இன அரசியல்-20: போஸ்னிய, சூடான் - தர்ஃபுர் இனப்படுகொலை

இன அரசியல்-20: போஸ்னிய, சூடான் - தர்ஃபுர் இனப்படுகொலை

போஸ்னியா இனப்படுகொலை! (Bosnian genocide)


  
ஓட்டோமன், ஆஸ்திரியா, ஹங்கேரி, யூகோஸ்லாவியாவிடமிருந்து பிரிந்த நாடு போஸ்னியா ஆகும். போஸ்னியர்கள், செர்பியர்கள், குரேஷியர்கள் என மூன்று வகையான இன மக்கள் வாழ்ந்து வந்தனர். குரேஷிய அதிபருக்கும், போஸ்னிய அதிபருக்கும் ஓர் ஒப்பந்தத்தில் முரண்பாடு ஏற்பட, அங்கிருந்து தொடங்கியது இப்பிரச்னை. 

1995ம் ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி ஸ்லிப்ரெனிகா நகரை சுற்றி வளைத்த செர்பிய ராணுவம், முஸ்லிம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என தேடித்தேடி படு கொலைகளை அரங்கேற்றினர்.  போஸ்னியா மீது குரேஷியப் படையினர் 1993-ம் ஆண்டில் நடத்திய தாக்குதலில் 2,000 பேர் கொலை செய்யபட்டனர். 64 இஸ்லாமியர்களைக் கைது செய்து பேருந்தில் அடைத்து, தீவைத்துக் கொளுத்தினர். இதில் 56 பேர் இறந்தனர். செர்பிய ராணுவம் 1992-1995 காலகட்டத்தில் இரண்டு லட்சம் பேர் கொல்லப்பட்டனர். நான்கு லட்சம் பேர் காணாமல் போனார்கள்.

இந்தப் படுகொலையை சர்வதேச நீதிமன்றம் இனப்படுகொலை என அறிவித்தது. செரப்னிகா சம்பவங்களின் கொடுமைகளை கடந்த ஆண்டு அங்கு கண்டுபிடிக்கப் பட்ட கல்லறைகள் வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. இந்தக் கல்லறைகளிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட உடல்கள் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தியதில் 613 பேர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. செரப்ரெனிகாவில் உயிரோடு வாழ்ந்த நபர்களின் ரத்தத்தின் மாதிரிகளுடன் ஒப்பீடு செய்து உடல்களை அடையாளம் கண்டிருக்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள்.

போஸ்னியா முஸ்லிம் படுகொலை நடந்து 16வது ஆண்டு நினைவு தினம் செரப்னிகாவிற்கு அருகிலுள்ள போட்டோக்கரி என்ற இடத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.

ஆனால் சர்வதேச சமுதாயம் பதறித் துடித்துக் கண்ணீர் வடித்த போஸ்னியப் படுகொலை செர்பியர்களிடம் இன்னமும் எவ்வித தாக்கத்தையோ, குற்ற உணர்ச்சியையோ ஏற்படுத்தவில்லை. இதனை சுட்டிக் காட்டும் போஸ்னியாவின் முன்னாள் அதிபர் அலிஜா இஸ்ஸத்பெகோவிச்சின் மகனான பாசிர் அஸ்ஸத்பெகோவிச், "செரப்ரெனிகா கூட்டுப் படுகொலையின் உண்மையை செர்பிய மக்கள் இப்பொழுதும் புரிந்து கொள்ளவில்லை'' என்கிறார். போஸ்னியாவில் முஸ்லிம் இனப்படுகொலைகளை தலைமையேற்று நடத்திய ராதோவான்கராஜிச், ராட்கே மிலாடிச் ஆகியோரை செர்பிய மக்கள் வீரப் புருஷர்களாக கருதுகிறார்கள். படுகொலையை நியாயப்படுத்துகிறார்கள்.

