எனக்கு 53 வயதாகிறது. என் பெற்றோருக்கு 87, 81 வயதாகிறது. என் பெற்றோரை கடைசி வரை பராமரித்து வருவேனா? எனக்கும் என் மனைவிக்கும் ஆயுள் பாவம் எப்படி உள்ளது? பூர்வீகச் சொத்து எனக்கும் என் சகோதரருக்கும் எப்போது சட்டப்படி பாகப்பிரிவினை நடக்கும்? எனக்கு கிடைக்கவேண்டிய மீதி ஓய்வூதியப் பயன் எப்பொழுது கிடைக்கும்? எங்களுக்கு புது வீடு கட்டும் பாக்கியம் உண்டா? கடன் முழுவதைம் அவமானப்படாமல் அடைத்து விடுவேனா? அல்லது நிலம், வீடு விற்று கடன் அடைக்க வேண்டி வருமா? என் மகன், மகள் இருவரின் வாழ்க்கை எவ்வாறு அமையும்?

உங்களுக்கு துலாம் லக்னம், மேஷ ராசி, அசுவினி நட்சத்திரம். தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் கேதுபகவானின் சாரத்தில் (அசுவினி நட்சத்திரம்)

உங்களுக்கு துலாம் லக்னம், மேஷ ராசி, அசுவினி நட்சத்திரம். தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் கேதுபகவானின் சாரத்தில் (அசுவினி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். பத்தாம் வீடு கேந்திர ஸ்தானமாகி அதற்கு சுபக்கிரகமான சந்திரபகவான் அதிபதியாகி கேந்திராதிபத்ய தோஷம் பெற்று மற்றொரு கேந்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் அமர்ந்திருப்பது கேந்திராதிபத்ய தோஷத்தைக் குறைத்துவிடும். லக்னம் மற்றும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் ஏழாம் வீட்டில் சுயசாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். லக்னாதிபதி ஒரு கேந்திரத்திற்கு அதிபதியாக வந்தாலும்  முதல் ராசி ஒரு திரிகோணமாகவும் வருவதால் சுக்கிரபகவானுக்கு கேந்திரராதிபத்ய தோஷம் நீங்கிவிடுகிறது. அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கு அதிபதியாக வரும் சுக்கிரபகவான் தன் வீட்டிற்கு பன்னிரண்டாம் வீட்டில் மறைவது சிறு குறை என்றாலும் லக்னாதிபதி நட்பு ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் குறைகள் பெருமளவுக்குக் குறைந்து விடும் என்றும் புரிந்து கொள்ள வேண்டும். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் சுய சாரத்தில் (அனுஷம் நட்சத்திரம்) நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். ஒரு கிரகம் ஒரு கேந்திரத்திற்கும் ஒரு திரிகோணத்திற்கும் அதிபதியாக  வந்தால் யோக காரகர் என்று அழைக்கப்படுகிறார். இதில் கேந்திர ஸ்தானத்திற்கு அசுபக் கிரகங்கள் அதிபதியாக அமைந்து அந்த வீடு முதல் வீடாகவும், இரண்டாம் வீடு திரிகோண வீடாகவும் அமைவது துலாம் லக்னத்திற்கு சனிபகவானுக்கு மட்டுமே அமையும் ஒரு தலைசிறந்த அமைப்பாகும். அதனால் துலாம் லக்னத்திற்கு சனிபகவானை  "ராஜயோக காரகர்' என்று அழைத்தால் அது மிகையாகாது. பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் (மற்றொகு திரிகோண வீடு) ராகுபகவானின் சாரத்தில் (சதய நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் இருக்கும் நிலை) அமர்ந்திருக்கிறார். தைரிய, முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் ருணம் (கடன்) ரோகம்  (வியாதி) சத்ரு (விரோதி)  ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் புதபகவானின் சாரத்தில் (ஆயில்ய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான மீன ராசியில் ஆட்சி பெறுகிறார். 
பொதுவாக, குருபகவான் ஆட்சி, உச்சம், மூலதிரிகோணம் பெற்றிருந்தால் செல்வமுடைய குடும்பத்தில் பிறப்புண்டாகும் என்றும் இயல்பாகவே இவரின் பேச்சுக்கு மற்றவர்கள் மதிப்பு கொடுப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இவர் தனகாரகர், பூர்வபுண்ணிய காரகர் என்றாலும் பாக்கிய காரகத்திலும் அவருக்கு பங்கு உண்டு என்பதை "ஓடினவனுக்கு ஒன்பதில் குரு' என்கிற ஜோதிட வழக்கின் மூலம் அறியலாம். பொதுவாக, பத்தாம் வீட்டில் குருபகவான் அமர்ந்திருந்தால் அரசு உத்தியோகமோ அல்லது அரசால் பாராட்டோ விருதுகளோ கிடைக்கும். சமுதாயத்தில் முக்கியஸ்தர் எனவும், பொது காரியங்களில் பங்கேற்கும் வாய்ப்பும் தானாகவே ஏற்படும். சிறப்பான தொழில் செய்து பலவிதங்களில் லாபம் அடையக்கூடியவராகவும் இருப்பார். தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கு அதிபதியான சூரியபகவான் ருண, ரோக, சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (பூரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். 
ராகுபகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் புதபகவானின் சாரத்தில் (கேட்டை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். கேதுபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சந்திரபகவானின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். 
உங்களுக்கு பாக்கிய ஸ்தானாதிபதியான புதபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும் தந்தைக்காரகர் சூரியபகவான் பாதகாதிபதியாகி ஆறாம் வீட்டில் சுபத்துவம் பெற்று அமர்ந்திருக்கிறார். தாய் ஸ்தானாதிபதியான சனிபகவான் குடும்ப ஸ்தானத்திலும் தாய்காரகரான சந்திரபகவான் நட்பு ஸ்தானத்திலும் அமர்ந்திருக்கிறார்கள். தந்தை காரகரையும் தாய் ஸ்தானாதிபதியையும் குருபகவான் பார்வை செய்வதும் சந்திரபகவானுக்கு கேந்திர ஸ்தானத்தில் குருபகவான்இருப்பதாலும் பெற்றோர் இருவரும் இறுதிவரை சீரும் சிறப்புமாக இருப்பார்கள் என்று கூற முடிகிறது. அவர்களை கடைசி வரை நீங்கள் பராமரித்து வரும் பாக்கியமும் உங்களுக்கு உள்ளது.
செவ்வாய்பகவான் சகோதர காரகராகிறார். அவர் சகோதர ஸ்தானமான மூன்றாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். இந்த வீட்டுக்கதிபதியான குருபகவான் பலமாக இருப்பதால் உங்கள் சகோதரருடன் இறுதிவரை இணக்கமான சூழ்நிலையே நிலவும். பூர்வீக நிலம் சம்பந்தப்பட்ட பாகப்பிரிவினை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப்பிறகு சட்டப்படியாக நடந்தேறும்.
பொதுவாக, ஒருவருக்கு கடன் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஆறாம் வீட்டின் பலத்தை லக்னத்தின் பலத்துடன் ஒப்பிட்டு முடிவு செய்ய வேண்டும். உங்களுக்கு லக்னாதிபதி ஏழாம் வீட்டில் அமர்ந்து லக்னத்தைப் பார்வை செய்கிறார். ஆறாம் வீட்டுக்கதிபதியும் உச்சபலத்துடன்  உள்ளார் என்று தெரிந்துகொள்ள வேண்டும். தற்சமயம் குருமஹா தசை நடக்கத் தொடங்கியுள்ளதும் சிறப்பாகும். குருமஹா தசை நடக்கத் தொடங்கி ஒன்றரை ஆண்டுகள் கழித்த பின்பு அதாவது, அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குப்பிறகு நெடுநாளாக வராமல் இருந்த மீதி ஓய்வூதியப் பணம் கைவந்து சேர்ந்து விடும். இந்த காலகட்டத்திலிருந்து உங்கள் பொருளாதார நிலையில் படிப்படியான வளர்ச்சி உண்டாகும். சுயபுக்தி முடிந்து வீடு வாகனத்திற்கு அதிபதியான சனிபகவானின் புக்தி நடக்கத் தொடங்கியவுடன் புது வீடு கட்டும் யோகம் உண்டாகும். இந்த காலகட்டத்தில் கோசாரத்தில் குரு, சனி பகவான்களும் சாதகமாக சஞ்சரிப்பார்கள் என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும். லக்னாதிபதி ஆயுள் ஸ்தானாதிபதியுமாகி லக்னத்தைப் பார்ப்பதும் ஆயுள் காரகரான சனிபகவானை குருபகவான் பார்வை செய்வதாலும்; களத்திர ஸ்தானாதிபதி தைரிய ஸ்தானத்தில் (அஷ்டம ஸ்தானத்திற்கு அஷ்டம ஸ்தானம் அதாவது எட்டாம் வீட்டிற்கு எட்டாம் வீடு) அமர்ந்திருப்பதால் உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் தீர்க்காயுள் உண்டு. புத்திர காரகர் வலுத்திருப்பதால் உங்கள் மகன், மகள் இருவரும் வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வந்து விடுவார்கள். உங்கள் குடும்பத்திற்கு சிறப்பான எதிர்காலம் உண்டு. பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். 

- வாசகர், பண்ருட்டி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com