கண்டத்தில் பல நூற்றுக் கணக்கான சிற்றரசர்களும், பேரசர்களும் ஆண்ட பகுதிகளாக பிரிந்து இருந்த நிலையில் தூதுவ உறவுகள் மூலமாகவும், திருமண உறவுகள் மூலமாகவும் அவற்றிகிடையிலான உறவுகள் நிலைபடுத்தப்பட்டுள்ளன.

கி.மு.317 இல் சந்திரகுப்த மௌரியருக்கும், அலெக்ஸாண்டரின் தளபதியாயிருந்து பின் கிரேக்க அரசனான செல்யூகஸ் நிகேடருக்கும் இடையே தூதுவர்கள் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளன.

பழங்கால கிரேக்கம்:

முற்கால கிரேக்க நாட்டில் இருந்த பல்வேறு நகர அரசுகளுக்கு இடையிலான அரசியல் உறவுகள் குறித்த கிரேக்க அறிஞர்களின் அடிப்படைக் கோட்பாடுகள் பின்னாளைய சர்வதேச சட்டத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  ஆனால், இந்தக் கோட்பாடுகள் யாவும் கிரேக்க அரசுகளுக்கு மட்டுமே பொருந்தக்கூடியதாக இருந்தது. கிரேக்கர்கள் அல்லாத பிற இன அரசுகளை காட்டுமிராண்டிகளாக கருதினர்.

பழங்கால ரோம்

பல நாடுகளை வென்று தன் ஆட்சிக்கு உட்படுத்தியிருந்த பழங்கால ரோமப்பேரரசில் ரோமானியர்களுக்கும் பிற நாட்டவருக்கும் இடையிலான சட்ட உறவு பற்றிய கோட்பாடுகள் உருவாக்கப்பட்டிருந்தன. அவை நாடுகளின் பொதுச் சட்டம் (Jus gentium) எனப்பட்டன. இதுபோன்ற ரோமானீயர்களின் கருத்தாக்கங்கள் பின்னாளில் சர்வதேச சட்டம் உருவாகும் போது ஒப்புமை மூலம் எடுத்துக் கொள்ளப்பட்டன. உதாரணமாக ரோமானியர்களின் குடியரசு (Dominion)  என்னும் கருத்தாக்கம் பின்னாளில் ஆள்நில இறையாண்மை எனும் கருத்தாக்கமாக வளர்ச்சியடைந்தது. அது போல முகமை (Agency) பற்றிய கருத்தாக்கமாக தூதுவ முகவர்களின் மரபாக வளர்ச்சி பெற்றது. சர்வதேச சட்டத்திற்கு ரோமானிய சட்டமும் துணை புரிந்துள்ளது என்றால் மிகையாகாது.

II. மத்திய காலம் (Middle Age)

மோசஸ் மெய்மொனிடஸ்

மத்திய ஐரோப்பாவில் பழைய கிரேக்க நகர அரசுகள் அழிந்து ரோமின் கத்தோலிக்க மதகுருவான போப்பின் தலைமை அதிகாரத்திற்குக் கட்டுப்பட்ட கிறிஸ்தவ அரசுகள் தோன்றின. கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் ரோமானியப் பேரரசு வீழ்ச்சியடைந்தபின்னர் 11 ஆம் நூற்றாண்டு வரை ஏறத்தாழ 500 ஆண்டுகள் ஐரோப்பா கண்டம் தொடர்சியான போர்களால் சீரழிந்தது. இக்கால கட்டத்தில் இயற்கை அட்டமும் மதக் கோட்பாடுகளும் கலந்த கலவையான சட்டக் கோட்பாடுகள் உருவாகின. மோசஸ் மெய்மொனிடஸ் (Moses Maimonides) (1135- 1204) புனித தாமஸ் அக்யுனாஸ் (1224-1274) போன்ற மதக் கோட்பாட்டாளர்களே சட்டவியலாளர்களாகவும் விளங்கினர். இவர்கள் உருவாக்கிய

புனித தாமஸ் அக்யுனாஸ்

மதக் கோட்பாடுகளின் அடிப்படையிலான சட்டமே இறையாண்மை நாடுகளுக்கிடையிலான அரசியல் உறவிற்கு பொருந்தும் இயற்கை சட்டமாக இருந்தது.

III. ஐரோப்பாவில் தேசிய அரசுகள் உருவான காலம் (15, 16 நூற்றாண்டுகள்) (Formation of Nation Sates of Europe)

12 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 13 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐரோப்பா முழுவதும்

தேசிய அரசுகள் தோன்றின. இந்த வளர்ச்சிப் போக்கு 15 ஆம் நூற்றாண்டில் முழுமை பெற்றது எனலாம். இந்த காலகட்டத்தில் ஐரோப்பா கண்டம், எண்ணற்ற சுதந்திரமான தேசிய அரசுகளாக பிரிந்திருந்தது. இந்த இறையாண்மை பெற்ற நாடுகளுக்கிடையிலான அரசியல் உறவுகளை ஒழுங்குபடுத்த பொதுவான சட்டம் ஒன்றின் தேவை எழுந்தது. அத்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஐரோப்பாவில் மெல்ல உருவானதே இந்த சர்வதேசச் சட்டமாகும். இந்த காலகட்டத்தில் உருவான அரசுகள், கத்தோலிக்க மத குருவான போப்-பின் கட்டுப்பாடில் இருந்தது.

விடுபட்ட சுதந்திர அரசுகளாக இருந்ததால், மீண்டும் பழைய கிரேக்க, ரோமானிய காலங்களில் நிலவிய இயற்கை சட்டம் புத்துயிர் பெற்றது. மதத்திலிருந்து சட்டம் விடுபட்ட சூழ்நிலையானது சர்வதேசச் சட்டத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது.

ஜீன் போடின்

இக்கால கட்டத்தில் பிரான்ஸ் நாட்டின் ஜீன் போடின் (Jean Bodin), இத்தாலியின் மாக்கியவல்லி, இங்கிலாந்திம் ஹோம்ஸ் போன்ற சட்டவியலாளர்கள் அரசின் இறையாண்மை மற்றும் இயற்கைச் சட்டம் பற்றிய மதச் சார்பற்ற கண்ணோட்டங்களை முன்வைத்தனர்.

IV நாடுகளிடையே வணிகம் பெருகிய காலம் (17-18 ஆம் நூற்றாண்டுகள்

(Period of raising Inter State Trade)

15 மற்றும் 16-ஆம் நூற்றாண்டுகளில் மதத்தில் இருந்து விடுபட்டு உருவான ஐரோப்பாவின் தேசிய அரசுகளின் ஆட்சியில் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்ததன் விளைவாக மற்ற நாடுகளுக்கான ஏற்றுமதி

வணிகம் பெருகியது. ஒவ்வொரு நாட்டின் வணிக நகரங்களும் தங்கள் நகர வணிகர்களின் கூட்டமைப்புகளை (leagues) உருவாக்கின. வணிகர்களுகு இடையில் எழும் தகராறுகளை தீர்க்க வணிகச் சட்டங்கள் (Commercial laws) உருவாயின. நாடுகளுக்கு இடையிலான வணிகச் சிக்கல்களை தீர்ப்பதற்காக சர்வதேச சட்ட விதிகளும் சர்வதேச வழக்காறுகளும் உருவாகி வளர்ந்தன. இக்காலகட்டமே சர்வதேசச் சட்டத்தின் துவக்க காலம் என்றால் மிகையாகாது.

ரோமானியப் பேரரசின் வீழ்ச்சியுடன், கடல் வணிகம் இக்காலத்தில் மீண்டும் புத்துயிர் பெற்றது. தங்கள் வணிகத்திற்காக போர்ச்சுகல், டச்சு, ப்ரஞ்சு, இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு புதிய கடல் வழிகளை கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டின. இந்தியாவிற்கான கடல் வழி கண்டுபிடிக்கப்பட்டதன் காரணமாக, இந்த ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தங்கள் வாணிபத் தளங்களை அமைத்தனர். கடல் வாணிபம் பெருகியதால் சர்வதேச வழக்காறுகள் உருவாயின. இக்கால கட்டத்தில் தோன்றிய சட்டவியலாளர்களில் ஹியூஹ் க்ரோஷியஸ் (Hugo Grotius) முதன்மையானவர் ஆவார்.

