மத அரசியல்-15: ஷின்டோயிஸம்

மத அரசியல்-15: ஷின்டோயிஸம்

ஷின்டோ  (Shinto)

ஷின்டோ என்பது ஜப்பானில் மட்டுமே காணப்படுகிற ஒரு மதமாகும். ஜப்பானியர்களின் தாய் மதமாக இருந்தது ஷிண்டோ மதம் ஆகும். ஷிண்டோயிசம் என்னும் இம்மதம் இயற்கை வழி என்றும், கலாச்சார வழி என்றும் இருபிரிவுகளாகக் காணப்படுகிறது. ஜப்பானின் மக்கள் தொகையில் முக்கால் பாகம் அதாவது 9,10,00,000-க்கு அதிகமானோர் அன்று சொல்லப்பட்டாலும், 3 சதவீதத்தினரே நம்பிக்கை வைத்திருப்பதாக சுற்றாய்வு காண்பிக்கிறது. நன்செய் நிலத்தில் நெல்பயிர் செய்யப்பட ஆரம்பித்ததிலிருந்தே, விவசாய சடங்குகள் என ஷின்டோ மதம் தோன்ற ஆரம்பித்தது என கொடன்ஷா என்சைக்ளோபீடியா ஆப் ஜப்பான் விளக்குகிறது. உடலை விட்டு பிரிந்து போகும் ஆத்மாக்களுக்கு அவர்கள் பயப்பட்டதால், அவற்றைச் சாந்தப்படுத்துவதற்கு சடங்குகளைச் செய்தனர், பின்னாளில் இது மூதாதையர்கள் வழிபாடாக மாறியது.

வழிபாடு

அவர்கள் வழிபட்ட மரங்கள், கற்கள், கண்ணாடிகள், வாள்கள் போன்றவற்றின் மீது இத்தெய்வங்கள் வந்து தற்காலிகமாய் தங்கியதாக நம்பினர். முன்னொரு காலத்தில் ”இசனாகி” என்றொரு தெய்வம் இருப்பதாக ஷின்டோ புராணக் கதை கூறுகிறது. இப்பெயர் ஈசன் என்ற பெயர் போல விளங்குகிறது.

இயற்கை வழி என்பது சூரியன் மற்றும் சந்திர வழிபட்டை வலியுறுத்துகிறது. குறிப்பாக சூரியனையே இப்பிரிவினர் முழு முதற் கடவுளாக வணங்கினர். உலகின் உயிர் சூரியன் தான் என்றும் சூரியனின் அசைவைப் பொறுத்தே உலகில் ஆக்கமும், அழிவும் நடப்பதாகவும் இப்பிரிவினர் நம்புகின்றனர். சூரியனால் விளையும் தானியப் பயிர்களை வணங்கியதோடு, அதனை சூரியனுக்குப் படைத்தும் வந்தனர். சூரிய சக்தியால் விளையும் பயிர்களைப் பயன்படுத்துவதே மனிதனின் முக்கியக் கடமை என்று நினைத்து அதற்கு அதிக முன்னுரிமை வழங்கி வந்தார்கள். ஆனால் காலப்போக்கில் இந்த இயற்கை வழிப் பிரிவு என்ன காரணத்தினாலோ மங்கி, மறைந்து போய்விட்டது. கலாச்சார வழிப் பிரிவு மட்டுமே தற்போது ஜப்பானில் உயிரோடு இருந்து வருகிறது. காலப்போக்கில் ஜப்பானியர் லட்சக்கணக்கில் தெய்வங்களை வழிபட ஆரம்பித்தபோது ’யாயோரோசு-நோ-காமி” என்ற சொற்றொட்ரை உருவாக்கினர், அதன் பொருள் எண்பது லட்சம் தெய்வங்கள் என்பதாகும்.

