பஞ்சாங்கம்

வியாழக்கிழமை

21

விளம்பி வருடம், மாசி 9-ம் தேதி

நல்ல நேரம்

காலை 10.30 - 11.30   மாலை 4.30 - 5.30

ராகு காலம்

1.30 - 3.00

எம கண்டம்

6.00 - 7.30

குளிகை

9.00 - 10.30

திதி

துவிதியை

நட்சத்திரம்

பூரம்

சந்திராஷ்டமம்

சதயம்

இன்றைய ராசிபலன்

மேஷம் - சாந்தம்
ரிஷபம் - தனம்
மிதுனம் - எதிர்ப்பு
கடகம் - லாபம்
சிம்மம் - ஜெயம்
கன்னி - சோர்வு
துலாம் - போட்டி
விருச்சிகம் - வரவு
தனுசு - ஓய்வு
மகரம் - உயர்வு
கும்பம் - பிரீதி
மீனம் - உழைப்பு

யோகம்:  சித்த யோகம்

சூலம்: தெற்கு

பரிகாரம்: தைலம்

விசேஷம்: திருச்செந்தூர் ஸ்ரீ சுவாமி அம்பாள் கேடயச் சப்பரத்தில் பவனி. சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். 

கேள்வி - பதில்
 • எனக்கு ஆண், பெண் என இரண்டு பிள்ளைகள். எனது சகோதரருக்கு தர வேண்டிய பங்கை எப்போது ஆவணப்படுத்தித் தருவேன்? கடன்கள் எப்போது அடையும்? பெற்றோருக்கு வேண்டிய கடமைகளை இறுதிவரை செய்வேனா?  புதிய வீடு கட்டும் பாக்கியமுண்டா? ஓய்வூதியப் பணம் எப்போது கிடைக்கும்? இறுதிகாலம் எப்படி இருக்கும்?
  - வாசகர், கடலூர்

 • உங்களுக்கு துலாம் லக்னம், மேஷம் ராசி. லக்னாதிபதியும் கர்மாதிபதியும் களத்திர நட்பு ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்கள். சுக, பூர்வபுண்ணியாதிபதி குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். சூரியபகவான் ஆறாம் வீட்டிலும் அந்த வீட்டுக்கதிபதி குருபகவான் உச்சம் பெற்றும் குருபகவானின் பார்வை குடும்பம் , சுகம் மற்றும் ஆறாம் வீடுகளின் மீது படிவதும் சிறப்பாகும். பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் புதபகவான் அமர்ந்திருக்கிறார். தன, நட்பு ஸ்தானாதிபதியும் சகோதரகாரகருமான செவ்வாய்பகவான் தைரிய ஸ்தானத்தில் இருக்கிறார். தற்சமயம் குருபகவானின் பார்வையிலுள்ள சனிபகவானின் தசை முடியும் தருவாயில் உள்ளது. இந்த ஆண்டே உங்கள் சகோதருக்குரிய பங்கை ஆவணப்படுத்தி விடுவீர்கள். உங்கள் பெற்றோருக்கு உங்கள் கடமைகளை இறுதிவரை சரியாகச் செய்து முடிப்பீர்கள். ஓய்வூதியப் பலனும் கிடைத்துவிடும். கடன்களை முழுமையாக அடைத்து விடுவீர்கள். குடும்பத்தில் பெரிய தோஷம் என்று எதுவும் இல்லை. குலதெய்வ வழிபாட்டை வருடமொருமுறை தவறாமல் செய்து வரவும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

 • என் மகள் பி.இ., முடித்து ஒரு வருடமாகிவிட்டது. இன்னும் வேலை கிடைக்கவில்லை. வேலை வாய்ப்பு எப்போது அமையும்? திருமணம் எப்போது கைகூடும்? 
  - வாசகர், திருச்செந்தூர்

 • உங்கள் மகளுக்கு தனுசு லக்னம், கன்னிராசி. லக்னாதிபதி மற்றும் சுக ஸ்தானாதிபதியான குருபகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப் பெற்று தர்மகர்மாதிபதிகளை பார்வை செய்கிறார். குடும்பாதிபதியையும் மாங்கல்ய ஸ்தானத்தையும் குருபகவான் பார்வை செய்வது சிறப்பாகும். அவருக்கு அரசு வேலை கிடைக்கும். அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும். 