அவர்களால் புரிந்து கொள்ள இயலாததுதான் இதற்குக் காரணம். அதே சமயம் போஸ்னிய முஸ்லிம்களுக்கோ செரப்ரெனிகாவின் கொடுமைகள் நெஞ்சை விட்டு அகலவில்லை. சரியாக 16 ஆண்டுகள் கழித்து - செரப்னிகாவில் படுகொலை செய்யப்பட்ட அந்த 613 பேர்களின் உடல்களை நல்லடக்கம் செய்து  தொழுகை நடத்தியுள்ளனர் போஸ்னிய முஸ்லிம்கள்.

ராட்கே மிலா டிக்

போஸ்னிய படுகொலையின் சூத்திரதாரியான ராணுவ தளபதி  ராட்கே மிலா டிக் (Ratko mladic) கைது செய்யப்பட்டு சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, போஸ்னிய போரின்போது இனப்படுகொலை மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்துள்ளதாக நிரூபிக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ள த ஹேக்கிலுள்ள ஐநா தீர்ப்பாயம் , மனித குலம் அறிந்திருக்கும் மிக கொடிய குற்றங்களின் பட்டியலில் இவருடைய குற்றங்கள் இடம்பெறுவதாக கூறியுள்ளது.

சூடான் - தர்ஃபுர் இனப்படுகொலை (Sudan Darfur genocide)


  
சூடான் - ஆப்ரிக்கா கண்டத்தில் மிகப் பெரிய தேசம். எகிப்து, சந்த், உகாண்டா மற்றும் மேலும் ஆறு நாடுகள் நடுவில் இருக்கும் தேசம். பக்கத்து நாடுகள் இரண்டு, மூன்று இருந்தாலே பிரச்சனை. இத்தனை நாடுகள் நடுவில் இருக்கும் சூடானுக்கு சொல்லவா வேண்டும். சூடானில் இருக்கும் தர்ஃபுர் மாநிலம் 60 லட்சப் பேர் மேல் வசிக்கிறார்கள். பக்கத்து நாட்டில் இருக்கும் பிரச்சனையை பலர் அகதிகளாக தர்ஃபுரில் அகதிகளாக வந்தார்கள். அங்குதான் அவர்களுக்கு சனி உச்சத்தில் இருப்பது தெரியாமல் போனது. எல்லா இனப்படுகொலையின் தொடக்கத்தில் கௌரவத் தோற்றத்தில் வந்துப் போகும் பிரிட்டன் இந்த இனப்படுகொலையிலும் வருகிறது. சூடானும் பிரிட்டனில் காலனி நாடாகத்தான் இருந்தது. 1956-ல் பிரிட்டனிடம் இருந்து விடுதலைப் பெற்ற சூடான், இரண்டு உள்நாட்டு யுத்தத்தை சந்திக்க நேர்ந்தது.
 
முஸ்லிம் அல்லாதவர்களும், அரபியர் அல்லாதவர்களும் ‘வெள்ளையர்கள்’ சென்ற பிறகு பெரும் வசதியுடனும், அரசியல் செல்வாக்கும், சமூகத்தில் நல்ல மதிப்புடன் இருந்தார்கள். குறிப்பாக, தெற்கு சூடானை விட வடக்கு சூடான் அவர்களின் ஆதிக்கம் தான் அதிகமாக இருந்தது. இரண்டு பகுதிக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வு…! இதுப்போதாதா… அரபிய அல்லாதவர்கள் மீதும், முஸ்லிம் அல்லாதவர்கள் மீதும் போர் தொடர்வதற்கு. வடக்கு சூடானுக்கும், தெற்கு சூடானுக்கும் முதல் உள்நாட்டுப் போர் தொடங்கியது.

சூடானின் வடக்கு, தெற்கு பகுதிகள் சண்டையில் ஈடுப்பட்டிருக்க, மேற்கு சூடானில் இருக்கும் ‘தர்ஃபுர்’ நிலத்தில் எண்ணெய் வளம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. எண்ணெய் கண்டுபிடித்ததில், வடக்கு, தெற்கு பிரச்னையில் மேலும் எண்ணெய் ஊற்ற உதவியாக இருந்தது. எப்படியோ ஒரு வழியாக 1972 உள்நாட்டு யுத்தம் முடிந்தது. இருந்தாலும் அந்த சந்தோஷம் நீண்ட நாள் நிலைக்கவில்லை. 1983ல் மீண்டும் உள்நாட்டு யுத்தம் (இரண்டாவது சூடான் யுத்தம்) வெடித்தது.

