என் கணவரின் ஜாதகப்படி குடும்பத்துடன் எப்போது இணக்கமாவார்? எப்போது விட்டுக்கொடுத்து நடந்து கொள்வார்? குடும்பத்தில் அமைதி என்பது துளியும் இல்லை. நானும் உடம்பாலும் மனதாலும் நிறைய பட்டுவிட்டேன். என் கணவரின் ஜாதகம் என்ன சொல்கிறது? எப்போது நல்ல காலம் பிறக்கும்? கோசாரத்தில் குரு ஆட்சி, உச்சம் பெறும் காலங்களில் புதனுக்கு நீச்சபங்க ராஜயோகம் உண்டாகும், அந்த ஆண்டுகளில் புதன் நல்லது செய்வார் என்று ஜோதிடர் கூறினார். இப்பொழுது குரு தனுசுக்கு வருகிறார். கடவுள் கண் திறப்பாரா?  - வாசகர்

உங்கள் கணவருக்கு மேஷ லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் குருபகவானின்

உங்கள் கணவருக்கு மேஷ லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (பூரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார். பொதுவாக, வாழ்க்கை சுகத்திற்கு நான்காம் வீட்டின் பலம் மிகவும் அவசியமாகும். இந்த நான்காம் வீடு பலம் பெற்றிருக்கும் பட்சத்தில் இறுதிவரை குடும்பத்தில் சுகம் இருக்கும். அதே நேரம் சுகாதிபதி அசுபக் கிரகச் சேர்க்கையோ அல்லது பார்வையோ பெற்றிருந்தால் அந்த கிரகங்களின் காரகத்துவங்கள் நான்காமதிபதியை பாதிக்கச் செய்யும் என்பதையும் மறுப்பதற்கில்லை. நான்காமிடம் பத்தாமிடத்திற்கு ஏழாம் வீடாக அமைவதால் செய்தொழிலில் இருக்கும் போட்டி பொறாமைகளையும் இதிலிருந்து அறிய வேண்டும். மேலும் நான்காமதிபதி ஒன்பதாமதிபதியுடன் சம்பந்தம் பெற்றிருந்தால் இந்திரனுக்கு சமமான சுக யோகமுடையவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
 லக்னத்திற்கும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். எந்த ஒரு ஜாதகத்திற்கும் லக்னாதிபதியின் பலம் அவசியம் என்று பலமுறை எழுதியிருக்கிறோம். சிலருக்கு லக்னாதிபதி ராசியில் பலம் குறைந்திருந்தாலும் நவாம்சத்தில் பலம் கூடியிருப்பதால், லக்னாதிபதி பலம் பெற்றிருக்கிறார் என்று சொல்ல வேண்டும். அதோடு ஷட் பலத்தில் (ஆறு விதமான அம்சங்கள்) லக்னாதிபதிக்கு தேவைக்கதிகமாக ரூப பரல்கள் கிடைக்கப் பெற்றிருப்பதால் ஜாதகம் வலுவானது என்றும், அஷ்டவர்க்கத்திலும் லக்னாதிபதி பெற்றுள்ள பரல்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். இப்படி பல விதங்களில் ஆராய்ந்து லக்னாதிபதி பலம் பெற்றிருக்கிறாரா என்று முடிவு செய்ய வேண்டும். லக்னாதிபதியின் பலத்தை எவ்வாறு கணிக்க வேண்டும் என்று பலரும் கேட்டிருப்பதால் சற்று விளக்கமாகக் கூறி இருக்கிறோம். அவருக்கு லக்னாதிபதி முதல் திரிகோண வீட்டிற்கு அதிபதியாகி இரண்டாம் திரிகோண வீட்டில் அமர்ந்திருப்பது சிறப்பாகும்.
 பூர்வுபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானாதிபதியான சூரியபகவான் அயன, மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் புதபகவானின் சாரத்தில் (ரேவதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் நட்பு வீடான தனுசு ராசியை அடைகிறார். பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் சூரியபகவானின் சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியில் நீச்சம் பெறுகிறார். தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் அயன, மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார்.
 தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் சுயசாரத்தில் (ரேவதி நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமரும் நிலை) விபரீத ராஜயோகம் (மூன்று, ஆறாமதிபதி பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்திருப்பதால்; அதாவது ஒரு மறைவு ஸ்தானாதிபதி மற்றொரு மறைவு ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் ஏற்படுவது) பெற்று அமர்ந்திருக்கிறார்.விபரீத ராஜயோகம் உண்டானால் எதிர்பாராத தருணங்களில் எதிர்பாராத இடங்களிலிருந்து எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். புதபகவான் புத்திரகாரகராக ஆவதால் புத்தி சாதுர்யமும் சமயோசித புத்தியும் உண்டாகும். சிலருக்கு எழுத்து, பேச்சு துறையில் வெற்றி பெறும் யோகமும் உண்டாகும்.
 தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் ராகுபகவானின் சாரத்தில் (சதய நட்சத்திரம்) மூலதிரிகோணம் பெற்று அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். ராகுபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் சந்திரபகவானின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். ராகுபகவான் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகர ராசிகளில் அமர்ந்திருப்பது சிறப்பாகும். அவருக்கு ராசியிலும் நவாம்சத்திலும் ராகுபகவான் ரிஷப, கடக ராசிகளில் இருப்பது சிறப்பு என்றே கூற வேண்டும். கேதுபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் புதபகவானின் சாரத்தில் (கேட்டை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார்.
 குருபகவானின் ஐந்தாம் பார்வை ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டின் மீதும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டின் மீதும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டின் மீதும் படிகிறது. குருபகவானின் கேந்திரத்தில் செவ்வாய்பகவான் இருப்பதால் குருமங்கள யோகம் உண்டாகிறது. சந்திரமங்கள யோகம், புத ஆதித்ய யோகம் ஆகிய சிறப்பான யோகங்களும் உள்ளன. பொதுவாக, நீச்சனேறிய ராசிநாதன் ஆட்சி, உச்சம் பெறுகையில் நீச்சபங்க ராஜயோகம் உண்டாகும் என்பது முதல் விதி. மற்றபடி வேறு ஏழு விதிகள் குறிப்பாக கூறப்பட்டுள்ளன. மேலும் மீன ராசியில் சுக்கிரபகவான் உச்சம் பெற்றிருப்பதாலும் நீச்சபங்க ராஜயோகம் உண்டாகும். அதோடு கோசார ரீதியில் குருபகவான் ஆட்சி, உச்சம் பெறும் காலங்களிலும் சந்திர கேந்திரத்தில் சஞ்சரிக்கும் காலங்களிலும் புதபகவானால் விளையும் பலன்கள் கூடும். உங்கள் ஜோதிடர் கூறுவது சரியேயாகும் என்பது எங்கள் கருத்து.
 அதனால் இந்த குருபெயர்ச்சி காலத்தில் குருபகவான் தன் மூலதிரிகோண ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் புதபகவானுக்குரிய காரகத்துவங்கள் சுப பலன்களைக் கொடுக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. இப்படி கோசாரத்தில் கிரகங்கள் சஞ்சரிப்பதால் புதபகவானுக்குரிய காரகத்துவங்கள் சுப பலன்களைக் கொடுக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. இப்படி கோசாரத்தில் கிரகங்கள் சஞ்சரிப்பதைக் கொண்டு நீச்சம் பெற்ற கிரகங்களுக்கு எந்த அளவுக்கு பலம் உண்டாகிறது என்பதை உணர்ந்து பலன்களை அறிய வேண்டும். அவருக்கு தற்சமயம் கேதுபகவானின் தசை முடியும் தறுவாயில் உள்ளது. வரும் தை மாதத்திலிருந்து உச்சம் பெற்றிருக்கும் சுக்கிரபகவானின் தசை நடக்க இருப்பதால் அவரின் மன வளம் ஓங்கி தன் தவறை உணர்ந்து திருந்தி குடும்பத்தாருடன் இணக்கமாக வாழத் தொடங்கி விடுவார். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பார்வதி தேவியை வழிபட்டு வரவும்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com