 • எனது மகன் முதலாமாண்டு பி.இ., படித்து வருகிறார். படிப்பில் சற்று கவனக்குறைவு இருக்கிறது. எதிர்காலத்தில் அவரது படிப்பு எவ்வாறு இருக்கும்? வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு உள்ளதா?
  - வாசகர், கோயம்புத்தூர்

 • உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், சிம்ம ராசி. தற்சமயம் கல்வி ஸ்தானாதிபதியான சுக்கிரபகவானின் தசை நடக்கிறது. லக்னாதிபதி நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கிறார். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி லக்னத்தில் அமர்ந்திருக்கிறார். புதஆதித்ய யோகம், பௌர்ணமி யோகம், குருசந்திர யோகம், அஷ்டலட்சுமி யோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளன. அடுத்த ஆண்டு தொடங்கியவுடன் அவரின் படிப்பு சீரடைந்துவிடும். வெளிநாடு சென்று படிக்கும் யோகமும் உள்ளது. பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

 • எனது மகனுக்கு திருமணம் தள்ளிப்போகின்றது. எப்போது கல்யாண தசை வரும்? பெண் உறவில் அமையுமா? 
  - வாசகர், எழும்பூர்

 • உங்கள் மகனுக்கு மகர லக்னம், கன்னி ராசி. களத்திர ஸ்தானாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். லக்னாதிபதி லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். தர்மகர்மாதிபதிகள் அஷ்டம ஸ்தானத்தில் அஷ்டமாதிபதி மற்றும் லாப ஸ்தானாதிபதிகளுடன் இணைந்து சுக ஸ்தானத்திலுள்ள  குருபகவானால் பார்க்கப்படுகிறார்கள். தற்சமயம் குருமகா தசையில் சுக்கிர புக்தி நடக்கத் தொடங்கியுள்ளதால் அவருக்கு இந்த ஆண்டே படித்த பெண் அந்நிய உறவில் அமைந்து திருமணம் நடைபெறும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

 • எனது தங்கைக்கு (சித்தி பெண்) இதுவரை மாப்பிள்ளை அமையவில்லை. எப்போது திருமணம் கைகூடும்? ஏதேனும் பரிகாரம் செய்யவேண்டுமா? 
  - வாசகர், கரூர்

 • உங்கள் சித்தியின் மகளுக்கு துலா லக்னம் துலா ராசி. லக்னாதிபதி களத்திர நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து லக்னத்தைப் பார்வை செய்கிறார். பூர்வபுண்ணியாதிபதி தைரிய ஸ்தானத்தில் களத்திராதிபதியுடன் இணைந்திருக்கிறார். இவர்களை குருபகவான் பார்வை செய்கிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் அவருக்கு படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

 • எங்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகின்றன.  இன்னும் புத்திர பாக்கியம் கிட்டவில்லை. பரிகாரங்களும் செய்துள்ளோம். புத்திரபாக்கியம் எப்போது கிடைக்கும்?
  - வாசகர், திருப்பூர்

 • உங்களுக்கு கடக லக்னம், விருச்சிக ராசி. லக்னாதிபதியும் பாக்கியாதிபதியும் இணைந்து, லாப ஸ்தானத்திலுள்ள குடும்பாதிபதி மற்றும் பூர்வபுண்ணியாதிபதிகள் பார்வை செய்கிறார்கள். அதோடு தற்சமயம் லக்னாதி பதியான சந்திரபகவானின் தசையும்  நடக்கத் துவங்கியுள்ளது. குருசந்திர யோகம், சந்திரமங்கள யோகம், குருமங்கள யோகம் மற்றும் சிவராஜ யோகம், சச மகா யோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளன. உங்கள் மனைவிக்கு மேஷ லக்னம், ரிஷப ராசி. பாக்கியாதிபதி லக்னத்தில் அமர்ந்து பூர்வபுண்ணிய ஸ்தானம், களத்திர ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானங்களைப் பார்வை செய்கிறார். அவருக்கு தற்சமயம் ராகுபகவானின் தசையில் சுக்கிரபகவானின் புக்தி நடக்கிறது. பூர்வபுண்ணியாதிபதியும் லக்னாதிபதியுடன் இணைந்திருக்கிறார்கள். உங்கள் இருவரின்  ஜாதகங்களின்படி இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் மழலை பாக்கியம் உண்டாகும். ஓர் ஆண், ஒரு பெண் ஆகிய இரண்டு குழந்தைகள் உண்டு. மற்றபடி நீங்கள் செய்துவரும் வழிபாடுகளைத் தொடர்ந்து செய்து வந்தாலே போதுமானது. உங்கள் குடும்பத்திற்கு வளமான எதிர்காலம் உள்ளது.