கிட்டதட்ட இருபது வருடங்களாக நடந்த இரண்டாவது உள்நாட்டு யுத்தத்தில், வடக்கு-தெற்கு சூடான் சேர்த்து 20 லட்சம் பேருக்கு மேல் இறந்தனர். 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை இழந்தனர். நாளுக்கு நாள் உயிர் சேதங்கள் அதிகமானதே தவிர குறைவதாக தெரியவில்லை. பலர் பக்கத்து நாடான சந்த் பகுதிக்கு அகதிகளாக சென்றனர். உள்நாட்டு யுத்தத்தில் ‘தர்ஃபுர்’ பகுதியிலும் தாக்குதல் நடந்தது. எல்லா இடங்களிலும் வன்முறை நடைபெற்றதால், குறிப்பிட்டு எந்த பகுதியிலும் வன்முறையை அடக்க கவனம் செலுத்தப்படவில்லை.

ஒரு வழியாக, வடக்கு – தெற்கு பிரச்னைக்கு 2005-ல் முடிவு ஏற்பட்டு அமைதிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டனர். அரசியல் ரீதியாக கூடுதல் அதிகாரத்தை தெற்கு சூடானுக்கு வழங்கப்பட்டதோடு மட்டும் இல்லாமல், தன்னிச்சையாக இயங்கவும் முடிவெடுக்கப்பட்டது.  ஜூலை 9, 2011 -ல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 98.33 சதவீதம் ‘தெற்கு சூடான்’ தனி நாடாக இயங்க ஆதரித்து வாக்களித்தனர். இதனால், ஐநாவும் தெற்கு சூடானை தனி நாடாக அங்கீகரித்தது.

2005ல் வடக்கு – தெற்கு சூடானுக்கு நடந்த அமைதி ஒப்பந்தத்தில் தர்ஃபுர் தாக்குதலுக்கு உட்பட்ட இடங்களுக்கு நிவாரணம் அளிப்பது பற்றியோ, அதன் வளர்ச்சி பற்றியோ கையெழுத்திடப்பட வில்லை. அந்த ஒப்பந்தத்தில் ‘தர்ஃபுர்’ பற்றி முடிவு எடுக்க தவறியதில் எவ்வளவு பெரிய தவறுக்கு காரணமாக இருந்தது. தெற்கு சூடான் தன்னிச்சையாக இயங்கிய கோபத்தையும், ஆத்திரத்தையும் இவர்கள் மீது காட்ட சூடான் அரசு தயாரானார்கள். தர்ஃபுரில் எண்ணெய் இருந்தாலும், பெரிய வளர்ச்சி, முன்னேற்றம் அடையாத மாநிலம். ஆளும் அரபிய அரசு தங்கள் நாட்டை முஸ்லிம் நாடாக மாற்ற நினைத்தனர். அப்போது தான் எதிர்காலத்தில் தெற்கு சூடான் செய்த பிரச்சனைகள் போல் வராது. தன்னுடைய முதல் இலக்காக எண்ணெய் வளம் கொண்ட தர்ஃபுரை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர நினைத்தது சூடான் (தெற்கு சூடான் அல்லாதவர்கள்).

இதற்கென ஆயுதம் ஏந்திய ஆரபிய ராணுவங்கள் உருவாக்கியது சூடான் அரசு. அந்த ராணுவத்தின் பெயர் ‘ஜன்ஜவீத்’. 2003 பிப்ரவரியில் தர்ஃபுர் புரட்சியாளர் வடக்கு தர்ஃபுரில் இருக்கும் ‘எல் பஷீர்’ விமான நிலையித்தில் தாக்குதல் நடத்தியதற்கு பதில் தாக்குதல் நடத்துவதாக சொல்லி ‘ஜன்ஜவீத்’ படையினர் தர்ஃபுரில் இருக்கும் அரபியர்கள் அல்லாத கிராமங்களில் தாக்குதல் நடத்தினர். பணம், பொருள் எல்லாம் சுரையாடினர். இங்கு நடைபெற்ற ஜன்ஜவீத் கொள்ளை தாக்குதல், மனித உரிமை மீறல் மட்டுமல்லாமல் இனப்படுகொலைக்கு அடித்தளமாக அமைந்தது.

