என் தொழில் 2013- ஆம் ஆண்டிலிருந்து மந்தமாகி விட்டது. கேது தசை ராகு புக்தி என்றார்கள். தொழிலை விரிவாக்க முடியவில்லை. வங்கிக் கடன் 50 லட்சத்தைத் தாண்டி விட்டது. இருப்பினும் கஷ்டப்பட்டு தொழிலை நடத்தி வருகிறேன். கடன் அப்படியே இருக்கிறது. எப்போது கடன் அடையும்? சுக்கிர தசை யோக தசையா? எதிர்காலம் எப்படி செல்லும்? பரிகாரம் தேவையா? - வாசகர், தில்லி

உங்களுக்கு சிம்ம லக்னம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம். அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கு அதிபதியான சுக்கிரபகவான் மூன்றாம் வீடான தைரிய ஸ்தானத்தில் ராகுபகவானின்

உங்களுக்கு சிம்ம லக்னம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம். அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கு அதிபதியான சுக்கிரபகவான் மூன்றாம் வீடான தைரிய ஸ்தானத்தில் ராகுபகவானின் சாரத்தில் (சதய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். பன்னிரண்டாமதிபதி மூன்றாம் வீட்டில் மறைவு பெறுவது விபரீத ராஜயோகத்தைக் கொடுக்கிறது. விபரீத ராஜயோகத்தால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். பன்னிரண்டாம் வீடு கடக ராசியாகி (சர ராசி) அந்த வீட்டுக்கதிபதி நீர் கிரகமாகி மற்றொரு சர ராசியில் அமர்ந்து நவாம்சத்தில் மற்றொரு நீர் ராசியான மீன ராசியை அடைகிறார். இதனால் திரவம் சம்பந்தப்பட்ட பொருள்கள், வெள்ளை நிறப் பொருள்களால் ஆதாயம் கிடைக்கும். சந்திரபகவான் வலுத்திருப்பதால் மனநலம் சீராகும்.
 பொதுவாக, விபரீத ராஜயோகத்தைக் கொடுக்கும் கிரகத்தின் தசா புக்தி அந்தர காலங்களில் அதன் பலனைப் பெறலாம். வெளியூர் வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் உண்டாகும். அல்லது, வெளிநாட்டுத் தொடர்புகள் மூலமும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். லக்னாதிபதி சூரியபகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் ராகுபகவானின் சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்பராசியை அடைகிறார். லக்னாதிபதி லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. இதனால் எடுத்த காரியத்தை தடையில்லாமல் முடிக்கும் ஆற்றல் உண்டாகும். தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (மிருகசீரிஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் உச்ச ராசியான கன்னி ராசியை அடைகிறார். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (மிருகசீரிஷ நட்சத்திரம்) ஆட்சி பெற்று நவாம்சத்தில் தன் நீச்ச ராசியான கன்னி ராசியை அடைகிறார்.
 பொதுவாக, ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே நட்சத்திரத்தில் இருப்பதும் அதிலும் ஒரே நட்சத்திர பாதத்தில் இருப்பதும் சிறப்பாகும். அவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் சுப ஆதிபத்யம் ஏற்பட்டு விட்டாலும் அந்த சாரநாதன் லக்னத்திற்கு சுபராகவும் ஆகிவிட்டால் பழம் நழுவிப் பாலில் விழுந்தாற்போல் நற்பலன்கள் கிடைக்கும். இதில் சூரியபகவானுடன் இணையும் கிரகங்கள் அஸ்தாங்கத யோகமும் பெறுவார்கள் என்பதும் அனுபவ உண்மை. எந்த கிரகமும் தன் பாவத்திற்கு இரண்டாம் வீட்டோனுடன் இணைந்திருப்பதும் விசேடம். இதனடிப்படையிலும் தொழில் ஸ்தானாதிபதி, லாபாதிபதிகளின் இணைவு தொழில் ஸ்தானத்தில் ஏற்படுவது சிறப்பு. மேலும் புத, சுக்கிரபகவான்களின் இணைவு மகாவிஷ்ணு மகாலட்சுமி யோகத்தையும் கொடுக்கும். சுக ஸ்தானமாகிய நான்காம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (புனர்பூசம் நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே வீட்டில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார்.
 பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (பூசம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (விசாக நட்சத்திரம்) அமரந்து நவாம்சத்தில் மேஷ ராசியில் நீச்சமடைகிறார். ஆயுள் ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கு காரகத்துவம் பெறும் சனிபகவான் ஆயுள் ஸ்தானத்திற்கு ஆயுள் ஸ்தானத்தில் (எட்டுக்கு எட்டு) அதாவது மூன்றாம் வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் தீர்க்காயுள் உண்டு என்று கூறவேண்டும்.