 • எனக்கு 61 வயதாகிறது. ஆரம்பம் முதலே உத்தியோகம் ஸ்திரமாக அமையவில்லை. பல கம்பெனிகள் மாறி, நடுவில் தடை ஏற்பட்டு என மிகுந்த மன உளைச்சலாக உள்ளது. தற்போது வேலை எதுவும் இல்லாமல் இருக்கிறேன். வேலை அமையுமா? சுயதொழில் செய்யலாமா? 
  - வாசகர், மதுரை

 • உங்களுக்கு சிம்ம லக்னம், கன்னி ராசி. லக்னாதிபதி லக்னத்திலேயே ஆட்சி பெற்று பாக்கியாதிபதியுடன் இணைந்து இருக்கிறார். தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் வலுவான கிரகங்கள் இணைந்து இருப்பதால் தற்சமயம் நடக்கும் சனிமகா தசையிலேயே ஓரளவு நல்ல வருமானம் வரும் வேலை இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பிறகு கிடைக்கும். தொடர்வது உச்சம் பெற்றுள்ள தனாதிபதியான புதபகவானின் தசையாக உள்ளதால் எதிர்காலம் சிறப்பாக அமையும். சுயதொழில் வேண்டாம். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும். 

 • என் மகனுக்கு எப்போது நல்ல வேலை கிடைக்கும்? திருமணம் எப்போது நடைபெறும்? ஆயுள் எவ்வாறு உள்ளது?
  - வாசகர், வேலூர்

 • உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், துலாம் ராசி. லக்னம் மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியான குருபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் நட்பு ஸ்தானாதிபதியின் சாரத்தில்  உச்சம் பெற்று அமர்ந்து தர்மகர்மாதிபதிகளான புதஆதித்யர்களுடன் கூடி இருக்கிறார். தர்மகர்மாதிபதிகள் மறைவு பெற்றிருந்தாலும் தர்மாதிபதி யோகம் பெருமளவுக்கு வேலை செய்யும் என்று கூறவேண்டும். அவருக்கு தற்சமயம் குருபகவானின் தசையில் புதபகவானின் புக்தி இந்த ஆண்டு இறுதிவரை நடக்கும். அதனால் உடனடியாகவே அவருக்கு தகுந்த வேலை கிடைத்துவிடும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் திருமணமும் கைகூடும்.  பித்ருகாரகரான சூரியபகவான் சுபபலத்துடன் இருப்பதால் தீர்க்காயுள் உண்டு. பிரதி வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியையும் குருபகவானையும் வழிபட்டு வரவும். 

 • எனது மகள் பி.சி.ஏ., படிக்கிறார். அவரது ஜாதகம் சுத்தமானதா? மேற்படிப்பு தொடர வாய்ப்பு உண்டா? திருமணம் எப்போது நடைபெறும்? புத்திரபாக்கியம் உண்டா? அரசுப் பணி கிடைக்குமா?
  - வாசகி, திருப்பத்தூர்

 • உங்கள் மகளுக்கு கடக லக்னம் என்று வருகிறது. மிதுன லக்னம் அல்ல. மற்றபடி சதய நட்சத்திரம் நான்காம் பாதம் என்பது சரியானது. லக்னாதிபதி அஷ்டம ஸ்தானத்தில் பாக்கியாதிபதியுடன் இணைந்திருக்கிறார். அவர்களுடன் கேதுபகவான் இணைந்திருக்கிறார். குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய்பகவான் ராகுபகவானுடன் இணைந்திருக்கிறார். லக்னாதிபதி பூர்வபுண்ணியாதிபதி மற்றும் பாக்கியாதிபதி ஆகிய மூன்று திரிகோணாதிபதிகள் இணைந்திருக்கிறார்கள் என்று கூறவேண்டும். சர்ப்ப தோஷம் இருந்தாலும் குருபகவானின் சஞ்சாரத்தால் தோஷம் குறைகிறது. மேலாண்மைத் துறையில் மேற்படிப்பு படிக்கலாம். அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளிலும் வேலை கிடைக்கும். இன்னும் இரண்டாண்டுகளுக்குப்பிறகு திருமணம் கைகூடும். புத்திரபாக்கியத்திற்குக் குறை இல்லை. பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

