மத அரசியல்-1: சமயத் தோற்றம்

மத அரசியல்-1: சமயத் தோற்றம்

சமயத் தோற்றம்

எல்லா உயிர்களுக்கும் குறிப்பாக மனிதர்களுக்கு பெரிய அச்சத்தை விளைவிப்பது மரணம். முற்கால மனிதன் தன்னுடன் வாழ்பவர்கள் இறந்து போவதைப் பார்த்தான். அவன் அவர்களின் உடல்களைத் தூரத்தே கொண்டு சென்று எறிந்தான். உடம்பில் இருக்கும் ஆவி உடலை விட்டு நீங்குவதே மரணம் என அவன் எண்ணி முடிவு செய்தான். அவன் ஆவி அல்லது உயிர் அழியாது என நம்பினான். உயிர் உடலின் பக்கத்தே தங்கி நிற்கும். அது சில சமயங்களில் உடலிற்புகுந்து உயிர்த்து எழும்.  அது பழையபடி தான் வாழ்ந்த இடத்தை அடையும். அதனால் தீமைகள் உண்டாகும் என்னும் ஒரு புதிய எண்ணம் அவன் மனதில் உதித்தது. பிரேதம் உயிர்தெழும் என்னும் நம்பிக்கையினால் மனிதன் முற்காலத்திற் கையாண்ட வழக்கங்கள் சில இன்றும்  சில மக்களிடையே காணப்படுகின்றன. பிரேதங்களை இடுக்காட்டுக்கு எடுத்துச் செல்லும் போது வீட்டின் வழக்கமான வாயிலால் எடுத்துச் செல்லாது. பிறிதொரு வழியால் எடுத்துச் செல்லும் வழக்கு மக்கள் பலரிடையே உண்டு. இவ்வாறு செய்வது பிரேதம் உயிர்த்தெழின் வீட்டுக்குச் செல்லும் வழியை அறியாமல் இருக்கும்படியாகும். கால் கைகளை கட்டுவதும், அவை எழுந்தாலும் நடக்க முடியாதிருக்கும் படியே. பிரேதங்களுக்குப் பின்னே நெற்பொரி, தேங்காய் துண்டுகளை எறிவது, ஆவிகள் வீட்டுக்குத் திரும்பிவராது அவைகளை உண்டு கொண்டு இடுகாட்டுக்குச் செல்லும்படியேயாகும். இன்னும் பிரேதத்தை புதைத்த பின் அம்பட்டனால் செய்யப்படும் கிரியைகளும் இது தொடர்பானவைதான். கிறிஸ்துவ மதத்தினர் இறந்தவர்கள் உயிர்த் தெழுவார்கள் என இன்றும் நம்பி வருகின்றனர். 

பிரேதத்தைப் புதைத்து அதன் நெஞ்சை ஊடுருவும்படி கூரிய மரக்கட்டையை அறைவதும் முற்கால வழக்கு. இவ்வாறு செய்வது பிரேதம் எழும்பாமல் இருக்கும்படியேயாகும். இங்கிலாந்தின் சில இடங்களில் தற்கொலை புரிந்தவர்களின் பிரேதங்களுக்கு இவ்வாறு செய்யப்படுகின்றன. அதனால் அவன் இறந்தவர்களின் உடல்கள் உயிர்தெழாதபடி அவைகளைப் புதைக்கலானான். இந் நம்பிக்கை வலுவடைந்தபோது பிரேதங்கள் ஆழமான குழிகளில் புதைக்கப்பட்டன. குழிகள் கற்பலகைகளால் மூடப்பட்டன. கற்பலகைகளின் மேல் உயரமாக மண் கொட்டி மேடு செய்யப்பட்டது. மேட்டின் மீது பெரிய கல் வைக்கப்பட்டது. இவ்வாறு செய்தால் புதைக்கப்பட்ட பிரேதம் எளிதில் வெளியே வரமாட்டாது என முற்கால மக்கள் கருதினார்கள்.

இறந்தவர்களின் ஆவிகள் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் தங்கி நிற்கின்றன. அவைகளுக்குப் பசி தாகங்கள் உண்டு. வாழ்நாளில் அவர்கள் பயன்படுத்திய பொருள்களும் அவர்களுக்கு தேவை உண்டு எனவும் மக்கள் எண்ணத்தில் பட்டது. ஆகவே அவர்கள் பிரேதங்களை புதைக்கும் போது உணவையும் நீரையும் அவர்கள் பயன்படுத்திய பொருள்களையும் பக்கத்தே வைத்தார்கள். பின்பும் அவ்விடத்தில் உணவையும் நீரையும் வைத்து வருவாராயினர்.

இறந்தவர்களின் ஆவிகள் மக்களுக்கு நன்மையையோ, தீமையையோ செய்ய வல்லன என்றும் அவர்கள் கருதினார்கள். நாட்டில் நோய், பிணி, பஞ்சம் போன்ற துன்பங்கள் நேர்ந்த காலத்தில் அவை ஆவிகளின் கோபத்தினால் உண்டாயின என்று அவர்கள் நம்பினார்கள். ஆகவே அக்காலங்களில் ஆவிகளுக்குச் சிறப்பாக உணவும் நீரும் (பலி) வழங்கப்பட்டன. சில தலைமுறைகள் கழிந்தன. இறந்தவர்களைப் பற்றிய நினைவுகள் மறக்கப்பட்டன. அப்பொழுது இறந்தவர்களின் சமாதிகள் சிறு தெய்வங்களாகவும் கிராம தெய்வங்களாகவும் மாறின. குடும்பத்தவரின் ஆவிகள் இல்லற தெய்வங்களாயின. குடும்பத் தலைவனின் ஆவி (குடும்ப) தெய்வமாயிற்று. அதிகாரியின் ஆவி கிராம தெய்வமாயிற்று. அரசனின் ஆவி நாட்டு மக்களின் தெய்வமாயிற்று. சமாதிகள் வைக்கப்பட்ட கற்களே ஆவி உறையும் இடங்களாக கருதப்பட்டன. அவைகளின் முன் பலிகள் இடப்பட்டன. இவ்வாறு தென் புலத்தார் (இறந்தவர்) வழிபாடே முதலில் தோன்றி இருந்தது. பின்பு தென்புலத்தார் தெய்வமாயினர். இது பற்றியே வள்ளுவனர் 'தென்புலத்தார் தெய்வம்" என கூறினாரென்க. இன்றும்  மலையாளத்தில் தெற்கட்டு என்னும் வீட்டின் ஒரு பகுதியில் இறந்தவர்களின்  சாம்பல், அவர்கள் பயன்படுத்திய கைத்தடி முதலியன வைத்து வழிபடப்படுகின்றன.

சமயம் என்பதில் அடங்கியவை

சமயம் என்றவுடன் தெய்வம், பூசாரி, பலி, வழிபடுபவன் என்னும் நான்கின் தோற்றங்களும் நமது அகத்தே எழுகின்றன. இந்நான்கின் சேர்க்கையை சமயம் என்னும் கருத்து மக்கள் உள்ளத்திற்பதியலாயிற்று.

தெய்வங்களின் வடிவம்

சமாதிக் கற்களே தெய்வம் உறையும் இடமாக வைத்து வழிபடப்பட்டன. கற்களை வழிபட்ட மக்கள் இறந்தவர்களை கற்களில் செதுக்கி வைத்தும் வழிபடுவாராயினர். இம் முறையினால் கற்களின் இடத்தைக் கற்களில் செதுக்கப்பட்ட ஆண் பெண் உருவங்கள் ஏற்றதும் உண்டு.

மர வணக்கத்தின் தோற்றம்

இறந்தவர்கள் வணக்கத்தை ஒப்ப மர வணக்கமும் இவ்வுலகம் முழுமையிலும் பரவியிருந்தது. மக்கள் மரங்களைத் தெய்வங்களாக வழிபடுவதில்லை. அம்மரங்களில் தெய்வங்கள் உறைவதாகக் கருதி அவைகளையே வழிபடுகின்றனர். பிரேதம் புதைக்கப்பட்ட இடத்தில், முளைத்து வளரும் மரங்கள் இறந்தவரின் அல்லது அவரின் ஆவிகள் உறையும் இடங்களாகக் கருதப்பட்டன. பிரேதங்களைப் புதைத்தப்பின் அவ்விடங்களில் மரங்களை அல்லது மரக்கிளைகளை நாட்டும் வழக்கு இன்றும் பல  மக்களிடையே காணப்படுகின்றது. ஆகவே இறந்தவர்கள் ஆவிகளுக்குச் செய்யப்படும் வழிபாட்டை ஒப்ப இம்மரங்களும் பலி கொடுத்து வழிபடப்பட்டன.

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com