ஒரே மாதிரியான தாக்குதலை தான் சூடான் அரசு நடத்தியது. தர்ஃபுர் கிராமங்களில் தாக்குதலை முதலில் விமான தாக்குதல் மூலம் சூடான் அரசு தொடங்கும். அதன் பின் ஜன்ஜவீத் படையினர் கிராமத்துக்குள் புகுந்து உணவு, பணம், பொருள், பெண்களை கற்பழிப்பது போன்ற எல்லா காரியங்களையும் செய்து வீடுகளுக்கு தீயிட்டுச் செல்வார்கள். பெரும்பாலான சூடான் அரசு தாக்குதல் இப்படி நடப்பதால், விமான தாக்குதல் நடந்தவுடன் ஜன்ஜவீத் தாக்குதலை எதிர்த்து போராட முடியாமல் தவித்தனர். 
 
அரபியர் அல்லாதவர்கள் சூடான் அரசிடம் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள ஜஸ்டிஸ் அன்ட் இக்குவாலிட்டி மூவ்மென்ட் (JEM), சூடான் லிப்ரேஷன் மூவ்மென்ட் (SLM) போன்ற போராட்ட அமைப்புகள் உருவானது.  நேரம் கிடைக்கும் போதெல்லாம், தர்ஃபுர் இருக்கும் போராளிகள் சூடான் லிப்ரேஷன் இயக்கத்தினர் கைது செய்வதாக வந்து கிராமங்களை எரித்தது, அனைத்தையும் களவாடிச் செல்வார்கள். சூடான் போராளிகளும் தங்களை எதிர்த்து வரும் ராணுவத்தை எதிர்த்து தாக்குதல் நடத்தினர்.

சூடான் அரசு சீனாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கி தர்ஃபுரில் தாக்குதல் நடத்தியது. அமெரிக்க அமைதியாக இருக்குமா? இரண்டு உள்நாட்டுப் போர் நடக்கும் வரை அமைதியாக இருந்த அமெரிக்க, சீனா ஆயுதம் வழங்குவதை அறிந்து சூடானில் நடக்கும் இனப்படுகொலையை கண்டித்தது. சூடானில் அமைதி ஏற்படுத்த ஐ.நா மூலம் முயற்சிகள் மேற்கொண்டது. 2006 அபுஜாவில், அமெரிக்க உதவியோடு மே ஒப்பந்தத்திற்கு தர்ஃபுர் போராளிகளை பேச்சு வார்த்தைக்கு சூடான் அரசு அழைத்திருந்தது. அதற்கு முன் எத்தனையோ பேச்சு வார்த்தைகள் நடந்தும் பலனில்லை. ஆனால், இந்த முறை அமெரிக்காவின் தலையீட்டால் கொஞ்சம் நம்பிக்கை தரும்படியாக இருந்தது. மே ஒப்பந்தத்திற்கு சூடான் லிப்ரேஷன் அமைப்பு ஏற்றுக் கொண்டாலும், மற்ற சிறு அமைப்புகள் ஏற்றுக் கொள்ளாததால் அதுவும் தோல்வியில் முடிந்தது. ஒரு கட்டத்தில் போராட்ட அமைப்புக்குள்ளே சண்டைகள் மூண்டு வன்முறை வெடிக்க காரணமாக இருந்தது.

சூடானில் அமைதி கொண்டு வரும் ஐ.நா முயற்சியில் சீனாவும், ரஷ்யாவும் முட்டுக்கட்டையாகவே இருந்தனர். சீனா அதிக அளவில் சூடானின் எண்ணெய் நிறுவனங்கள் மீது முதலீடு செய்துள்ளது. அவர்களின் ராணுவ தடவாளங்களுக்கு சூடானின் எண்ணெய்-ஐ தான் பயன்படுத்தப்படுகிறது. அதனால், அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் சூடான் அரசு தான் ஆட்சியில் இருக்க வேண்டும். அதற்காக சூடான் அரசு தர்ஃபுர் மக்களுக்கு எதிராக பயண்படுத்தும் ஆயுதங்களையும் சீனா தான் வழங்கியது. அதனால், சூடானை விட சீனாவும், ரஷ்யாவும் தர்ஃபுர் சூடான் அரசு கட்டுப்பாட்டில் இருந்து தவறிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தது.