 ராகுபகவான் பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் கேதுபகவானின் சாரத்தில் (மூலம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். கேதுபகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (மிருகசீரிஷம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார்.
 குருபகவான் ஆயுள் ஸ்தானாதிபதியுமாகி விபரீத ராஜயோகம் பெற்று உச்சம் பெற்றிருப்பது சிறப்பு. குருபகவானின் ஐந்தாம் பார்வை சுக ஸ்தானமான நான்காம் வீட்டின் மீதும் ஏழாம் பார்வை ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டின் மீதும் ஒன்பதாம் பார்வை அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டின் மீதும் படிகிறது. ஆறாம் வீடு கடன் ஸ்தானமாக ஆவதால் குருபகவானின் பார்வை அந்த வீட்டின் மீது படிவதால் கடனால் பெரிய தொல்லை பாதிப்பு என்று எதுவும் ஏற்படாது. மேலும் ஆறாமதிபதி மூன்றாம் வீட்டில் விபரீதராஜ யோகம் பெற்று இருப்பதும் கடன் பாதிப்பு ஏற்படாது என்றும் கூறவேண்டும். அதேநேரம் சனிபகவான் நவாம்சத்தில் நீச்சம் பெற்றிருப்பது சிறு குறைதான் என்றும் கூற வேண்டும்.
 பொதுவாக, தொழில் ஸ்தானம் அதிக வலுவாக இருந்தால்தான் சொந்தத் தொழில் செய்ய முடியும். பத்தாம் வீட்டோன் பத்திலேயே ஆட்சி பெற்றிருப்பது உழைப்பால் மேன்மேலும் உயர்வுண்டாகும். புத, சுக்கிர பகவான்களின் இணைவு கேந்திர ஸ்தானங்களில் ஏற்பட்டால் சகலகலா வல்லவர்கள் என்று கூறும் அளவுக்கு பிரபலமடைவார்கள். சந்திரபகவானுக்கு முன் ராசியிலும் பின் ராசியிலும் கிரகங்கள் இல்லாமல் இருப்பது கேமத்துரும தோஷமாகும். இதனால் மனத்திடம் குறையும். முக்கியமான தருணங்களில் முடிவெடுக்க முடியாமல் தவிப்பீர்கள். சனிபகவானும் இணைந்திருப்பதால் புனர்பூ தோஷம் உண்டாகிறது. சனிபகவான் வலுத்திருப்பதால் ஓரளவு தோஷம் குறையும். சந்திரன் இருந்த வீட்டுக்கதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலோ நட்பு வீட்டிலோ அல்லது சுபகிரகப் பார்வை பெற்றிருந்தாலோ அந்த கிரகம் தன் முழுபலத்துடன் உள்ளது என்று கூறவேண்டும்.
 உங்களுக்கு ராசியாதிபதி சுக்கிரபகவான் உச்சகேந்திரத்தில் ஆட்சி பெற்றிருப்பது சிறப்பாகும். பாக்கியாதிபதி லாப ஸ்தானத்தில் லக்னாதிபதியுடன் இணைந்திருக்கிறார். சந்திரபகவானுக்கு உச்சகேந்திரத்தில் குருபகவான் உச்சம் பெற்று முழு கஜகேசரி யோகத்தைப் பெறுகிறார். உங்களுக்கு லக்னாதிபதியை விட ஆறாமதிபதி சற்று கூடுதல் பலத்துடன் இருக்கிறார் என்று உணர வேண்டும். கேது மகா தசையில் பிற்பகுதியில் உங்களுக்கு கூடுதல் வருமானம் குறைந்து தொழிலில் முடக்கம் ஏற்பட்டு கடன் உண்டாகியது. அதேநேரம் செய்தொழிலில் கடினமான சூழ்நிலையில் நடக்கிறது என்றும் எழுதியுள்ளீர்கள். இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து சுக்கிரமகா தசையில் லக்னாதிபதியின் புக்தி நடக்கத் தொடங்கியுள்ளது. இந்த காலகட்டத்தில் கோசாரமும் வலுவாக உள்ளதால் இந்த ஆண்டே புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கிவிடும். 2021 -ஆம் ஆண்டு மே மாதத்திற்குப்பிறகு கடன்கள் முழுமையாக அடைந்து விடும். மறுபடியும் செய்தொழிலில் மலர்ச்சி உண்டாகிவிடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com