நாங்கள்10 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கப் பிரஜைகளாகி விட்டோம். அங்கே கணிதம் சம்பந்தப்பட்ட கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டே கணிதம் சம்பந்தப்பட்ட நூல்கள் எழுதினேன். நல்ல வருமானமும் வரவேற்பும் கிடைத்தது. வாழ்க்கையும் சீராகவே ஓடிக்கொண்டிருந்தது. எட்டு மாதங்களுக்கு முன்பு  கணவருடன் ஏற்பட்ட சிறிய வாக்குவாதத்தால் அவர் என்னை விட்டுப்  பிரிந்து விட்டார். நான் இந்தியா வந்து என் பெற்றோருடன் இருக்கிறேன். கணவருடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன். இந்த எட்டு மாதங்களில் நிறைய பணம் விரயமாகி விட்டது.

உங்களுக்கு ரிஷப லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். தைரிய ஸ்தானாதிபதியான சந்திரபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகுபகவானின் சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) அமர்ந்து

உங்களுக்கு ரிஷப லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். தைரிய ஸ்தானாதிபதியான சந்திரபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகுபகவானின் சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். லக்னம் மற்றும் ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சூரியபகவானின் சாரத்தில் (உத்திராடம் நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் இருக்கும் நிலை) விபரீத ராஜயோகம் பெற்றிருக்கிறார். ஒரு ஜாதகத்திற்கு லக்னாதிபதி எந்த விதத்திலாவது சிறப்பாக பலம் பெற்றிருந்தால் அந்த ஜாதகர் தன் வாழ்க்கையை சீராக அமைத்துக் கொள்வார். அதாவது, லக்னாதிபதி ஆட்சி, உச்சம், மூலதிரிகோணம், கேந்திரம், திரிகோண ஸ்தானங்கள், விபரீத ராஜயோகம்,  நீச்சபங்க ராஜயோகம், கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப் பெறுதல், நட்பு ராசிகளில் இருத்தல் ஆகிய எந்த வகையிலாவது சுப பலம் பெற்றிருக்கவேண்டும்.  இப்படி அமைந்து விட்டாலே அவருக்கு வாழ்க்கையில் கிடைக்கக்கூடிய அடிப்படை வசதிகள் அனைத்தும் இறுதிவரை தடையின்றி கிடைத்துவிடும் என்று கூறவேண்டும். தனம் வாக்கு குடும்ப ஸ்தானமாகிய இரண்டாம் வீட்டிற்கும்  பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சூரியபகவானின் சாரத்தில் (உத்திராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கு அதிபதியான சூரியபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (அவிட்டம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் லக்னத்தில் சுயசாரத்தில் (மிருகசீரிஷம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் லாப ஸ்தானத்தில் புதபகவானின் சாரத்தில் (ரேவதி நட்சத்திரம்) ஆட்சி பெற்று வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார். பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் ரிஷப லக்னத்திற்கு அவர் ஒருவரே தர்மகர்மாதிபதியாவதால் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சுயசாரத்தில் (பூசம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். ராகுபகவான் ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு) (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (விசாக நட்சத்திரம்) அமர்ந்து  நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார்.  கேதுபகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். 
பொதுவாக, ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் சிறப்பாக வாழ்வார்கள் என்பது ஜோதிடக் கருத்தாகும். அனைத்து அடிப்படை வசதிகளும் ஓரளவுக்கு நல்ல முறையில் கிடைத்துவிடும். இதற்குக்காரணம், 4,7,10 ஆம் வீடுகளுக்குரிய கிரகங்கள் சுபாவ அசுபக் கிரகங்களாக அமைந்து கேந்திராதிபத்ய தோஷம் அடிபட்டு போய் விடுவதால்தான் என்று புரிந்துகொள்ள வேண்டும். நான்காம் வீட்டிற்கு அதிபதியான சூரியபகவான் லக்னாதிபதிக்கு பகை கிரகமாக இருந்தாலும் சுபாவ அசுபக்கிரகமாக ஆவதால் ரிஷப லக்னக்காரர்களுக்கு நன்மை செய்யக் கடமைப்பட்டவராகிறார். நான்காம் வீட்டின் அதிபதியான சூரியபகவான் பாக்கிய ஸ்தானத்தில் பலம் பெற்று அமர்ந்திருப்பதால் சொந்த வீடு வாகனம் உண்டு. சொத்துகளாலும் வருமானம் கிடைக்கும்.