 • நான் சிங்கப்பூரில் நான்கு வருடங்களாக வேலை பார்த்து வந்தேன். வேறு இடத்தில் வேலைக்கு முயற்சித்தேன். நான் ஊருக்கு வந்து 2 வருடங்கள் ஆகியும் இன்னும் வேலை கிடைக்கவில்லை. சிங்கப்பூரில் எப்போது வேலை கிடைக்கும்? 
  - வாசகர், மயிலாடுதுறை

 • உங்களுக்கு சிம்ம லக்னம், மகர ராசி. தொழில் ஸ்தானத்தில் சுக பாக்கியாதிபதி செவ்வாய்பகவான் திக்பலம் பெற்று அமர்ந்திருக்கிறார். தைரிய தொழில் ஸ்தானாதிபதி ஆறாம் வீட்டில் அயன ஸ்தானாதிபதியுடன் இணைந்திருக்கிறார். களத்திர ஸ்தானாதிபதி, ஆறாம் அதிபதி சனிபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். தற்சமயம் சனிபகவானின் தசை நடக்கிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பிறகு  மறுபடியும் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

 • என் மகள் தற்போது எம்.எஸ்.சி., படித்து வருகிறார். அவருக்கு அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது நடைபெறும்? ஜாதகத்தில் ஏதேனும் தோஷம் இருக்கிறதா?
  - வாசகர், கும்பகோணம்

 • உங்கள் மகளுக்கு மகர லக்னம், கன்னி ராசி. லக்னாதிபதி சுக ஸ்தானத்தில் அமர்ந்து நீச்சபங்க ராஜயோகம் பெறுகிறார். களத்திர ஸ்தானாதிபதி சுயசாரத்தில் அமர்ந்திருப்பதும் சுகாதிபதி சுக ஸ்தானத்தைப் பார்வை செய்வதும் சிறப்பு. சர்ப்ப தோஷம் உள்ளது. அரசு கிரகங்களான சூரியன், குரு, செவ்வாய், சனி பகவான்கள் சிறப்பான பலம் பெற்றிருப்பதால் அரசு அல்லது அரசு சார்ந்த வேலை இன்னும் இரண்டாண்டுகளுக்குள் கிடைக்கும். இந்த காலகட்டத்திற்குள் திருமணமும் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

 • எனது சகோதரியின் மகனுக்கு வயது 46. திருமணம் இன்னும் கைகூடவில்லை. நிறைய பரிகாரங்கள் செய்துள்ளோம். வேறு ஏதும் பரிகாரங்கள் செய்யவேண்டுமா? எதிர்காலம், தொழில் எவ்வாறு இருக்கும்? 
  - வாசகர், செங்கம்

 • உங்கள் சகோதரி மகனுக்கு ரிஷப லக்னம், மிதுன ராசி. லக்னாதிபதி நீச்சம் பெற்றிருந்தாலும் நீச்சபங்க ராஜயோகம் அடைகிறார். தனம் மற்றும் பூர்வபுண்ணியாதிபதியான புதபகவான் களத்திர, நட்பு ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். தர்மகர்மாதிபதியான சனி பகவான் லக்னத்தில் அமர்ந்திருக்கிறார். தற்சமயம் சனிபகவானின் தசையில் தைரிய ஸ்தானாதிபதியான சந்திரபகவானின் புக்தி நடக்கிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பிறகு படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

 • எனக்கு 39 வயதாகிறது. நான் மருத்துவம் சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரிந்து வந்தேன். ஆனால் என் மனம் பங்கு வர்த்தகத் துறையில் ஈடுபடவே விழைகிறது. பகுதி நேரமாக செய்து வருகிறேன். முழு நேரத் தொழிலாகச் செய்யலாம் என்று முடிவெடுத்து அதை செய்யத் தொடங்கியுள்ளேன். இது சரியான முடிவா? எனக்கு சிறப்பான யோகங்கள் உள்ளதாகக் கூறினார்கள். லக்னம் மற்றும் பத்தாம் வீடு எவ்வாறு உள்ளது? தனித்து செய்யவே விரும்புகிறேன். என் குடும்ப எதிர்காலம் எவ்வாறு உள்ளது? 
  - வாசகர், சென்னை