புனிதமாக்கல்

ஷிண்டோ மதத்தில் புனிதம் என்பதே மிகமுக்கியமானதாக விளங்குகிறது. நன்மை செய்வது புனிதம் என்றும், தீமை செய்வது அருவறுக்கத்தக்கது என்றும் இம்மதம் கூறுகிறது. தீமைகளையும், தீயவர்களையும் கடவுள் வெறுக்கிறார் என்றும் ஷிண்டோயிசம் உபதேசிக்கிறது.

புனிதம் என்பதும் இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று அகப்புனிதம் மற்றொன்று புறப்புனிதம். அகப்புனிதம் என்பது ஆத்மா புனிதமடைவது. அப்போது தான் கடவுளோடு மனிதன் ஒன்றுபட முடியும். புறப்புனிதம் என்பது ஆத்மா புனிதமடைய வேண்டுமென்றால் உடலும், செயலும் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம் என்பதாகும். இதற்கு மேல் இன்னொன்றையும் இம்மதம் உபதேசிக்கிறது.  அதாவது நாட்டை ஆளும் மன்னன் தெய்வத்திற்கு ஈடானவன் என்கிறது. தனை வலுவூட்ட “கோசிகி” மற்றும் “நிஹான்’ என்ற நூல்கள் தொகுக்கப்பட்டன.

புனிதமாக்கும் ஒனுசா

இதனை ஒரு தேசியக் கோட்பாடாகவே ஜப்பானியர் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஷிண்டோ தர்மத்தின் படியே மன்னர்கள் வாழ வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். இன்றளவிலும் ஜப்பானிய மன்னர் குடும்பத்தினர் ஷிண்டோ மதத்தில் இருந்து பிற மதங்களுக்கு மாறினால் அவர்கள் தங்கள் அரச வம்சத்தையே இழந்துவிடுகிறார்கள்.

கோட்பாடுகள்

சகிப்புத் தன்மை, வழிபாட்டு சுதந்திரம், சகோதரத்துவம், உயர்வு தாழ்வற்ற சமூகம் போன்ற பல்வேறு நல்ல அம்சங்கள் ஷிண்டோ மதத்தில் இருந்து வருகின்றன. பிறப்பு, இறப்பு என்பவை விதிப்படி நடப்பவை என்பதை உறுதியாக நம்புகிறது. முன்னோர்களை அவமதிக்காமல் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கொள்கை இதில் காணப்படுகிறது. கருணையைக் கடவுள் வடிவமாகப் போற்றுகிறது. நீதியை நிலைநாட்டத் தவறுபவனை கோழை என்று இகழ்கிறது. அன்பு காட்டுபவன் இல்லத்துக்கு அழைக்காமலேயே செல்லும் உயரிய வழக்கத்தை ஷிண்டோ மதம் கொண்டுள்ளது. வானத்தை உங்கள் தந்தையாகக் கருதுங்கள், பூமியை உங்கள் தாயாக நேசியுங்கள், மற்ற அனைத்தையும் உங்கள் சகோதர சகோதரிகளாக நினையுங்கள்.  அப்போது துவேஷம், துன்பம் போன்றவற்றில் இருந்து இன்பம் என்னும் மோட்சத்தை அடைய முடியும் என்று போதிக்கிறது இம்மதம்.

தமிழர்கள் மதத்தைப் போலவே மனிதனும் தெய்வமாகலாம் என்று ஷிண்டோ மதமும் உபதேசிக்கிறது. அற்கான வழிமுறைகள் என்னவென்பதையும் பட்டியலிடுகிறது.

1. மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகியவர்களின் சொற்படிக் கேட்டு நடக்க வேண்டும்.
2. விவேகத்துடன் மட்டும் இல்லாமல் விவுவாசத்தோடும் பணியாற்ற வேண்டும்.
3. எப்போதும், எந்த இக்கட்டான நிலையிலும் நேர்மை தவறவே கூடாது.
4. பொய்மையை முற்றிலுமாக நீக்கிவிட வேண்டும்.
5. நன்றாகக் கற்று அறிவைப் பெருக்கி ஞானத்தை மேலும் விரிவாக்கிக் கொள்ள வேண்டும்.
6. தேவைக்கு ஏற்ற பொருட்களை உருவாக்குவதில் முனைப்புடன் இருக்க வேண்டும்.

