எனக்கு 67 வயதாகிறது. நான் வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற வேண்டியதாகிவிட்டது. என் உறவினர்தான் எல்லா கடன் பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்வதாக சொல்லி பைனான்சியரிடம் என் சொத்தை அடமானம் வைத்து பணம் பெற்றுக்கொண்டு என் கடனை அடைக்காமல் ஏமாற்றி வருகிறார். பைனான்சியர் என்னை கடன் அடைக்கச் சொல்கிறார். அவர் வாங்கிய பணம் எப்போது கைவந்து சேரும்? என் தகப்பனார் வழி சொத்திலும் உயர்நீதி மன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. சிலர் சொத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டி வாழ்கிறார்கள். அந்த சொத்து எப்போது கைவந்து சேர

உங்களுக்கு சிம்ம லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் அமர்ந்திருப்பது

உங்களுக்கு சிம்ம லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் அமர்ந்திருப்பது விபரீத ராஜயோகத்தைக் கொடுக்கும். பன்னிரண்டாம் வீட்டைக் கொண்டு சுபச்செலவுகளா, வீண் செலவுகளா, காலகாலத்தில் ஆகாரம் எடுத்துக்கொள்ள முடியுமா? முடியாதா, நல்லுறக்கமா, உறக்கமில்லையா, பிரயாணத்தில் நன்மையா, சிரமமா? சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியுமா, முடியாதா? வாழ்வின் முடிவு, மறு பிறப்பு, தாம்பத்திய உறவின் தன்மை ஆகியவைகளை அறிய முடியும்.
 உங்களுக்கு சந்திரபகவான் விபரீத ராஜயோகம் பெற்றிருப்பதும் அவர் அஷ்டமாதிபதியான குருபகவானுடன் இணைந்திருப்பதும் சிறப்பு. பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். அஷ்டம ஸ்தானத்தில் குருசந்திர யோகம் உண்டாவது சிறப்பாகும். இந்த யோகத்தால் பெயர், புகழ், தாயின் அன்பு, ஆதரவு ஆகியவைகளைப் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. குருபகவானின் ஐந்தாம் பார்வை அயன ஸ்தானத்தின் மீது படிகிறது. குருபகவானின் ஏழாம் பார்வை குடும்ப ஸ்தானத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் சனி, சுக்கிர பகவான்களின் மீதும் படிகிறது. குருபகவானின் ஒன்பதாம் பார்வை சுக ஸ்தானமான நான்காம் வீட்டின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் புதபகவானின் மீதும் படிகிறது.
 லக்னாதிபதியான சூரியபகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (விசாக நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். நீச்சம் பெற்ற கிரகம் எந்த வீட்டில் உச்சமடைவாரோ அந்த வீட்டுக்குரிய கிரகம் லக்ன கேந்திரத்திலோ, சந்திர கேந்திரத்திலோ இருந்தால் நீச்சபங்க ராஜயோகம் உண்டாகும். இதனடிப்படையில் பார்த்தால் சூரியபகவான் உச்சம் பெறும் மேஷ ராசிக்கு அதிபதியான செவ்வாய்பகவான் லக்னத்தில் அமர்ந்திருப்பதால் சூரியபகவானுக்கு முழுமையான நீச்சபங்க ராஜயோகம் உண்டாகிறது. தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (அனுஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி, உச்ச, மூலதிரிகோண ராசியான கன்னி ராசியை அடைகிறார்.
 தனாதிபதி, லாபாதிபதியான கிரகம், ராசி, நவாம்சத்தில் சுப பலம் பெற்றிருப்பது எந்த காலத்திலும் பொருளாதாரம் சீராகவும் லாபகரமாகவும் இருக்கும் என்றும் புரிந்து கொள்ள வேண்டும். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான், தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் சூரியபகவானின் சாரத்தில் (உத்திரம் நட்சத்திரம்) நீச்சம் பெற்றமர்ந்து நவாம்சத்தில் தன் உச்ச ராசியான மீன ராசியை அடைகிறார். ராசியில் நீச்சம் பெற்ற கிரகம் நவாம்சத்தில் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் முழுமையான நீச்சபங்க ராஜயோகம் உண்டாகும். அதோடு ஒரு கிரகத்திற்கு முழுமையான நீச்சபங்க ராஜயோகம் உண்டானால், மற்ற நீச்சம் பெற்றுள்ள கிரகங்களுக்கும் நீச்சபங்க ராஜயோகம் உண்டாகிவிடும் என்பதும் ஜோதிட விதி.
 சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் லக்னத்தில் சூரியபகவானின் சாரத்தில் (உத்திரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். சுகாதிபதி, பாக்கியாதிபதி லக்னமாகிய உயிர் ஸ்தானத்தில் இருப்பது சிறப்பு. இதனால் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வசதி வாய்ப்புகளும் சிறிய அளவு முயற்சியில் கிடைக்கும். அதோடு சமுதாயத்தில் முக்கியஸ்தர்களுடன் நெருங்கிய தொடர்பும் உண்டாகி அவர்களால் நன்மைகளும் கிடைக்கும்.
 ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், களத்திர, நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான், தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் சந்திரபகவானின் சாரத்தில் (அஸ்த நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். கேதுபகவான் லக்னத்தில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூரம் நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார். ராகுபகவான் களத்திர, நட்பு ஸ்தானத்தில் சுய சாரத்தில் (சதய நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். வழக்கு விவகாரங்கள் அசுப ஸ்தானங்களான 3, 6, 8, 12 -ஆம் வீடுகள் அதிக பலம் பெற்றிருப்பதால் உண்டாகின்றன. இது சிலருக்கு சில நாள்கள், சில மாதங்கள் ஆகவும் பலருக்கு சில வருடங்கள் என தொடர்கின்றன. லக்னாதிபதிக்கு சுப பலம் ஏற்படும் காலக்கட்டத்தில் இந்த வழக்குகளிலிருந்து விடுதலை பெற்று விடுவதைப் பார்க்கிறோம்.
 அதோடு உற்றார் உறவினர்களால் ஏமாற்றப்படுவதோ அல்லது அவர்களால் பயன் உண்டாவதோ ஆறாம் வீட்டின் பலத்தைப் பொறுத்தும், நண்பர்களால் நன்மை, தீமை உண்டாவது ஏழாம் வீட்டின் பலத்தைப் பொறுத்தும் அமையும். இதில் சொந்தமாக சம்பாதித்த சொத்து வில்லங்கத்தில் மாட்டிக்கொண்டால் பத்தாம் வீட்டின் அசுப பலமும்; தந்தை வழிச் சொத்து வில்லங்கத்தில் மாட்டிக் கொண்டால் ஒன்பதாம் வீட்டின் அசுப பலமும் காரணமாகிறது. மற்றபடி மூன்று திரிகோணாதிபதிகளின் சுப பலம் இருந்தால் சரியான காலகட்டத்தில் கஷ்டங்களிலிருந்து விடுபட்டும் விடுவார்கள். உங்களுக்கு மூன்று திரிகோணாதிபதிகளும் ஓரளவு சுப பலத்துடன் இருக்கிறார்கள். லக்னாதிபதியும் தொழில் ஸ்தானாதிபதியும் நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கிறார்கள். சத்ரு ஸ்தானாதிபதியை குருபகவான் பார்வை செய்கிறார். சனிபகவான் குடும்ப ஸ்தானத்தில் சுபக்கிரக சேர்க்கை மற்றும் பார்வை பெற்றிருப்பது சிறப்பென்றாலும் குடும்ப ஸ்தானத்திற்கும் அங்கு அமர்ந்திருக்கும் சனி, சுக்கிர பகவான்களுக்கும் பாப கர்த்தாரி யோகம் உண்டாகிறது. இது குறையாகும். அதனால் வழக்குகள் போட்டுத்தான் உங்களின் உரிமைகளை நிலை நாட்ட வேண்டும். மற்றபடி வழக்குகளில் உறுதியாக வெற்றி கிடைக்கும்.
 உங்கள் உறவினரின் மீது உடனடியாக வழக்கு போட்டு அதன்மூலம் வெற்றி பெறுவீர்கள். உங்கள் தந்தையின் மூலம் கிடைத்த சொத்தின் மீது நடந்து கொண்டிருக்கும் வழக்கில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குப்பிறகு வெற்றி பெறுவீர்கள். மற்றபடி தொடரும் செவ்வாய்பகவானின் தசையில் மகிழ்ச்சி நிறையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com