என் மனைவியின் ஜாதகம் எவ்வாறு உள்ளது? தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். அரசு ஆசிரியர் வேலைக்கான போட்டித் தேர்வுகளில் ஒன்றிரண்டு மதிப்பெண்கள் குறைவால் வெற்றியைத் தவற விட்டுவிட்டார். அரசு ஆசிரியர் வேலை உறுதியாகக் கிடைக்குமா? என் நண்பர் வேறு வழிகளில் முயற்சி செய்தால் வேலை கிடைக்கும் என்கிறார். அவரை முயற்சி செய்ய சொல்லலாமா? எப்போது கிடைக்கும்? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா?  - வாசகர்

உங்கள் மனைவிக்கு மிதுன லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். லக்னம் மற்றும் சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கு அதிபதியான புதபகவான்

உங்கள் மனைவிக்கு மிதுன லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். லக்னம் மற்றும் சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கு அதிபதியான புதபகவான், தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் சுய சாரத்தில் (ஆயில்ய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார். லக்னாதிபதி இரண்டாம் வீட்டில் அதிபலம் பெற்று அமர்ந்திருப்பதால் குடும்ப வாழ்க்கை சீராகவும் வருமானம், பொருளாதாரம் மேன்மையாகவும் அமையும். எந்தக் காலத்திலும் பணப்பற்றாக்குறை என்பது ஏற்படாது. லக்னாதிபதி இரண்டாம் வீட்டில் சுபபலத்துடன் இருப்பதால் பேச்சில் நிதானமும் இனிமையும் கூடும். முகத்தில் பொலிவும், நடையில் மிடுக்கும், ஆளுமைத் திறனும் கூடும். சுக ஸ்தானாதிபதி சுப பலம் பெற்றிருப்பதால் குடும்பத்தில் சுகம் உண்டாகும். குடும்பத்தில் அத்தியாவசிய தேவைகளும் பூர்த்தியாகும். பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அயன, மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (பூசம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார்.
 அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் குருபகவானின் சாரத்தில் (விசாக நட்சத்திரம்) உச்சம் பெற்று அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெற்ற கிரகம் இருப்பதால் பூர்வபுண்ணிய ஸ்தானம் பலம் பெறுகிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். பெண்களுக்கு எட்டாம் வீடு மாங்கல்ய ஸ்தானமாக ஆகிறபடியால் மாங்கல்ய ஸ்தானாதிபதி சுப கிரகத்தின் சாரத்தில் உச்சம் பெறுவது சிறப்பாகும். பாக்கியாதிபதியான திரிகோண வீட்டிற்கு அதிபதியான கிரகம் மற்றொரு திரிகோண ராசியில் உச்சம் பெற்றிருப்பது மேன்மையான அமைப்பு என்று பலவகையிலும் பார்த்து சனிபகவான் சிறப்பான பலம் பெற்றிருக்கிறார் என்று கூற வேண்டும்.
 தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சுய சாரத்தில் (திருவோண நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். குடும்பாதிபதியும் சுயசாரத்தில் அமர்ந்திருப்பது ஜாதகத்திற்கு மேலும் வலுவூட்டும் அமைப்பாகும். தைரிய, முயற்சி, வைராக்கிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கு அதிபதியான சூரியபகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிலேயே கேதுபகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) ஆட்சி பெற்றமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் புதபகவானின் சாரத்தில் (ஆயில்ய நட்சத்திரம்) நீச்சம் பெற்றமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் எட்டாம் வீட்டில் சந்திரபகவானின் சாரத்தில் (திருவோண
 நட்சத்திரம்) நீச்சம் பெற்றமர்ந்திருக்கிறார்.
 நீச்சனேறிய ராசிநாதன் ஆட்சி, உச்சம் பெறுகையில் நீச்சபங்க ராஜயோகம் உண்டாகும். நீச்சன் எங்கு உச்சமடைவாரோ அந்த வீட்டுக்குரிய கிரகம் லக்ன கேந்திரத்திலோ அல்லது சந்திர கேந்திரத்தலோ இருந்தால் நீச்சபங்க ராஜயோகம் உண்டாகும். நீச்சம் பெற்ற இரண்டு கிரகங்கள் சமசப்தம (நேருக்கு நேர்) பார்வை பெற்றிருந்தால் நீச்சபங்க ராஜயோகம் உண்டாகும். இங்கு குருபகவான் அமர்ந்திருக்கும் மகர ராசியின் அதிபதி சனிபகவான் உச்சம் பெற்றிருக்கிறார். இதனால் குருபகவான் நீச்சபங்க ராஜயோகம் பெறுகிறார். செவ்வாய்பகவான் உச்சம் பெறும் மகர ராசியின் அதிபதி சனிபகவான் சந்திர கேந்திரத்தில் (சந்திரபகவானுக்கு பத்தாம் வீடு) அமர்ந்திருப்பதால் நீச்சபங்க ராஜயோகம் பெறுகிறார். இரண்டு நீச்ச கிரகங்களும் நேர்பார்வை செய்வதாலும் இருவருக்கும் நீச்சபங்க ராஜயோகம் உண்டாகும். நீச்சனை நீச்சன் பார்த்தால் நினைத்ததை முடிப்பான் என்பது ஜோதிட பழமொழி.
 சந்திர கேந்திரத்தில் சனிபகவான் உச்சம் பெறுவதால் பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான சச மகாயோகமும் உண்டாகிறது. ராகுபகவான் போக காரகராகி லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். சனி, ராகு பகவான்களுக்கு பதினொன்றாம் வீடு உன்னதமானது என்பது ஜோதிட விதி. கேதுபகவான் பூர்வபுண்ணிய புத்திர புத்திர ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் ராகுபகவானின் சாரத்தில் (சுவாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார்.
 குருபகவானின் ஐந்தாம் பார்வை அயன ஸ்தானத்தின் மீதும், ஏழாம் பார்வை குடும்ப ஸ்தானத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் செவ்வாய், புத, சுக்கிர பகவான்களின் மீதும் படிகிறது. லக்னாதிபதியின் மீது குருபகவானின் பார்வை படுவதால் புதபகவானின் காரகத்துவங்களான கணிதம், எழுத்து, பத்திரிகை ஆசிரியர் பணி , பேச்சு ஆகியவைகள் பலப்படும். சுக்கிரபகவானைப் பார்வை செய்வதால் சுக்கிரபகவானின் காரகத்துவங்களான கலை, நவீனம், நளினம், அழகு, வண்டி, வீடு, நிதி சம்பந்தப்பட்டவைகள் பலப்படும். குருபகவானின் ஒன்பதாம் பார்வை சுக ஸ்தானமான நான்காம் வீட்டின் மீதும் படிகிறது. புத்திர காரகரான குருபகவான் சந்திரபகவானுடன் இணைந்திருப்பதால் குருசந்திர யோகமும் உண்டாகிறது. குருசந்திர யோகத்தினால் தான் சார்ந்துள்ள துறையிலும் அதற்கு சம்பந்தமில்லாத மற்றொரு புதிய துறையிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவார்கள்.
 ஆறாமதிபதி முழுமையான நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ளதால் பெரிய உடலுபாதைகளோ, கடன் பிரச்னைகளோ, வம்பு வழக்குகளோ ஏற்படாது. சூரிய, குரு, செவ்வாய், சனிபகவான்கள் வலுத்திருந்தால் அரசு வேலை கிடைக்கும். அதோடு தற்சமயம் ராகுபகவானின் தசையில் இறுதிப்பகுதி நடப்பதால் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் தேர்வுகளின் மூலம் அரசு ஆசிரியர் வேலை கிடைக்கும். அதனால் வேறு எந்த முறையிலும் முயற்சி செய்ய வேண்டாம். இதனால் மனநிம்மதியை இழக்க நேரிடும். தொடர்வதும் பலம் பெற்ற குருபகவானின் தசையாக உள்ளதால் எதிர்காலம் வளமாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com