நான் பழைய இரும்பு வியாபாரம் செய்கிறேன். ஜோதிடத்தில் மிகவும் ஆர்வம் உள்ளது. முழுநேர ஜோதிடராக ஆகும் யோகம் உள்ளதா? வாக்குபலிதம் ஏற்படுமா? நிறைய யோகங்கள் உள்ளன என்று நினைக்கிறேன். தற்சமயம் சனிமகாதசை நடக்கிறது. இது யோக தசையாக அமையுமா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்? - வாசகர், ஈரோடு

உங்களுக்கு தனுசு லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். அஷ்டமாதிபதியான எட்டாம் வீட்டுக்கதிபதியான சந்திரபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில்

உங்களுக்கு தனுசு லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். அஷ்டமாதிபதியான எட்டாம் வீட்டுக்கதிபதியான சந்திரபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் சுய சாரத்தில் (திருவோண நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். லக்னம் மற்றும் சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் சந்திரபகவானின் சாரத்தில் (திருவோண நட்சத்திரம்) நீச்சமடைந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் சூரியபகவானின் சாரத்தில் (உத்திராடம் நட்சத்திரம்) உச்சம் பெற்று அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். மகர ராசியில் நீச்சம் பெற்றுள்ள குருபகவான் அங்கு உச்சம் பெற்றிருக்கும் செவ்வாய்பகவானுடன் இணைந்து இருப்பதால் குருபகவானுக்கு முழுமையான நீச்சபங்க ராஜயோகம் கிடைக்கிறது.
 பொதுவாக, குருபகவானுக்கு மட்டும் நீச்சபங்க ராஜயோகம் எந்த நிலையிலும் ஏற்பட்டு விடும். அதாவது நீச்சமடையும் கிரகம் எந்த ராசியில் உச்சமடைவாரோ அந்த ராசிக்குரிய கிரகம் லக்ன கேந்திரத்திலோ அல்லது சந்திர கேந்திரத்திலோ இருந்தால் நீச்சபங்க ராஜயோகம் கிடைத்துவிடும் என்பது பொதுவிதி. அதாவது குருபகவான் உச்சம் பெறும் ராசி கடக ராசியாகும். அந்த வீட்டுக்கதிபதியான சந்திரபகவான் எங்கு அமர்ந்திருந்தாலும் அது சந்திர கேந்திரமாகி விடும் என்பதால் இப்படி கூறப்பட்டுள்ளது.
 அதோடு குடும்ப ஸ்தானத்தில் குருசந்திரயோகம், சந்திர மங்கள யோகம், குருமங்கள யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உண்டாகின்றன. தன ஸ்தானம் சிறப்பாக பலம் பெற்றுள்ளதால் பொருளாதாரம் படிப்படியாக வளர்ச்சி அடையும். இது வாக்கு ஸ்தானமுமாவதால் வாக்குபலிதம் உண்டாகும். குடும்ப ஸ்தானமுமாவதால் இல்லத்தில் இறுதிவரை அமைதி நிறையும்.
 பாக்கியாதிபதியான ஒன்பதாம் வீட்டுக்கதிபதியான சூரியபகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டில் சந்திரபகவானின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார்.
 ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) உச்சம் பெற்று நவாம்சத்தில் துலாம் ராசியில் மூலதிரிகோணம் பெறுகிறார். களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். ராகுபகவான் லக்னத்தில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். கேதுபகவான் களத்திர, நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் ராகுபகவானின் சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார்.
 குருபகவானின் ஐந்தாம் பார்வை ஆறாம் வீட்டின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் சனிபகவானின் மீதும் படிகிறது. ஆறாம் வீட்டை சேவை செய்யும் வீடு என்று கூறுவார்கள். மேலும் ஆறாம் வீட்டில் சனிபகவான் அமர்ந்திருப்பது சிறப்பானது என்று ஜோதிட கிரந்தங்கள் கூறுகின்றன. அதோடு சனிபகவான் தன் நட்பு ராசியில் அமர்ந்திருக்கிறார். சனிபகவான் மக்கள் தொண்டை நிர்ணயிப்பவர். அவர் வலுப்பெற்று குருபகவானின் பார்வையை பெறுவதால் நீங்கள் செய்யும் தொழிலில் பிரபலமடைவீர்கள். அதோடு அந்தத் தொழிலிலும் பரிமளிப்பீர்கள்.
 குருபகவானின் ஏழாம் பார்வை எட்டாம் வீட்டின் மீது படிகிறது. இதனால் தீர்க்காயுள் உண்டாகும். குருபகவானின் ஒன்பதாம் பார்வை பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தின் மீதும் படிகிறது. பத்தாம் வீட்டை குரு, சூரிய, சுக்கிர பகவான்கள் பார்வை செய்கிறார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்வதால் தொழில் ஸ்தானம் புஷ்டியாகிறது. தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியாக புதபகவான் அமைகிறார். புதபகவான் கணக்கன் என்று அழைப்பார்கள். ஜோதிடத்திற்கும் கணிதத்திற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டல்லவா? அதோடு புதபகவான் மூன்றாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் மறைந்து இருப்பதால் கேந்திராதிபத்ய தோஷம், பாதகாதிபத்ய தோஷம் மாரகாதிபத்ய தோஷம் ஆகிய முப்பெரும் தோஷங்கள் மறைந்து விடுகின்றன. கேதுபகவானும் நட்பு ஸ்தானத்திலிருந்து லக்னத்தைப் பார்வை செய்கிறார். இதனால் ஞானமார்க்கம், பக்தி மார்க்கம், ஆன்மிகம், ஜோதிடம் சம்பந்தப்பட்ட துறைகளில் தொழில் அமையும்.
 ஐந்தாம் வீடு அதிர்ஷ்ட ஸ்தானமாவதால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறலாம். ஐந்தாம் வீட்டுக்கதிபதியான செவ்வாய்பகவான் உச்சம் பெற்றிருக்கிறார். அவர் நான்காம் பார்வையாக ஐந்தாம் வீட்டைப் பார்வை செய்வதும் ஐந்தாம் வீட்டிற்கு பலமூட்டுகிறது. பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி பூர்வபுண்ணிய காரகருடன் வாக்கு ஸ்தானத்தில் இணைந்திருப்பதால் ஜோதிடத்தில் வாக்குபலிதம் உண்டாகும்.அதோடு சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து சனிபகவானின் தசையும் நடக்கத் தொடங்கியுள்ளது. இதில் சுயபுக்தி முடிந்ததும் இன்னும் இரண்டரை ஆண்டுதள் கழித்து ஜோதிடத்துறையில் வளர்ச்சியடைவீர்கள். மற்றபடி நீங்கள் தற்சமயம் செய்துவரும் இரும்பு சம்பந்தப்பட்ட தொழிலும் சனிபகவானுக்கு ஏற்றதாக அமைவதால் அதையும் தொடர்ந்து பகுதிநேரமாகச் செய்யலாம். ஏழு கிரகங்கள் தொடர்ந்து நான்கு ராசிகளில் அமர்ந்திருப்பதும் ஜாதகத்திற்கு வலுக்கூட்டும் அமைப்பாகும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com