இன அரசியல்-18: ஆர்மேனிய, யூத இனப்படுகொலைகள்

இன அரசியல்-18: ஆர்மேனிய, யூத இனப்படுகொலைகள்

ஆர்மேனியன் இனப்படுகொலை - Armenian Genocide

ஒட்டோமான் பேரரசு (Ottoman Empire) என்பது துருக்கியர்களால் ஆளப்பட்ட ஒரு பேரரசு ஆகும். இது துருக்கியப் பேரரசு எனவும் அழைக்கப்படுகிறது. 1915-1916 ஆம் ஆண்டுகளில் ஒட்டோமான் பேரரசு பிளவுண்டபோது 1.5 மில்லியன் பேர் வரையில் கொல்லப்பட்டனர் என ஆர்மேனியா தெரிவிக்கிறது. இப்படுகொலைகளை இனப்படுகொலை அல்ல எனவும், இறந்தோர் எண்ணிக்கை மிகவும் குறைவு எனவும் துருக்கி கூறுகிறது.

ஆர்மேனிய இனப்படுகொலை 1915 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் ஆரம்பமானது. இந்நாளில் ஆர்மீனியக் கல்விமான்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் 250 பேரை ஒட்டோமான் ராணுவத்தினர் கொன்ஸ்டண்டீனப்போல் நகரில் கைது செய்தனர். அதன் பின்னர் ராணுவத்தினர் ஆர்மீனியப் பொதுமக்களை அவர்களின் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றி பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள பாலைநிலத்துக்கு (தற்போதைய சிரியா) நடைப்பயணமாக அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு உணவோ, நீரோ வழங்கப்படவில்லை. வயது, மற்றும் பால் வேறுபாடின்றிப் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பெரும்பான்மையான ஆர்மீனியர்கள் புலம்பெயர்ந்து பல நாடுகளில் வசிப்பது இப்படுகொலைகளில் இருந்து தப்பியவர்களே. 

ஒட்டோமான் பேரரசுக் காலத்தில் ஆர்மீனியர்களை வலிந்து திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட படுகொலை ஆகும். இது முதலாம் உலகப் போருக்குப் பின்னர் நிகழ்ந்தது. பெரும் படுகொலைகளாகவும், சாவுக்கு இட்டுச்சென்ற வெளியேற்றங்களாகவும் இது நிகழ்ந்தது. இதில் ஒன்றில் இருந்து ஒன்று அரை மில்லியன் ஆர்மேனியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இக்காலப்பகுதியில் ஆர்மீனியர்களைத் தவிர அசிரியர்கள், மற்றும் கிரேக்கர்களும் ஒட்டோமான் பேரரசினால் படுகொலை செய்யப்பட்டனர்.

ஒட்டோமான் பேரரசின் பின்னர் ஆட்சிக்கு வந்த தற்போதைய துருக்கிக் குடியரசு இந்நிகழ்வை இனப்படுகொலை எனக் கூறுவதை மறுத்து வருகிறது. அண்மைக் காலத்தில், இந்த இனப்படுகொலைகளை அங்கீகரிக்கப் பல நாடுகளும் அமைப்புகளும் துருக்கியைக் கோரி வருகின்றன. இது வரையில் 20 நாடுகள் இக்காலப்பகுதியில் இடம்பெற்ற படுகொலைகள் இனப்படுகொலைகளே என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன.

யூதர் இனப்படுகொலை (Holocaust)

யூதர் இனப்படுகொலை எனப்படும் பெரும் இன அழிப்பு என்பது இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், 6 மில்லியன் ஐரோப்பிய யூதர்கள் ஜெர்மனியில் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கப் பயன்படும் ஆங்கிலச் சொல்லான ஹாலோகோஸ்ட் (Holocaust) என்பதற்கு இணையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது, இதனை சோகா என்றும் குறிப்பர். இது அக்காலத்தில் ஜேர்மனியில் ஆட்சியில் இருந்த, அடொல்ஃப் ஹிட்லரின் தலைமையிலான தேசிய சோசலிச ஜேர்மன் தொழிலாளர் கட்சியின் இன அழிப்புக் கொள்கையின் ஒரு பகுதியாக  இடம்பெற்றது. யூதர்கள் தவிர வேறும் பிற இனத்தவர்களும், பிரிவினரும் கூடப் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களுள், ஜிப்சிகள், சோவியத் ஒன்றியத்தவர் மற்றும் சோவியத் போர் கைதிகள், பொதுவுடமைவாதிகள், போல் இனத்தவர், பிற சிலாவிய மக்கள், ஊனமுற்றோர், தன்னினச் சேர்க்கையாளர், அரசியல் எதிரிகள், மாறுபட்ட சமயக்கருத்துக் கொண்டவர்கள், யூஹோவா சாட்சியாளர் என்போரும் அடங்குவர். பல அறிஞர்கள் பெரும் இன அழிப்பு என்னும் போது மேற்படி எல்லாப் பிரிவினரையும் சேர்த்துக் கொள்ளாமல் யூதர்களின் படுகொலையை மட்டுமே குறிப்பர். ஜேர்மன் அரசு இதனை "யூதர் பிரச்சினைக்கான இறுதித் தீர்வு" என வர்ணித்தது. நாஸி ஜேர்மனியில் இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட எல்லாப் பிரிவினரதும் மொத்தத் தொகை 9 தொடக்கம் 11 மில்லியன் வரை இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இத்தொல்லைகளும், படுகொலைகளும் ஜெர்மன் அரசினால் பல படிகளில் நிறைவேற்றப்பட்டன. யூதர்களைக் குடிமக்கள் சமூகத்திலிருந்து விலக்கும் சட்டம் இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு நீண்ட காலத்துக்கு முன்னரே இயற்றப்பட்டது. வதைமுகாம்கள் அமைக்கப்பட்டு, அங்கே கொண்டு வரப்படுபவர்கள் களைப்பாலும், நோயாலும் இறக்கும்வரை அடிமைகளாக வேலை வாங்கப்பட்டனர். கிழக்கு ஐரோப்பாவில் புதிய பகுதிகளைக் கைப்பற்றிய ஜெர்மனி, சிறப்புப் படையணிகள் மூலம், யூதர்களையும், அரசியல் எதிரிகளையும் கொன்று குவித்தது. யூதர்களும், ரோமாக்களும் நெருக்கடியான பகுதிகளில் அடைத்து வைக்கப்பட்டுப் பின்னர் அங்கிருந்து சரக்குத் தொடர்வண்டிகள் மூலம் நூற்றுக் கணக்கான மைல்கள் தொலைவில் இருந்த கொலை முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பலர் வழியிலேயே இறந்து போயினர். எஞ்சியோர் நச்சுவாயு அறைகளுள் அடைத்துக் கொல்லப்பட்டனர். அக்கால ஜேர்மனியின் அதிகார அமைப்பின் ஒவ்வொரு பிரிவும் இக் கொலை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன. ஜெர்மனி ஒரு இனப்படுகொலை அரசாக விளங்கியது.