ரிஷப லக்னத்திற்கு ஏழாம் வீடான களத்திர நட்பு ஸ்தானத்திற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் அரை சுபராகவே கருதப்படுகிறார். அதனால் செவ்வாய்பகவானுக்கு சரியான சமதோஷம் பார்த்து திருமணம் செய்தால்தான் மணவாழ்க்கை சோககீதமாக ஆகாமல் சுப கானமாக அமையும் என்பதனையும் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். உங்களுக்கு ஏழாம் வீட்டுக்கதிபதிபதியான செவ்வாய்பகவான் ஒரு கேந்திர ஸ்தானத்திற்கு அதிபதியாகி மற்றொரு கேந்திர ஸ்தானத்தில் அதுவும் சுயசாரத்தில் அமர்ந்திருக்கிறார். செவ்வாய்பகவானின் பார்வை சுக ஸ்தானத்தின் மீதும் களத்திர ஸ்தானத்தின் மீதும் அஷ்டம ஸ்தானத்தின் மீதும் படிகிறது. ஒரு பாவாதிபதி  தன் பாவத்தைப் பார்வை செய்வது சிறப்பாகும். இதனடிப்படையில் பார்க்கும்பொழுது உங்களுக்கு மணவாழ்க்கையில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டாலும் அதனால் பெரிய பாதிப்பு என்று எதுவும் ஏற்படாது என்று கூறமுடிகிறது. 
தனம் மற்றும் பூர்வபுண்ணியாதிபதியான புதபகவான் பாக்கிய ஸ்தானத்தில் சுகாதிபதியுடன் சுகாதிபதியின் சாரத்தில் இணைந்திருக்கிறார். இது கேந்திராதிபதி மற்றும் ஒரு திரிகோணாதிபதிகளின் இணைவு. பாதரசத்திற்கு புதபகவான் காரகமாகிறார். இதை திரவ உலோகம் என்பார்கள். இதை தமிழில் விரைவான வெள்ளி (க்விக் சில்வர்) என்பார்கள். புதபகவான் உடல் ரீதியிலும் மனரீதியிலும் வேகமானவர். ஆனாலும் செயல்பாடு நிதானமே. புதபகவானின் ஆதிக்கச் சக்தி உண்டானால் கூர்மையான புத்தியையும் எளிதில் எதையும் புரிந்து கொள்ளும் வல்லமையையும் முக்கியமாக வியாபார உலகில் கோலோச்சும் ஆவலையும் அளிப்பார். மேலும் வாக்குவன்மையுடன் பேச்சுவார்த்தை, பரிவர்த்தனைகளில் சாமர்த்தியம் உண்டாகும். மனித விருப்பு வெறுப்புகளைப் புரிந்துகொண்டு நுட்பமான ஒப்பந்தங்களை உருவாக்கவும் வளர்ப்பதும் பிறரை நம்ப வைப்பதும் சமயோசிதமாக நடந்துகொள்வதற்கும் காரணமாகிறார். 
தற்சமயம் உங்களுக்கு புதபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. அதனால் நீங்கள் கணிதம் சம்பந்தப்பட்ட புத்தகம் எழுதுவது அதன் விற்பனை மூலம் வருமானம் பெறுவதற்கு சிறப்பான சாத்தியக் கூறுகள் உள்ளன. உங்கள் நூல்களுக்கு பதிப்புரிமை பெறுவதால் அதன்மூலமும் நிரந்தர வருமானம் கிடைக்கும்.  பகுதி நேரமாக பாடம் சொல்லியும் கொடுக்கலாம். ஐந்தாம் வீட்டுக்கதிபதியான புதபகவான் வலுத்திருப்பதால் இழந்த பொருளை மீட்டு வருவீர்கள். ஐந்தாம் வீட்டை லாப ஸ்தானத்தில் ஆட்சிப்பெற்றுள்ள குருபகவான் பார்வை செய்வதால் திடீர் விரயம் என்று எதுவும் ஏற்படாமல் பொருளாதாரம் மேன்மையாகவே செல்லும்.  அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை சுயபுக்தி நடக்கும்.  இந்த ஆண்டு இறுதிக்குள் கணவருடன் இணைந்துவிடுவீர்கள். ஜீவன ஸ்தானாதிபதி சனிபகவான் மூன்றாம் வீட்டில் குருபகவானின் பார்வையில் இருப்பதால் செல்வம் செல்வாக்கு படிப்படியாக விருத்தியடையும். தைரியத்திற்குக் குறைவும் உண்டாகாது. குடும்பப்பற்று பாசத்தில் முன்னோடியாக திகழும் வாய்ப்புண்டாகும். தகுதிக்கு மீறிய பெரிய மனிதர்களின்  நட்பு கிடைக்கும். இதன் மூலம் உங்கள் வாழ்க்கையையும் தொழிலையம் செம்மையாக்கிக் கொள்வீர்கள். பிரதி புதன் கிழமைகளில் ஸ்ரீ ராமபிரானை வழிபட்டு வரவும். தினமும் முடிந்த அளவுக்கு " ஸ்ரீ ராமஜெயம்' என்று எழுதி வரவும். எதிர்காலம் ஒளிமயமாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com