க்ரோஷியஸ் இன் பங்களிப்பு

ஹியூஹ் க்ரோஷியஸ்

நவீன இயற்கைச் சட்டத்திற்கு அடித்தளம் இட்டவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹியூஹ் க்ரோஷியஸ் ஆவார். இவர் வாழ்ந்த காலம் நாடுகளுக்கிடையிலான வணிகம் பெருகிய காலமாகும்.

எனவே அவர் நாடுகளுக்கிடையிலான வணிக ஒப்பந்தங்கள், உடன்பாடுகளை மதித்து நடக்க வேண்டியதும் இயற்கைச் சட்டங்களில் ஒன்று என்றார். அவர் இயற்கைச் சட்டப்படி கடல் எந்த நாட்டின் ஆளுகைக்கும் உட்படாத ஒன்று என்றார்.

எனவே, கடல் வணிகம் செய்யும் உரிமை அனைத்து நாடுகளுக்கும் பொதுவான உரிமை என்ற சர்வதேச சட்ட நிலை ஏற்பட்டது. க்ரோஷியஸ் 1625-இல் வெளியிட்ட போர் மற்றும் அமைதி சட்டம் (Law of War and Peace) எனும் நூலே, நாடுகளுக்கிடையிலான பல்வேறு வழக்காற்று விதிகளை ஒழுங்குபடுத்தித் தொகுத்து வெளியிடப்பட்ட முதல் நூலாகும். இந்நூலில், சர்வதேசச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விளக்கியுள்ளார்.

வெஸ்ட்பாலியா அமைதி உடன்படிக்கை (1648)

(Peace treaty of Westphalia)

ஐரோப்பிய நாடுகளுக்கிடையே நடந்து வந்த 30 ஆண்டுகால போரை, வடமேற்கு ஜெர்மனி பகுதியிலுள்ள வெஸ்ட்பாலியா என்ற இடத்தில் 24, அக்டோபர்,1648 இல் நடைபெற்ற வெஸ்ட்பாலியா அமைதி உடன்படிக்கை சர்வதேச சட்டத்தின் முக்கிய மைல் கல்லாக அமைந்தது.

வர்துன் உடன்படிக்கை (Treaty of Verdun)

கி.பி.843-இல் கரோலிஞ்சிய(Caraolingian) பேரரசை பகிர்ந்து கொள்ள லூயி (Louis of Pious) என்பவருடைய மூன்று புதல்வர்கள் செய்து கொண்ட ஒப்பந்தம் சர்வதேச சட்ட வடிவிற்கு ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறது.

ஏகாதிபத்தியம் மற்றும் காலனிகள் காலம்

(Period of Imperial and Colonies)

இக்காலகட்டத்தில் மேலை ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட வணிகப்போட்டி மற்றும் நாடு பிடிக்கும் போட்டிகளின் காரணமாகவும் அதனால் ஏற்பட்டபோர்களின் காரணமாகவும் சர்வதேச சட்டத்தின் வளர்ச்சி துரிதமானது. 1872 இல் ஏற்பட்ட அலபாமா தீர்வுக் கோருரிமையை (Albama Award Claim, 1872) தொடர்ந்து சர்வதேசத் தகராறுகளை தீர்ப்பாயங்கள் மூலம் தீர்த்துக் கொள்ளும் வழக்கம் அதிகரிக்கத் தொடங்கியது.

நானாட்டு உடன்படிக்கை (Quardruple Alliance)

1718-இல் இங்கிலாந்து பிரான்ஸ், ஆஸ்திரியா, ஹாலந்து ஆகிய நாடுகளுக்கிடையே ஹானோவர் (Hanoever) வம்சத்துக்கு இங்கிலாந்தும், பூர்பான் (Bourbon) வம்சத்துக்கு பிரன்ஸும் கிடைத்திட ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது.

