நான் வெளிநாட்டில் 14 வருடங்களாகப் பணிபுரிகிறேன். சொந்தத் தொழில் செய்ய வேண்டுமென்கிற அவா மிகுதியாக உள்ளது. தொழில் ஸ்தானாதிபதி எட்டாம் வீட்டில் இருப்பது குறையா? பத்தாம் வீட்டில் குருபகவான் இருந்தால் சொந்தத் தொழில் செய்யக்கூடாதா? இன்னும் இரண்டாண்டுகளில் சுக்கிர தசை வர உள்ளது. ஆரோக்கியம் எவ்வாறு இருக்கும்? பழைய ஜாதகத்தில் தசா புக்திகளை சுக்கிர தசையுடன் நிறுத்தி விட்டார்கள். ஆயுளை சூசகமாக குறிப்பிட்டுள்ளார்களா என்று கூறவும். என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - வாசகர்

உங்களுக்கு கன்னி லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். லாபாதிபதியான சந்திரபகவான் ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில்(பூரட்டாதி நட்சத்திரம்)

உங்களுக்கு கன்னி லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். லாபாதிபதியான சந்திரபகவான் ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில்(பூரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். லக்னம் மற்றும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். பொதுவாக, சுபகிரகங்கள் கேந்திர ராசிகளுக்கு அதிபதிகளாக வந்தால் அந்த கிரகங்களுக்கு கேந்திராதிபத்ய தோஷம் உண்டாகும் என்று உள்ளது. கேந்திராதிபத்ய தோஷம் பெறும் கிரகம் லக்னாதிபதியாக அமைந்தால் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கிவிடும் என்பது முதல் விதி விலக்காகும். மற்றபடி இந்த கிரகங்கள் 3, 6, 8, 12 -ஆம் வீடுகளில் மறைவு பெற்றிருந்தாலோ அல்லது அசுபக்கிரகங்களுடன் இணைந்தோ, பார்க்கப்பட்டோ இருந்தால் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கிவிடும். உங்களுக்கு புதபகவான் லக்னாதிபதியாக ஆவதாலும், மறைவு பெற்றிருந்தாலும் இரண்டு வகையிலும் அவருக்கு கேந்திராதிபத்ய தோஷம் நீங்கி விடுகிறது.
 பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் சுய சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். தனம் வாக்கு குடும்ப ஸ்தானமாகிய இரண்டாம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் புதபகவானின் சாரத்தில் (ரேவதி நட்சத்திரம்) உச்சம் பெற்று அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். தனாதிபதியும், பாக்கியாதிபதியும் உச்சம் பெற்றிருப்பது சிறப்பாகும். இது ஒரு பலமான தனயோகம் என்றும் கூறவேண்டும்.
 தைரிய முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) மூலதிரிகோணம் பெற்று அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். எட்டாம் வீடு மறைவு ஸ்தானமாக இருந்தாலும் அதை புதையல் ஸ்தானம் என்றும் கூற வேண்டும். எட்டாம் வீடு வலுத்தவர்களுக்கு எதிரிகளின் சொத்து கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது மற்றவர்களால் நடத்த முடியாமல் நின்றுவிட்ட தொழிலை ஏற்று நடத்தும் யோகம் உண்டாகும். உங்களுக்கு அஷ்டமாதிபதி ராசியிலும் நவாம்சத்திலும் அதிபலம் பெற்றிருப்பது மேன்மையாகும். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் ராகுபகவானின் சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் மூலதிரிகோண வீடான தனுசு ராசியை அடைகிறார்.
 அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கு அதிபதியான சூரியபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சுயசாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) உச்சம் பெற்று அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். கேதுபகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (விசாக நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். ராகுபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சூரியபகவானின் சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார். குருபகவானின் ஐந்தாம் பார்வை தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டின் மீதும் ஏழாம் பார்வை சுக ஸ்தானமான நான்காம் வீட்டின் மீதும் ஒன்பதாம் பார்வை ஆறாம் வீட்டின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் லாபாதிபதியான சந்திரபகவானின் மீதும் படிகிறது. இதனால் குருசந்திர யோகம் உண்டாகிறது. குருசந்திர யோகம் அமையப் பெற்றவர்கள் தாங்கள் சார்ந்துள்ள துறைக்கு சம்பந்தமில்லாத மற்றொரு துறையில் ஈடுபட்டும் வெற்றி பெறுவார்கள்.
 தொழில் ஸ்தானாதிபதி புதபகவான் கல்விக்காரகராவார்.வியாபாரத்திற்கும் புதபகவான் காரணமாகிறார். பலம் பெற்றுள்ள புதன் தொழில் நிர்வாகத்தில் மேன்மையை தருவார். தன் மூலமாகவும் தான் அமர்ந்திருக்கும் வீட்டின் அதிபதி மூலமாகவும் தன்னுடன் இணைந்திருக்கும் கிரகங்களின் மூலமாகவும் நற்பலன்களை உண்டாகுவார் என்றும் கூறவேண்டும்.
 எட்டாமிடம் நீண்ட ஆயுளைக் கொடுக்கும். இந்த எட்டாமிடம் மற்றையோர் எட்டிப்பிடிக்காத அளவுக்கு உயர்ந்த சாதனைகள் செய்கின்ற இடமாகவும் அமைகிறது. இந்த வீட்டின் அதிபதி வலுத்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் திடீர் முன்னேற்றம் உண்டாகும். அதோடு, தனகாரகராகிய குருபகவானின் சுப ஆதிக்கம் இருந்தால் எப்படியும் பொருள் வந்து சேர்ந்து விடும். உங்களுக்கு எட்டாமிடம் அதிவலுவாக உள்ளதால் நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைத்துவிடும். சந்திரபகவானை குருபகவான் பார்வை செய்வதால் மனவளமும் கூடும். குழப்பங்கள் எதுவும் ஏற்படாமல் தெளிந்த மனதுடன் செயலாற்றுவீர்கள். குருபகவான் தொழில் ஸ்தானத்தில் வலுத்திருப்பவர்கள் தனித்து செய்யும் தொழில்களில் முன்னேற்றமடைவார்கள். அறிவாற்றலுடனும் யுக்தியுடனும் காரியங்களைச் செய்து வெற்றி பெறுவீர்கள்.
 பூர்வபுண்ணியாதிபதியான சனிபகவான் உச்சம் பெற்றுள்ள பாக்கியாதிபதியுடன் ஏழாம் வீட்டில் திக்பலம் பெற்று லக்னத்தைப் பார்வை செய்கிறார். இது மகா கீர்த்தி யோகமாகும். மேலும் கன்னி லக்னத்திற்கு சுக்கிரபகவான் முதல்தர யோக காரகர் ஆவார். பொதுவாக, சுப கிரகங்களுக்கு திரிகோணாதிபத்யம் ஏற்படுவது சிறப்பாகும். அதோடு, அவர் உச்சம் பெற்றிருப்பது சிறிய அளவு முயற்சியில் பெரிய வெற்றிகளை ஈட்டுவீர்கள் என்றால் மிகையாகாது. சந்திரபகவானுக்கு தனு (உடல்) காரகர் என்கிற பெயரும் உண்டு. அவர் ஆரோக்கிய ஸ்தானத்தில் குருபகவானின் சாரத்தில் அமர்ந்து குருபகவானால் பார்க்கப்படுவதால் ஆரோக்கியமாக வாழும் நிலை உண்டாகும். சனிபகவான் சுப பலத்துடன் இருப்பதால் தீர்க்காயுளுக்கு எந்தக் குறையும் வராது. தற்சமயம் நடக்கும் கேது மகாதசையின் இறுதியில் அதாவது இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்குப்பிறகு சொந்தத் தொழிலில் ஈடுபடுவீர்கள். சுக்கிர மகாதசை சிறப்பான யோக தசையாகச் செல்லும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com