1941 இலிருந்து 1945 வரை, யூதர்கள் ஒரு இனப்படுகொலை மூலம் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டனர். இது ஐரோப்பாவின் பிற மக்களிடையே நடைபெற்ற அடக்குமுறை மற்றும் படுகொலை நிகழ்வுகளின் ஒரு பகுதியாக நிகழ்ந்தது. சுத்ஸ்டாப்பெல் ஒருங்கிணைப்பின் கீழ், நாட்சி கட்சியின் உயர் தலைமையின் வழிகாட்டல்களுடன், ஜெர்மன் அரசின் அதிகார மையத்தின் ஒவ்வொரு பகுதியும் ஜெர்மன் ஆக்கிரமிப்பு ஐரோப்பா முழுவதும் நடைபெற்ற பெரும் படுகொலைகளை நடத்துவதில் மற்றும் ஏற்பாடுகள் செய்வதில் ஈடுபட்டு வந்தது. இந்த நிகழ்வுகள் நாட்சி ஜெர்மனிக்குள், அதன் நேச நாடுகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதிகளிலும் நிகழ்ந்தது. பெரும் மனித உரிமை மீறல்களை நிகழ்த்தும் நோக்குடன் 42,500க்கும் மேற்பட்ட தடுப்பு முகாம் வசதிகள் பயன்படுத்தப்பட்டன. பெரும் இன அழிப்பு செயலில் ஈடுபட்டவர்களாக 200,000க்கும் அதிகமான நபர்கள் கணக்கிடப்பட்டுள்ளனர்.

இந்த இன அழிப்பை நடைமுறைப்படுத்துவது ஒவ்வொரு படியாக, "யூதர்களின் கேள்விக்கு இறுதியான தீர்வு" என்று கூறப்பட்ட அழிப்புக் கொள்கையையின் படி நிகழ்ந்தது. ஹிட்லர் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, ஜெர்மான் அரசு யூதர்கள் குடிமைச் சமூகத்திலிருந்து வெளியேற்றுவதற்கான சட்டங்களை நிறைவேற்றியது, அதில் குறிப்பிடத்தக்கது நியூரம்பெர்க் சட்டம் 1935. 1933 இல் தொடங்கி நாட்சிகள் வதை முகாம் வலைப்பின்னல்களை அமைக்கத் தொடங்கினர். 1939 இல் போர் தொடங்கிய பிறகு ஜெர்மானிய மற்றும் வெளிநாட்டு யூதர்கள் போர்கால முகாம்களில் கூட்டம் கூட்டமாக அடைக்கப்பட்டனர். 1941 இல் ஜெர்மன் கிழக்கில் புதிய பகுதிகளைக் கைப்பற்றிய பிறகு எல்லா யூத எதிர்ப்பு செயல்களும் அதிகமாகியது. சிறப்பு துணை ராணுவப் படையினரான ஈன்சாட்சுகுரூப்பன் ஓராண்டிற்குள் 2 மில்லியன் யூதர்கள் வரை பெரும் துப்பாக்கிச் சூடுகள் மூலம் படுகொலை செய்தனர். 1942 இன் நடுப்பகுதியில், பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து சரக்கு தொடருந்துகள் மூலம் வதை முகாம்களுக்கு கடத்தப்பட்டனர். பயணத்தின் கொடுமையைத் தாங்கி உயிர் பிழைத்தவர்கள் புகை அரங்குகளில் திட்டமிட்டு கொல்லப்பட்டனர். இது ஐரோப்பால் 1945 ஏப்ரல் – மே மாதம் இரண்டாம் உலகப்போர் முடிவு வரை தொடர்ந்தது.

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com