 • உங்களுக்கு விருச்சிக லக்னம், மீன ராசி, பூரட்டாதி நட்சத்திரம். பாக்கியாதிபதியான சந்திரபகவான் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் குருபகவானின் சாரத்தில் (பூரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான கடக ராசியை அடைகிறார். பாக்கியாதிபதி ராசியில் பூர்வபுண்ணிய ஸ்தானத்திலும் நவாம்சத்தில் ஆட்சி பெறுவதும் சிறப்பான தன யோகம் என்று கூறப்பட்டுள்ளது. அதுவும் அவர் பூர்வபுண்ணியாதிபதியின் சாரத்தில் அமர்ந்திருப்பதும் உன்னதமான அமைப்பாகும். ஒரு திரிகோணாதிபதி மற்றொரு திரிகோண ராசியில் அமர்ந்திருப்பதும் சிறப்பு. லக்னம் மற்றும் ருணம் ( கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி)  ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் கேதுபகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். செவ்வாய்பகவான் நான்காம் பார்வையாக லக்னத்தையும் ஏழாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும் எட்டாம் பார்வையாக பூர்வபுண்ணிய ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். லக்னாதிபதி லக்னத்தைப் பார்ப்பது அனைவருக்கும் நலமே செய்யும். இதனால் லக்னம் என்கிற உயிர் ஸ்தானம் பூஷ்டியாகும். இரண்டாம் வீட்டிற்கும்; ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் கேதுபகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். குருபகவானின் ஐந்தாம் பார்வை தன் ஆட்சி வீடான தன ஸ்தானத்தின் மீதும், சுகஸ்தானத்தின் மீதும் ஆறாம் வீட்டின் மீதும் படிகிறது. தன ஸ்தானத்தை தனாதிபதி பார்வை செய்வதால் பொருளாதாரத்தில் எக்காலத்திலும் தொய்வு ஏற்படாது என்று கூறவேண்டும். 
  செவ்வாய், குரு பகவான்கள் லக்னம், பூர்வபுண்ணியம் ஆகிய இரண்டு திரிகோணங்களுக்கு அதிபதியாகி தொழில் ஸ்தானமான  உச்ச கேந்திரத்தில் இணைந்திருப்பது சிறப்பாகும். அதோடு இவர்களின் இணைவு குருமங்கள யோகத்தையும் கொடுக்கிறது. இதில் மற்றொன்றையும் பார்க்க வேண்டும். குரு, செவ்வாய் பகவான்களின் இணைந்த பார்வை சுக ஸ்தானத்தின் மீது படிகிறது. செவ்வாய்பகவான் பத்தாம் வீட்டில் திக்பலம் பெறுவார். இதுவும் தொழில் ஸ்தானத்திற்கு வலுக்கூட்டும் அம்சமாகும். 
  தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சூரியபகவானின் சாரத்தில் (உத்திரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். சனிபகவானும் தன் மூலதிரிகோண வீடான கும்பராசியைப் பார்வை செய்கிறார். களத்திர, நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான  பன்னிரண்டாம்  வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் ஆறாம் வீட்டில் சுய சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் நீச்சமடைகிறார். எட்டாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் ராகுபகவானின் சாரத்தில் (சதய நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் இருக்கும் நிலை) அமர்ந்திருக்கிறார். தொழில் ஸ்தானாதிபதியான சூரியபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் குருபகவானின் சாரத்தில் (பூரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். சூரியபகவான் உச்ச கேந்திராதிபதியாகி திரிகோண ராசியில் அமர்ந்திருப்பது சிறப்பு. அதோடு, தர்மகர்மாதிபதிகள் (ஒன்பதாமதிபதியும் பத்தாமதிபதியும் இணைந்து இருப்பது) பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் பூர்வபுண்ணியாதிபதியான குருபகவானின் சாரத்தில் இணைந்து சிறப்பான தர்மகர்மாதிபதி யோகத்தைக் கொடுக்கிறார்கள். கேதுபகவான் சுக ஸ்தானத்தில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (அவிட்டம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். ராகுபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் கேதுபகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார்.