இவற்றைக் கடைப்பிடித்தால் கடவுள் அம்சத்தை அடைந்து தெய்வத்திற்கு நிகராக மாற முடியும் என்கிறது ஷிண்டோயிசம்.

பண்டைய காலத்தில் இது அரசர்களால் அங்கீகாரம் பெற்ற மிகப் பெரிய மதமாக விளங்கியது. இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் வரை ஜப்பானின் முதன்மை பெற்ற மதமாக விளங்கிய இது பின்னர் தனது செல்வாக்கை இழந்துவிட்டது. சிவலிங்கத் திருவுருவத்திற்கு பெருமதிப்புத் தரும் இம்மதத்தை சுமார் ஐந்தே கால் கோடிப் பேர் பின்பற்றி வருகின்றனர். இம்மதம் இந்து மதத்தைப் போலவே பல கடவுள்களைப் பற்றிப் பேசுகிறது. கடவுள்களை இவர்கள் ‘காமி”  என்கின்றனர். நாம் தமிழில் ‘சாமி’ என்று அழைப்பதை இதனுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

இறந்த பின்னர் மனிதர்கள் ஒவ்வொருவரும் ‘சாமி’ ஆகிவிடுகிறார்கள் என்னும் நம்பிக்கை இவர்களிடம் காணப்படுகிறது. மிருகங்களை கடவுளின் தூதர்களாக நம்பும் இவர்கள், மலை, காற்று, உணவு போன்ற அனைத்தையுமே கடவுள் என்கின்றனர். இயற்கையைக் கடவுள் என்று வழிபடும் இவர்கள் கடவுள் எங்கும் நிறைந்திருப்பார் என்று நம்புகிறது. இந்துக்கள், கடவுள் தூணிலும் உருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று கூறுவதை இங்கே ஒப்பிட்டு நோக்கலாம். ஜப்பானில் பரவலாக ஷிண்டோ கோயில்கள் காணப்படுகின்றன. அதன் நுழைவாயிலில் வித்தியாசமான தோரி என்று அழைக்கப்படும் ஒரு விதமான கதவு உள்ளது.

கடவுளும், பூத கணங்களும் இயற்கையோடு ஒன்றி இருப்பதான் நம்பிக்கை ஜப்பானியரிடம் ஆரம்ப காலத்தில் இருந்தது.  இதனை அடிப்படையாக வைத்து ஆவிகளை வணங்கி இயற்கையோடு ஒன்றி வாழ முயன்றனர். தங்கள் மூதாதையர்கள், மன்னர்களை கடவுகளுக்கு இணையாக வணங்கிப் போற்றுவது உண்டு. அதாவது இவர்களை ‘சாமி’ என்றே வழிபடுகின்றனர். ஷின்டோக்களின் முக்கிய கொள்கைகளில் ஒன்று சுத்தம், தூய்மை. எனவே எப்போதும் இவர்களின் கோயில்கள் சுத்தமாகவே இருக்கும். இங்கு செல்லும் போது கைகளையும்,  வாயையும் நன்றாகக் கழுவிய பிறகே செல்ல வேண்டும்.

இதற்காகக் கோயிலின் முகப்பில் ஒரு தொட்டி நிறைய நீர் நீரப்பப்பட்டுள்ளது. அதில் உள்ள தொண்டி மூலம் கை, கால்களை கழுவிக் கொள்கின்றனர். பின்னர் அந்த நீரை சிறிது அருந்தவும் செய்கின்றனர். ஷின்டோ கோயில்களில் சிறப்பான ‘சாமிக்கள் நிறைய காணப்படுகின்றனர். புத்தாண்டு பிறப்பு உள்ளிட்ட பண்டிகை நாட்களில் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவது இவர்களின் வழக்கம். அதேபோல சங்கடமான துன்பச் சூழல் ஏற்படும் காலக்கட்டங்கலும் தவறாமல் கோயிலுக்குச் சென்று வணங்குவார்கள்.

