எனக்கு 48 வயதாகிறது. கடந்த 20 வருடங்களாக அமெரிக்காவில் வசிக்கிறேன். எனக்கு சுக்கிர தசை முடியப்போகிறது. இன்னும் கிரீன் கார்டு கிடைக்கவில்லை. நிரந்தரமாக ஓரிடத்தில் வசிக்க முடியாமல் ஊர் ஊராக சுற்றி வருகிறேன். தொழில் ஸ்தானத்தில் இரண்டு கிரகங்கள் திக் பலம் பெற்றிருந்தாலும் நிரந்தர வருமானம் இல்லை. எட்டாமதிபதி பத்தில் இருப்பது குறையா? என் ஒரே மகனின் வாழ்க்கை சிறப்பாக அமையுமா? எப்பொழுது சொந்த வீடு வாங்குவேன்? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா? - வாசகர், அமெரிக்கா

உங்களுக்கு கன்னியா லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். லாபாதிபதியான சந்திரபகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்)

உங்களுக்கு கன்னியா லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். லாபாதிபதியான சந்திரபகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். சந்திரபகவான் தாய் காரகராகிறார். அன்னை காரகர் நட்பு ஸ்தானத்தில் இருப்பது அன்னையின் நலத்திற்கு உகந்தது. சந்திரபகவான் கற்பனைகளுக்கும் புதிய படைப்புகளுக்கும் காரணமாகிறார். அதனால் செய்ததொழிலில் புதிய யுக்திகளைச் சர்வசாதாரணமாகப் புகுத்துபவர்களாக இருப்பார்கள். இவர்கள் எழுத்து, ஓவியம், போட்டோகிராபி, அல்லது நவீன விஞ்ஞானத் துறைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். கணினி சம்பந்தப்பட்ட துறையிலும் கற்பனையினால் புதிய யுக்திகளைப் புகுத்தி மென்பொருள் கருவிகளை உருவாக்கலாம். பதினொன்றாம் வீட்டைக் கொண்டு மூத்த உடன்பிறந்தோர், பெரிய நிறுவனங்கள், உயர்ந்த லட்சியங்கள், நண்பர்கள், சமூகத்தில் உயர்ந்தவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது ஆகியவற்றை அறியலாம். லாபாதிபதி களத்திர ஸ்தானத்தில் இருப்பதால் மனைவியின் மூலம் வருமானமும் மணவாழ்க்கையில் உயர்வும் மேன்மையும் உண்டாகும். லக்னம் மற்றும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (மிருகசீரிஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார்.
 லக்னாதிபதி ராசியிலும் நவாம்சத்திலும் வலுவாக இருப்பது சிறப்பாகும். பொதுவாக, இத்தகையோர்களை வாழப்பிறந்தவர்கள் என்று கூறலாம். தொழில் ஸ்தானாதிபதி தன் ஸ்தானத்திற்கு விரயத்தில் அமர்ந்திருப்பதை குறை என்று கூறமுடியாது. பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) நீச்சம் பெற்று நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் லாப ஸ்தானத்தில் புதபகவானின் சாரத்தில் (ஆயில்ய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார்.
 தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (புனர்பூச நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (சித்திரை நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும்) ஒரே ராசியில் இருக்கும் நிலை) அமர்ந்திருக்கிறார். அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கு அதிபதியான சூரியபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் ராகுபகவானின் சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார். ராகுபகவான் ஆறாம் வீட்டில் சுய சாரத்தில் (சதய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார். கேதுபகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் சுய சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். பன்னிரண்டாம் வீட்டில் கேதுபகவான் இருப்பதை மறுபிறவி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இத்தகையோருக்கு ஆன்மிகத்திலும் தத்துவத்திலும் பொது காரியங்களிலும் தன்னலமற்ற சேவைகளிலும் ஈடுபாடு இயற்கையிலேயே அமையும் என்றும் கூறவேண்டும்.
 பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சூரிய, செவ்வாய் பகவான்கள் திக் பலம் பெற்றிருக்கிறார்கள். இந்த திக்பலம் என்பது ஷட் (ஆறு) பலம் என்கிற ஆறு வகை பலத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப் படுகிறது. லக்னத்தில் குரு, புத பகவான்களும், சந்திர, சுக்கிர பகவான்கள் நான்காம் வீட்டிலும் ஏழாம் வீட்டில் சனிபகவானும் பத்தாம் வீட்டில் சூரிய, செவ்வாய் பகவான்களும் அமர்ந்திருந்தால் திக்பலம் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் உங்களுக்கு தொழில் ஸ்தானம் சிறப் பாக அமைந்திருக்கிறது என்று கூறவேண்டும். பத்தாம் வீட்டுக்குரிய புதபகவானும் இரண்டாம் வீட்டுக்கு அதிபதியாகி சுக்கிரபகவானும் பத்தாம் வீட்டுக்கு இருபுறமும் அமர்ந்திருப்பதால் பத்தாம் வீட்டிற்கு சுபகர்த்தாரி யோகம் உண்டாகிறது. இதனால் உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை எட்டி விடுவீர்கள். சொந்தத் தொழிலும் லாபம் தரும். அதில் விசேஷமான வளர்ச்சியும் காணலாம்.
 எட்டாமதிபதி பத்தில் திக்பலம் பெற்றிருப்பதால் நண்பர்களால் நடத்த முடியாமல் விட்டுச் சென்ற தொழிலை ஏற்று நடத்தி சாதனை செய்யும் யோகமும் உண்டாகும். இத்தகையோருக்கு அதற்கு முதலில் அந்த தொழிலைப் பற்றி எதுவும் தெரியாமல் கூட இருக்க வாய்ப்புள்ளது. தைரியத்திற்கு செவ்வாய்பகவான் காரகராகிறார். இந்த சூரிய, செவ்வாய் பகவான்கள் ராஜகிரகங்களாக ஆகி, மற்றொரப ராஜ கிரகமான குருபகவானால் பார்க்கப் படுவதால் அரசாங்க ப்ராஜெட்களும் கிடைக்கும். குருபகவானின் ஐந்தாம் பார்வை ஆறாம் வீட்டிலுள்ள ராகுபகவானின் மீது படிவதால் இதனால் வாழ்க்கையில் செய்தொழிலில் பெரிய எதிரிகள் என்று எவரும் உருவாக மாட்டார்கள். அப்படி உருவானாலும் அவர்களை சுலபமாக வெற்றி கொண்டு விடுவீர்கள். குருபகவானின் ஏழாம் பார்வை நீச்சபங்க ராஜயோகம் பெற்ற சனிபகவானின் மீது படிகிறது. பூர்வபுண்ணிய புத்திர , புத்தி, ஆறு மற்றும் ஆயுள் காரகரான சனிபகவானை குருபகவான் பார்வை செய்வதால் உங்கள் மகனும் வாழ்க்கையில் நல்ல நிலையை எட்டி விடுவார். தீர்க்காயுள் உண்டு.
 குருபகவான் கன்னி லக்னத்திற்கு கேந்திராதிபத்ய தோஷம், பாதகாதிபத்ய தோஷம் மற்றும் மாரகாதிபத்ய தோஷம் ஆகிய முப்பெரும் தோஷங்களைப் பெறுவார் என்பது ஜோதிடவிதி. இதற்கு பல விதி விலக்குகள் உள்ளன. கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகத்தை ஒர் அசுப கிரகம் பார்த்தாலோ அல்லது சேர்ந்தாலோ கேந்திராதிபத்ய தோஷம் நீங்கி விடும் என்பது ஒரு விதி விலக்கு. இதனால் குருபகவானுக்கு மேற்கூறிய மூன்று தோஷங்களும் விலகி விட்டது என்று கூற வேண்டும். மேலும் குருபகவான் வர்கோத்தமம் பெற்றிருப்பதால் குருபகவானால் விளையக்கூடிய நன்மைகள் சுபமாகவே கிடைக்கும். சனிபகவான் விபரீத ராஜயோகத்தைப் பெறுவதால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கிடைக்கும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவில் நிரந்தர குடியிருப்புக்கான அட்டை கிடைத்துவிடும். சூரிய மஹா தசையில் முதல் ஒன்றரை ஆண்டுகள் கழிந்தவுடன் சொந்த வீடு வாங்குவீர்கள். எதிர்காலம் வளமாக அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com