என் மகனுக்கு 44 வயதாகிறது. அமெரிக்காவில் வசிக்கிறான். சென்ற மாதம் பேஸ்மெண்டில் தனியாக இருந்தபோது கீழே விழுந்ததில் தலையில் அடிப்பட்டு மயக்கம் அடைந்துவிட்டான். ரத்தமும் வெளியேறி உறைந்துவிட்டது. யாருக்கும் தெரியாததால் அரைமணிக்கும் மேல் கழித்து பார்த்து மருத்துவமனையில் வைத்தியம் பார்த்தோம். பழைய நினைவுகள் மறந்து விட்டது. ஏதேதோ பேசுகிறான். எப்பொழுது முன்போல் ஆவான். பழைய விஷயங்கள் ஞாபகத்துக்கு வருமா? வேலைக்கும் செல்ல முடியுமா? ஜாதகம் வலுவாக உள்ளதா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - வாசகர்

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். தைரிய முயற்சி வைராக்கிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் அயன மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம்

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். தைரிய முயற்சி வைராக்கிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் அயன மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் சுக்கிர பகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். மூன்றாமதிபதி மறைவு ஸ்தானத்திற்கு அதிபதியாகி மற்றொரு மறைவு ஸ்தானத்தில் இருப்பது விபரீத ராஜயோகத்தையும், எதிர்பாராத நேரங்களில் எதிர்பாராத வகையில் புதிய வாய்ப்புகளும் திருப்பங்களும் உண்டாகும். பொதுவாக, சந்திரபகவான் மனோகாரகராவதால் அவர் லக்னாதிபதியின் சாரத்தில் அமர்ந்திருப்பது அவரின் மனோதைரியம் சுபபலத்துடன் இருக்கிறது என்றும் அசட்டு தைரியம் என்பார்களே அதுபோன்ற செயல்களைச் செய்ய மாட்டார் என்றும் புரிந்து கொள்ள வேண்டும். அதோடு தீர்க்கமாகச் சிந்தித்து செயல்படும் ஆற்றலும் உண்டாகும். அன்னை காரகராகவும் ஆவதால் அன்னையின் நிலைமையும் இறுதிவரை சுபமாகவே அமையும். லக்னமான உயிர் ஸ்தானத்திற்கும் ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் களத்திர, நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (அனுஷ நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார்.
 லக்னாதிபதி களத்திர நட்பு ஸ்தானத்தில் தர்மகர்மாதிபதியான சனிபகவானின் சாரத்தில் பலம் பெற்று அமர்ந்து லக்னத்தைப் பார்வை செய்வது சிறப்பாகும். இதனால் களத்திர பாவமும் லக்ன பாவமும் வலுக்கிறது என்று கூறவேண்டும். ஆறாம் வீட்டிற்கு இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் இருப்பதால் ஆறாமதிபதியின் பலம் கூடுகிறது என்றும் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது இது "பாவாத்பாவம்' என்கிற ஜோதிட அடிப்படையில் பார்க்கப்படுகிறது. லக்னாதிபதியே ஆறாமதிபதியாக ஆவதால் ஆறாமதிபத்யத்தால் உண்டாகக் கூடிய கெடுபலன்கள் பெரிதாக ஏற்படாது என்றும் புரிந்து கொள்ள வேண்டும். தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (விசாக நட்சத்திரம்) மறைவு பெற்று நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். "மறைந்த புதன் நிறைந்த மதி' என்பது ஜோதிட வழக்கு. அதனால் புதபகவானின் அறிவு ஆற்றல் காரகத்துவங்கள் குறைந்து விடாது.
 பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (புனர்பூச நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் நட்பு ராசியான ரிஷப ராசியை அடைகிறார். தர்மகர்மாதிபதியான சனிபகவான் இரண்டாம் வீட்டில் அமர்ந்து ஆயுள் ஸ்தானமான எட்டாம் வீட்டைப் பார்வை செய்வதால் ஆயுள் தீர்க்கமாகும். மற்றும் சுக ஸ்தானமான நான்காம் வீட்டையும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டையும் பார்வை செய்கிறார். சனிபகவான் வலுத்திருப்பதால் கடினமாக உழைக்கக் கூடிய சக்தி பிறக்கும். தன்னலம் இராது. மற்றையோருக்குத் தொண்டாற்றும் தகுதி உண்டாகும். சனிபகவானின் தசை புக்திகளில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும்.
 அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் ராகுபகவானின் சாரத்தில் (சதய நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் அமர்ந்து இருக்கிறார். குருபகவானின் ஐந்தாம் பார்வை குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் சனிபகவானின் மீதும் படிகிறது. கர்மகாரகரான சனிபகவானை குருபகவான் பார்ப்பது சிறப்பு. சனிபகவானை குருபகவான் பார்த்த ஜாதகங்கள் சோடை போனதில்லை என்பது அனுபவ உண்மை. சில காலங்களில் நலிவடைந்திருந்தாலும் பிற்காலத்தில் ஏதோ ஒரு ரூபத்தில் வாழ்க்கையில் மலர்ச்சி ஏற்பட்டு முன்னேறிவிடுவார்கள். பலம் மிகுந்த குருவென்றால் அதாவது பார்வையின் மூலம் பரந்த உலகத்தையே பரிசாக வழங்கும் உன்னதமான தகுதியைப் பெற்றிருக்கும். சனிபகவான் சுபபலம் சிறப்பான வாழ்க்கைத் தரத்தைக் கொடுக்கும். அதோடு குரு பார்த்த சனிபகவான் இத்தகைய தரத்தை உறுதிசெய்யும் அமைப்பாகும் என்றால் மிகையாகாது. குருபகவானின் ஏழாம் பார்வை சுக ஸ்தானத்தின் மீதும், ஒன்பதாம் பார்வை ஆறாம் வீட்டின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் செவ்வாய், புதன்களின் மீதும் படிகிறது. செவ்வாய்பகவானை பார்வை செய்வதால் குருமங்கள யோகம் உண்டாகிறது. புத்திர ஸ்தானாதிபதியை புத்திரகாரகர் பார்வை செய்வதால் பூர்வபுண்ணியம் வலுக்கிறது.
 சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கு அதிபதியான சூரியபகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (அனுஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் நீச்சம் பெறுகிறார். களத்திர, நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் ஆறாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (விசாக நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். கேதுபகவான் லக்னத்தில் சந்திரபகவானின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். ராகுபகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் புதபகவானின் சாரத்தில் (கேட்டை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார்.
 பொதுவாக, தலைக்கு சூரியபகவானைக் கூறினாலும் சில கிரந்தங்களில் மண்டை ஓட்டை மட்டுமே குறிப்பிட்டுள்ளார்கள். அதாவது லேசான காயங்கள், சிறிய அளவில் விரிசல் அதனால் வரும் உபாதைகளுக்கு சூரியபகவானே காரணமாகிறார். மூளையை குருபகவானை குறிக்கிறார். மூளையிலிருந்து செல்லும் நரம்பு மண்டலத்தை புதபகவானும், அதாவது மூளையிடும் கட்டளைகளைச் செயல்படுத்துவது நரம்பாகும். மூளைக்குச் செல்லும் ரத்தத்தை செவ்வாய்பகவானும், மூளையில் உள்ள நாளமில்லா சுரப்பிகளை சுக்கிரபகவானும் குறிக்கிறார்கள். மறதிக்கு சந்திரபகவான் காரணமாகிறார். நம் கர்ம வினைகளுக்கு ஏற்ற பலாபலன்களை சனிபகவான் மற்றும் சர்ப்ப கிரகங்களான ராகு- கேது பகவான்கள் அளிக்கிறார்கள்.
 ஜாதகத்தில் எந்தவிதமான கிரகங்கள் பலம் குறைந்திருக்கிறார்களோ அந்த கிரகங்களின் காரகத்துவங்கள் பாதிக்கப்படுகின்றன. சில பாதிப்புகள் தற்காலிகமானதும் சில நிரந்தரமான பாதிப்பையும் கொடுக்கின்றன. அவருக்கு சூரியன், குரு, புத பகவான்கள் நல்ல நிலையில் இருப்பதால் நிரந்தரமான பாதிப்பு ஏற்படாது. மேற்கூறிய கிரகங்களுடன் அனுகூலமற்ற கோசார நிலைமைகளும் ஓரளவுக்கு காரணமாகிறது. அவருக்கு தற்சமயம் ராகுமகா தசையில் குருபகவானின் புக்தியில் கேதுபகவானின் புக்தி இந்த மாதம் இறுதிவரை நடக்கும். அடுத்த மாதம் முற்பகுதிக்குள் அவருக்கு பழையபடி நினைவுகள் வந்து விடும். பயப்படும்படியாக எதுவும் இல்லை. பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும், பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com