2008-ல், 9,000 பேர் கொண்ட அமைதிப்படை யை ஐ.நாவும், ஆப்பிரிக்க கூட்டுறவு அமைப்பினரும் குழுவாக சேர்ந்து சூடானுக்கு அமைதி ஏற்படுத்த அனுப்பி வைத்தார்கள். அவர்களுக்கு தேவையான ஆயுதங்கள், பொருட்கள் சரியாக கொடுத்து அனுப்பப்படவில்லை என்று விமர்சிக்கப்பட்டது. ஒரு சில அமைதிப்படையினரும் கொல்லப்பட்டார்கள்.

அமெரிக்கா ராணுவம் அனுப்பியதில் சீனாவும் மிகுந்த வருத்தமாக இருந்தது. அங்கு இருக்கும் எண்ணெய்க்காக தான் இனப்படுகொலையை ஆதரிப்பதும், நடத்துவதுமாக இருந்தது. உண்மையில் இரண்டு வல்லரசு நாடுகளும், பாதிக்கப்படும் தர்ஃபுர் மக்களுக்காக கவலைப்படவில்லை. ஜன்ஜவீத் தர்ஃபுர் மேல் நடத்திய தாக்குதலில் அகதிகளாக தங்கி இருக்கும் சந்த் நாட்டினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

தர்ஃபுர் இருக்கும் உணவு பஞ்சம் இப்போது எந்த நாட்டிலும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு சூடான் அரபிய படைகள் தாக்குதல் நடத்தியது. அமைதிப்படை உதவியானாலும், ஐ.நாவின் தலையீட்டாலும் தர்ஃபுர் பகுதியில் 2009-ல் அமைதி ஏற்பட தொடங்கியது. அதுமட்டுமல்லாமல், தர்ஃபுர் நடந்த இனப்படுகொலையை விசாரணை நடத்த உத்தரவிட்டது ஐ.நா. மார்ச் 9, 2009, சர்வதேச குற்றப்பிரிவு நீதிமன்றம் சூடான் அதிபர் ஓமர் பஷிர் போர் குற்றவாளியாக அறிவித்து, கைது செய்ய வாரண்ட் வழங்கியது. ஜன்ஜவீத் படையினர்கள் மீது ‘போர் குற்றம்’ சுமத்தப்பட்டது. இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டாலும், பாதிக்கப்பட்ட தர்ஃபுர் பகுதி போராளிகள் சரணடையவில்லை. தங்கள் ஆயுதங்கள் கீழே போட யோசித்தனர்.

தர்ஃபுர் இனப்படுகொலைக்கு பிறகு, டிசம்பர் 2010-ல் தொடங்கப்பட்ட அமைதி பேச்சுவார்த்தை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றமடைந்தது. பாதிக்கப்பட்ட தர்ஃபுர் பகுதிகளுக்கும், மக்களுக்கும் 30 கோடி டாலர் நிவாரண நிதியாக வழங்கப்பட்டது. தர்ஃபுர் பகுதியில் இருந்து 18 அமைச்சர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதே சமயம், துணை அதிபர் தர்ஃபுர் பகுதியில் இருப்பவராக நியமிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் மறுக்கப்பட்டன. ஜூலை 2011, லிப்ரேஷன் அண்ட் ஜஸ்டிஸ் மூவ்மெண்ட் அமைப்பினர் சூடான் அரசோடு அமைதி உடன்படிக்கையான 'புது தர்ஃபுர் அமைதி ஒப்பந்தத்தில்' கையெழுத்திட்டது.

இனப்படுகொலையில் இருந்து எந்த நாடும், எந்த பகுதியும் அவ்வளவு எளிதில் வெளியே வர முடியாது. எனினும், தர்ஃபுர் பகுதி முன்னேற்ற பாதையில் முன்னோக்கி செல்கிறது.

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com