பண்டிகைகள்

ஷின்டோ பண்டிகைகள் மதம். இவர்கள் வருடம் முழுதும் பண்டிகைகள் கொண்டாடுகின்றனர்,

• ஷோ-கட்சு, அதாவது புத்தாண்டு பண்டிகை-ஜனவரி 1-3
•  செட்சுபன், “பிசாசுகளே வெளியே போ, அதிர்ஷ்டமே உள்ளே வா” என்று கூவிக் கொண்டே வீடுகளில் உள்ளேயும் வெளியேயும் விதைகளை வீசுவது-பிப்ரவரி 3
•  ஹினா மட்சுரி, மார்ச்-3, சிறுமிகளுக்கான பொம்மைப் பண்டிகை
•  கோய்-நோபோரி-கெண்டை மீன் கொடிகளை பறக்கவிடும் பண்டிகை மே-5
• ட்சுகிமி-நிலவினை ரசித்துக் கொண்டு, சிறிய வட்ட வடிவிலான பலகாரங்களை காணிக்கையாக செலுத்தும் பண்டிகை 
• கண்ணமி-சாய், அக்டோபரில் விளைச்சலின் சாகுபடியை அரசர்  காணிக்கையாக செலுத்தும் பண்டிகை
• நிய்யிணமி-புதிதாக விளைந்த நெல்லை அரச குடும்பம் ருசி பார்க்கும் பண்டிகை நவம்பர்
• ஷிச்சி-கோ-சான், இதன் பொருள் ஏழு-ஐந்து-மூன்று, வண்ண வண்ண ஆடை அணிந்து கோயிலுக்குச் செல்கின்றனர் நவம்பர்-15

புத்தாண்டு பிறப்பதற்கு முதல் நாள் மாலையில் இருந்தே மக்கள் கோயில்களுக்கு வந்துவிடுகின்றனர். கோயிலில் இருந்து சற்றுத் தள்ளி அவர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு பகுதி பகுதியாக உள்ளே செல்ல அனுமதிக்ப்படுகின்றனர். கோயிலுக்குள் சென்ற பிறகு வேண்டிய அளவு அங்கேயே இருந்து இறைவனைத் தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். சந்நதிக்கு நேர் எதிரே நெருப்புக் குண்டம் காணப்படுகிறது.  அதிலிருந்து வரும் புகையை கண்களில் ஒற்றிக் கொள்கின்றனர். கோயிலுக்குள் நிறைந்த அமைதி நிலவும் மதக் குருக்கள் ஒதும், அலய மணியோசை ஒலிக்கும் குரல் மட்டுமே கோயிலுக்குள் கேட்கின்றன. பிறப்பின்போதும், திருமணம் போன்ற முக்கிய விசேட நிகழ்வின்போதும் சடங்குகள் செய்வது ஷின்டோக்களின் வழக்கம். இந்து மதத்திலும் இத்தகைய சடங்குகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

யூடாடேஷின்ஜி சடக்கு (Yutateshinji ceremony)

பெரும்பாலான ஷின்டோ சடங்குகளும், விழாக்களும் காமிகளுக்குப் படையல் செய்வதன் மூலமும், பிற வழிபாட்டு முறைகள் மூலமும் கெட்ட ஆவிகளை விலக்கி வைப்பதை நோக்கமாகக் கொண்டே செய்யப்படுகின்றன. பழமையான மதங்களுக்கே உரிய மூட நம்பிக்கைகள், சடங்குகள் ஷின்டோ மதத்தில் நிறைய உள்ளன.

நல்ல உடல் ஆரோக்கியம், பாதுகாப்பான பயணம், கல்வி, வெற்றிகரமான வியாபாரம் போன்ற பலவற்றிற்கும் தாயத்துப் போன்ற பொருட்கள் இவர்களின் வழிபாட்டுத் தலங்களில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி வைத்தால் நினைத்தவை ஈடேறும் என்ற நம்பிக்கை காணப்படுகிறது.  தங்கள் இல்லங்களில் மாடங்களை அமைத்து வழிபடுவது இவர்களின் வழக்கம். சகுனம் பார்ப்பதும் உண்டு. முன்னங்கால்களை உயர்த்திக் கொண்டு அமர்ந்திருக்கும் பூனை குடும்பத்திற்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்புகின்றனர்.

ஷின்டோ மதத்தை யாரும் உருவாக்கியதாக அறியப்பட வில்லை. இதற்கென வழிகாட்டும் புனித நூல் எதுவும் கிடையாது நேர்மறை சிந்தனை கொண்ட மதமாக விளங்கும் இது, அடிப்படையில் மனிதர்கள் அனைவரும் நல்லவர்களே என்றும், கெட்ட ஆவிகளால்தான் தீயவை நடப்பதாகவும் நம்புகின்றனர்.

கோயில்களில் சீட்டுக்கட்டி விடுவது, பொம்பை செய்து வைப்பது போன்ற பல்வேறு வழிபாட்டு முறைகள் தமிழர்களிடம் இருப்பதைப் போலவே ஷின்டோ மதத்திலும் உள்ளது. திருஷ்டிப் பூசணி வடிவில் சிகப்பு நிறத்தாலான சிறிய மற்றும் ஆளுயரத்திலான பெரிய பொம்மைகள் விற்பனை ஜப்பானில் பிரசித்தம். கண்கள் மட்டும் வரையப்படாத இந்தப் பொம்மைகளை வாங்கி வந்து, விருப்பத்தை மனதில் நினைத்து, பொம்மைக்குக் கண்களை வரைகிறார்கள். பின்னர் அதைத் தங்கள் வீட்டில் வைத்தால் நினைத்த காரியம் வரும் புத்தாண்டுக்குள் நிறைவேறியதும் இந்தப் பொம்மையை கோயிலில் கொண்டுவந்து வைத்துவிடுகின்றனர்.

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் இரண்டாவது திங்கள்கிழமை அன்று ‘செஜின் நோ’ என்னும் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இருபது வயதான ஆண்களும், பெண்களும் பெரியவர்களாக அங்கீகரிக்கப்படும் விழா இது. அன்றைய தினத்தில் பெரியவர்களாக அங்கீகரிக்கப்படும் பெண்கள் தங்கள் பாரம்பரிய உடையான கிமோனோவிலும், ஆண்கள் புத்தம் புதிய சூட், கோட் சகிதமாகவும் கோயிலுககுச் செல்வது வழக்கம். ஜப்பானில் உள்ள புத்த மதத்தினர் ஷின்டோ வழிபாட்டு முறைகளையும் பின்பற்றுகின்றனர்.

ஷிண்டோக்களின் கடவுளான காமிகளை புத்தரின் வடிவாகவும் கருதுகின்றனர். ஷின்டோ மதத்தின் திருவிழாக்கள் அனைத்தும் புத்தர் கோயிலுகளிலும் நடைபெறுகின்றன. அதேபோன்று புத்த மதம் சார்ந்த திருவிழாக்கள் ஷின்டோ ஆலயங்களிலும் நடை பெறுகின்றன.

தேவைக்கேற்ப மாறுகிறது

பல ஆண்டுகளாக ஷின்டோ மதத்தில் அநேக மாற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், அதன் பண்டிகைகளயும், சடங்குகளையும் அவர்கள் மறந்துவிடவில்லை.

ஜின்குஜி

புத்த மதப் பரவலில் இரு மதங்களும் விட்டுக் கொடுத்து சமரசம் செய்து கொள்ள வேண்டியிருந்தது. அதோடு ஜின்குஜி (Jinguji) என்ற கோயில்கள் கட்டப்படுவதற்கு வழி நடத்தியது.

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com