பாரிஸ் உடன்படிக்கைகள் (Paris treaties)

1783, செப்டம்பர். 3 பிரிட்டனுக்கும் அமெரிக்க கமிஷ்னர்களுக்குமிடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி அமெரிக்காவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. ஏழாண்டு போரின் முடிவில் 1793, பிப்ரவரி, 10 அன்று பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளுக்கிடையே ஓர்  உடன்படிக்கை ஏற்பட்டது.

30, மே, 1814 இல் ஒரு ஒப்பந்தமும், 20, நவம்பர், 1815-இல் உறவுக்நாடுகளுக்கும் பிரான்ஸுக்குமிடையே ஏற்பட்டது. கிரைமியா போருக்கு பின் 30, மார்ச், 1956-இல் ஒரு ஒப்பந்தமும் ஏற்பட்டது.

1815-இல் நடைபெற்ற வியென்னா மாநாடு சர்வதேசச் சட்டமியற்றலின் தொடக்கமாக அமைந்தது. ஏனெனில் இம்மாநாட்டில் முதன்முதலாக தூதுவப்பிரதிநிதிகள், சர்வதேச ஆறுகளின் போக்குவரத்து போன்ற விதிகள் ஏற்பட்டன.

1856-இல் நடைபெற்ற கடல் பற்றிய பாரிஸ் மாநாடு கடல்போரில் ஈடுபடும் நாடுகள் கடைபிடிக்க வேண்டிய விதிகள் வகுக்கப்பட்டன.

1864-இல் நடைபெற்ற ஜெனிவா மாநாடு தரைப்போரில் காயமடைந்த உடல் நலம் இழந்தவர்களின் நல வாழ்விற்கு வழிவகை செய்தது.

1907-ஹேக் மாநாடு நாடுகளுக்கிடையிலான போர் மனிதத் தன்மையுடன் இருக்க வலியுறுத்தியது.

VI முதல் உலகப்போர் மற்றும் அதன்பிந்தய காலம் (1914-1934)

(First World War and thereafter)

முதல் உலகப் போர் சர்வதேசச் சட்டம் மிகவும் பலவீனமானதொரு சட்டம் என்று நிரூபித்தது. வருங்காலத்தில் இதுபோன்ர போர் நிகழாமல் தடுப்பதற்கு 1919-ஆம் ஆண்டின் நேசநாடுகளுடன் ஜெர்மனி செய்துகொண்ட வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் படி சர்வதேச சங்கம் (League of Nations) அமைக்கப்பட்டது. 

நாடுகள் தங்களுக்கிடையிலான தகராறுகளை சட்ட பூர்வமாக தீர்த்துக் கொள்ளவதற்காக நிரந்தர சர்வதேச நீதிமன்றம் (Permanent Court of International Justice) ஏற்படுத்தப்பட்டது.

போர்களைத் தவிர்ப்பதற்கு 1925-இல் ஏற்படுத்தப்பட்ட லொகார்னோ உடன்படிக்கை (Treaty of Locarno)   மற்றும் 1928-இல் ஏற்படுத்தப்பட்ட கெல்லாக்-பிரையன் உடன்படிக்கை (Kellog-Briand or Paris pact), 1929-இல் நடைபெற்ற ஜெனிவா மாநாடு போன்றவற்றை குறிப்பிடலாம்.

VII இரண்டாம் உலகப் போரும், அதன் பிந்தய காலமும் (1934-)

(Second World War and thereafter)

1945-இல் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த போது உலகம் பல்வேறு சர்வதேசப் பிரச்சனையை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. காலனி நாடுகளின் விடுதலை, நாடுகளின் எல்லைகளை திருத்துதல், அகதிகளின் பாதுகாப்பு, போரில் தோற்ற நாடுகளின் ஆள்நிலை எல்லைகளின் ஆட்சி நிர்வாகம் போன்றவை அவற்றுள் முக்கியமானவை. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பராமரிப்பதில் சர்வதேச சங்கம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அதைக் காட்டிலும் கூடுதல் அதிகாரங்களுடன் 1945-இல் ஐக்கிய நாடுகள் சபை (United Nations) உருவாக்கப்பட்டது. அதைப் பற்றி பின்னால் விவரமாகப் பார்ப்போம்.

தொடரும்...

Lr.C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com