  பொதுவாக, ஒருவருக்கு லக்னாதிபதி ஒருவர் மட்டுமே பலம் பெற்றிருந்தால் போதுமானது. மற்ற இரண்டு திரிகோணாதிபதிகள் ஏறத்தாழ பலம் குறைந்திருந்தாலும் வாழ்க்கை என்னும் படகு பெரிய பாதிப்பு என்று எதுவும் இல்லாமல் இக்கரையிலிருந்து மறுகரைக்குச் சென்று விடும். உங்களுக்கு செவ்வாய்பகவான் லக்னாதிபதியாகிறார். அவர் உடல் உறுதிக்கும், மன உறுதிக்கும் காரகராகிறார். வீரம் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைவதால் போட்டி பந்தயங்களிலும் வெற்றி பெறச் செய்வார். ரத்தத்திற்கு காரகம் பெறுவதால் மிகப் பெரிய அறுவை சிகிச்சை நிபுணராகச் செய்வார். இவர் பூமிகாரகராக ஆவதால் செவ்வாய்பகவான் வலுத்தவர்களுக்கு அசையாச் சொத்துகள் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும் நிலத்தில் முதலீடு முதலீடு செய்தால் எக்காலத்திலும் நஷ்டம் என்று எதுவும் ஏற்படாது. செவ்வாய்பகவான் நெருப்பு கிரகமாவார். அதனால் உணவு சம்பந்தப்பட்ட தொழில்கள், மளிகை தாமிரம் போன்ற தொழில்கள் மூலமும் வருமானம் கிடைக்கும்.
  உங்களுக்கு செவ்வாய்பகவான் பத்தாம் வீட்டில் திக்பலம் பெற்று வலுவாக அமர்ந்திருப்பதால் செய்தொழில்  ஏற்றமாகவே அமையும். செவ்வாய்பகவானுடன் பத்தாம் வீட்டிற்குக் காரகத்துவம் உடைய சனிபகவானும் இணைந்திருக்கிறார். இவர்களுடன் சனிபகவானைப் போல் பலன் கொடுக்கும் ராகுபகவானும் அமர்ந்திருக்கிறார். இவர்களோடு அனைத்திற்கும் முத்தாய்ப்பாக குருபகவானும் பத்தாம் வீட்டில் சிறப்பான பலத்துடன் அமர்ந்திருப்பதால் குருபகவான் சம்பந்தப்பட்ட தொழிலையும் செய்யலாம். குருபகவான் தன காரகராகி தனம் சம்பந்தப்பட்ட இனங்களிலிருந்து வருமானம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல், பங்கு சந்தை, பொருள்கள் சந்தை, பொன் ஆகியவற்றில் குருபகவானின் பங்கு உண்டு. குறிப்பாகச் சொல்லப்போனால் பணம் சம்பந்தப்பட்ட இனங்கள் அனைத்திலும் குருபகவானின் காரகத்துவம் உண்டு என்று கூறவேண்டும். விவசாயத்தில் மஞ்சள் நிறப் பொருள்களாலும் வருமானம் ஈட்டலாம். பெட்ரோலியப் பொருள்களுக்கும் குருபகவானே காரணமாகிறார். தொழில் ஸ்தானம் வலுவாகவே உள்ளதால் ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களிலிருந்தும் வருமானம் கிடைக்கும். நீதித்துறை மற்றும் பொதுத்தொண்டு, அறக்கட்டளைகளை நிர்வகிப்பவர்களுக்கு குருபகவானின் அருள் இயற்கையிலேயே உண்டு.
  பொதுவாக, குரு, செவ்வாய், சந்திர பகவான்கள் வலுத்திருப்பதால் சுயதொழில் செய்யலாம்.  கேதுபகவான் சுகஸ்தானமான நான்காம் வீட்டில் (கேந்திரம்) செவ்வாய்பகவானின் சாரத்தில் வலுவாக அமர்ந்திருப்பது சிறப்பு.  செவ்வாய்பகவானின் பலனை தரக்கூடிய சக்தி கேதுபகவானுக்கு உண்டு. (குஜவத் கேது என்பது ஜோதிட வழக்கு) மேலும் செவ்வாய்பகவானுக்கு பத்தாம் வீட்டோடு தொடர்பு உள்ளதாலும் கேதுமகா தசையில் தொழில் ரீதியாக முன்னேற்றம் காண
  முடியும். ராகுபுக்தி முடிந்தவுடன் அதாவது, அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குப்பிறகு சிறப்பான வளர்ச்சி உண்டாகும். விநாயகப் பெருமானையும் முருகப்பெருமானையும் கேது மகா தசை முழுவதும் வழிபட்டு வரவும். எதிர்
  காலம் வளமாக அமையும்.


   

ராசி பலன்கள்

 • அதிகம்
  படிக்கப்பட்டவை
 • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை