Enable Javscript for better performance
எனக்கு அறுபது வயதாகிறது. இருபத்து ஐந்து வருடத்திற்கு மேலாக என்னை விட்டுப் பிரிந்து வாழும் என் மனைவி- Dinamani

சுடச்சுட

    

    எனக்கு அறுபது வயதாகிறது. இருபத்து ஐந்து வருடத்திற்கு மேலாக என்னை விட்டுப் பிரிந்து வாழும் என் மனைவி தற்போது விவாகரத்து வழக்கு போட்டுள்ளார். இது எப்படி முடியும்? என் தொழில், வீடு எப்படி உள்ளது? அதில் அபிவிருத்தி அடைவேனா? என் மகனுக்கு திருமணம் செய்து பேரன், பேத்தியுடன் அந்திமக் காலத்தைக் கடத்த வேண்டும். என் மகனின் வாழ்க்கை சிறப்பாக இருக்குமா? சூரியதசை எவ்வாறு இருக்கும்? என் இறுதிக் காலம் எவ்வாறு இருக்கும்? பரிகாரம் செய்ய வேண்டுமா?  - வாசகர்

    Published on : 18th May 2018 09:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்களுக்கு ரிஷப லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். தைரிய ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் லாப ஸ்தானத்தில் சனிபகவானின் சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். லக்னத்திற்கும் ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் லாப ஸ்தானத்தில் சனிபகவானின் சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். தனம் வாக்கு குடும்பம் ஆகிய இரண்டாம் வீட்டிற்கும் பூர்வபுண்ணியம் புத்திரம் புத்தி ஸ்தானங்களுக்கு அதிபதியான புதபகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் கேதுபகவானின் சாரத்தில் (அசுவினி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். தர்மகர்மாதிபதி அதாவது ஒன்பது பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் கேதுபகவானின் சாரத்தில் (மூலம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைந்து நீச்சம் பெறுகிறார். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கு அதிபதியான சூரியபகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் சுயசாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். களத்திர நட்பு ஸ்தானம் மற்றும் அயன ஸ்தானங்களான ஏழு மற்றும் பன்னிரண்டாம் வீடுகளுக்கு அதிபதியான செவ்வாய்பகவான் பத்தாம் வீட்டில் ராகுபகவானின் சாரத்தில் (சதய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். அஷ்டம லாப ஸ்தானமான எட்டு மற்றும் பதினொன்றாம் வீடுகளுக்கு அதிபதியான குருபகவான் ஆறாம் வீடான ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானத்தில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (சித்திரை நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமர்ந்திருக்கும் நிலை) அமர்ந்திருக்கிறார். ராகுபகவான் ஆறாம் வீட்டில் சுய சாரத்தில் (சுவாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். கேதுபகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் சுயசாரத்தில் (அசுவினி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார்.
     உங்களுக்கு தொழில் ஸ்தானத்தில் செவ்வாய்பகவான் திக்பலம் பெற்று அமர்ந்திருக்கிறார். செவ்வாய்பகவான் களத்திரம் நட்பு மற்றும் விரய ஸ்தானத்திற்கும் அதிபதியாகிறார். அவர் லக்ன சுபரான ராகுபகவானின் சாரத்தில்அமர்ந்திருக்கிறார். அவர் ஒரு கேந்திர ராசிக்கும் மறைவு ராசிக்கும் அதிபதியாவதால் "அரை சுபர்' என்று கூறுவர். அதனால் செவ்வாய்பகவான் களத்திரம் (கணவன்/ மனைவி) மூலம் நன்மையும் சில நேரங்களில் தவிர்க்க முடியாத விரயங்களையும் (செலவுகளையும்) கொடுத்து விடுவார் என்றும் புரிந்து கொள்ள வேண்டும். மற்றபடி அசுபக்கிரகங்கள் கேந்திர வீடுகளில் (1,4,7,10) இருந்தால் சிறப்பான நன்மைகளைச் செய்வார்கள் என்றும் உள்ளது. அதனால் செவ்வாய்பகவானை லக்ன சுபர் என்றே பெருமளவுக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
     பொதுவாக, கடன், வியாதி, சண்டைச் சச்சரவு ஆகியவற்றிற்கு லக்னாதிபதிக்கும் ஆறாமதிபதிக்கும் இருக்கும் சுப அசுப பலத்தைச் சமன் செய்து சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்பது விதி. உங்களுக்கு லக்னாதிபதியே ஆறாம் வீட்டிற்கும் அதிபதியாகி லாப ஸ்தானத்தில் தர்ம கர்மாதிபதியான சனிபகவானின் சாரத்தில் உச்சம் பெற்றிருப்பது சிறப்பாகும். இதனால் லக்னாதிபதியும் ஆறாமதிபதியும் சமமாக பலம் பெற்றிருக்கிறார்கள் என்று பொதுவாகக் கூறினாலும் ஆறாம் வீட்டிற்கு உண்டான காரகத்திற்கு முழுமையான பலம் கிடைத்திருப்பதை சுப பலமாக ஏற்றுக் கொள்ள முடியாது. இதனால் நீங்கள் உங்கள் மனைவியால் வழக்கு ஏற்பட்டாலும் அதில் வெற்றியடைந்து விடுவீர்கள். பண நஷ்டம் என்று எதுவும் ஏற்படாது. லக்னாதிபதி உச்சம் பெற்றிருப்பதால் சமூகத்தில் உங்கள் பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து ஆகியவைகள் எக்காலத்திலும் பாதிப்படையாது என்றும் கூற வேண்டும்.
     உங்களுக்கு பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியான புதபகவான் விரய ஸ்தானத்தில் இருப்பதும் சிறு குறை. மற்றபடி பஞ்சம திரிகோணாதிபதி எந்த இடத்தில் இருந்தாலும் தன் பலத்தை இழக்கமாட்டார். அதோடு அவர், மற்றொரு கேந்திராதிபதியுடன் இணைந்திருக்கிறார். இதனால் புத ஆதிதிய யோகம் உண்டாகிறது. மேலும் குருபகவானும் புத்திரகாரகராகி புத்திர ஸ்தானாதிபதியைப் பார்வை செய்கிறார். இதனால் புத்திர ஸ்தானாதிபதிக்கு பலம் கூடுகிறது. குருபகவானுடன் ராகுபகவானும் புத ஆதித்யர்களுடன் கேதுபகவானும் இணைந்திருப்பதால் உங்கள் மகனின் வாழ்க்கையில் அவ்வப்போது சிறிய தடைகளும் சஞ்சலங்களும் உண்டாகும் என்றும் கூற வேண்டியுள்ளது. அதேநேரம் பெரிய பாதிப்பு என்று எதுவும் ஏற்படாது. ஆயுள் ஸ்தானாதிபதி விபரீத ராஜயோகம் பெற்று வர்கோத்தமத்தில் இருக்கிறார். ஆயுள் காரகரும் தர்மகர்மாதிபதியுமான சனிபகவான் ஆயுள் ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும் சிறப்பாகும்.
     இதனால் தீர்க்காயுள் உண்டு.
     ஆரோக்கிய ஸ்தானாதிபதியுமான சுக்கிரபகவான் உச்சம் பெற்றிருப்பதால் பெரிய உடலுபாதை என்று எதுவும் ஏற்படாது. அவ்வப்போது சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டாலும் விரைவில் அதிலிருந்து விடுபட்டுவீர்கள். சூரியபகவான் ரிஷப லக்னத்திற்கு சுக ஸ்தானமான கேந்திர ராசிக்கு அதிபதியாக வருவதால் லக்ன சுபராகவே கருதப்படுகிறார். அதனால் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் வழக்கில் வெற்றி பெற்று விடுவீர்கள். மேலும் சூரியபகவானும் சுயசாரத்தில் அமர்ந்திருப்பதும் சிறப்பு. அதனால் சூரிய தசையில் பிற்பகுதியில் அவர் உங்கள் வாழ்க்கையில் நிறைவை உண்டாக்கி விடுவார் என்று உறுதியாகக் கூறலாம். தொடரும் தைரிய ஸ்தானாதிபதியான சந்திரபகவானின் தசையும் சிறப்பாகவே செல்லும் என்று கூறவேண்டும். மற்றபடி தனித்தே எவருடனும் கூட்டு சேராமல் சொந்தத் தொழில் செய்யலாம். இறுதிக்காலம் சிறப்பாகக் கழியும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai