என் மகன் பி.சி.ஏ படித்துள்ளார். மேற்படிப்பு படிக்க வைக்கலாமா? அரசுத் தேர்வுக்கு படிக்க வைக்கலாமா? யோக பாக்கியங்கள் எவ்வாறு உள்ளன? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? - வாசகர் தஞ்சாவூர்

உங்கள் மகனுக்கு துலாம் லக்னம், துலாம் ராசி, சித்திரை நட்சத்திரம். தொழில் ஸ்தானாதிபதியான, பத்தாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் லக்ன கேந்திரத்தில் செவ்வாய்பகவானின்

உங்கள் மகனுக்கு துலாம் லக்னம், துலாம் ராசி, சித்திரை நட்சத்திரம். தொழில் ஸ்தானாதிபதியான, பத்தாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் லக்ன கேந்திரத்தில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (சித்திரை நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார். பத்தாமதிபதி லக்ன கேந்திரத்தில் அமர்ந்திருப்பது உத்தியோகம் / தொழில் வழியில் ஓரளவு நல்ல ஸ்திரத் தன்மையை கொடுக்கும் அமைப்பாகும். அதுவும் துலா லக்னத்திற்கு சந்திரபகவான் தொழில் ஸ்தானத்திற்கு மட்டுமே அதிபதியாக வருவதால் தொழில் ஸ்தானத்தின் பலன்கள் முழுமையாகத் தருவார் என்று புரிந்து கொள்ள வேண்டும். மேலும் அவர் எந்த அளவுக்கு சுப பலம் பெற்றிருக்கிறாரோ அந்த அளவுக்கு நற்பலன்களை வாரி வழங்குவார் என்றும் கூற வேண்டும். அவருக்கு சந்திரபகவான் முழுபலத்துடன் இருப்பதால் உத்தியோகத்தில் நல்ல நிலையை எட்டிவிடுவார் என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.
 சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் கேதுபகவானின் சாரத்தில் (அசுவினி நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் நீச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார். தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் களத்திர, நட்பு ஸ்தானத்தில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) மூலதிரிகோணம் பெற்று அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான விருச்சிக ராசியை அடைகிறார். இரண்டு மற்றும் ஏழாம் வீட்டிற்கு அதிபதியான செவ்வாய்பகவான் ராசி, நவாம்சம் இரண்டிலும் ஆட்சி பெற்றிருக்கிறார். லாபாதிபதியான சூரியபகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) உச்சம் பெற்று அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். நீச்சன் ஏறிய ராசி நாதன் ஆட்சி உச்சம் பெறுகையில் நீச்சபங்க ராஜயோகம் உண்டாகும். மேலும் நீச்சம் பெற்ற கிரகத்துடன் உச்ச கிரகம் இணைந்திருந்தாலும் நீச்சபங்க ராஜயோகம் உண்டாகும்.
 அவருக்கு சனிபகவானுடன் ஆட்சி பெற்றுள்ள செவ்வாய்பகவானும் உச்சம் பெற்றுள்ள சூரியபகவானும் இணைந்திருப்பதால் சனிபகவான் முழுமையான நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். சனிபகவான் நான்காம் வீடான தாயார், கல்வி, சுகம், வீடு, வாகனம் ஆகியவற்றிற்கும், ஐந்தாம் வீடான பூர்வபுண்ணியம், புத்திரம், புத்தி, விதி ஆகியவற்றிற்கும் காரகராகிறார். சனிபகவான் அதிபலம் பெற்றிருப்பதால் இவைகள் அனைத்தும் சிறப்பாக அமையும். ஏழாம் வீடு பலம் பெற்றிருக்கும் பட்சத்தில் தரும குணமும் உலக ஞானமும் கைவரப் பெறுவதற்குப் பல பயணங்களை மேற்கொள்ளுகிற வாய்ப்பும், எல்லோரையும் தன் வசப்படுத்துகின்ற காந்த சக்தியும் ஏற்படக் கூடும்.
 லக்னம் மற்றும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) உச்சம் பெற்று நவாம்சத்தில் தன் மூலதிரிகோண ராசியான துலாம் ராசியை அடைகிறார். லக்னம் என்பது ஒரு ஜாதகத்திற்கு அஸ்திவாரமாகும். இந்த அடிப்படை பலம் அவருக்கு சிறப்பாக அமைந்திருப்பது ஜாதகத்தில் மற்ற யோகங்கள் சரியாக வேலை செய்வதற்கும் அவயோகங்கள் கட்டுக்குள் இருக்கவும் உதவிகரமாக அமையும். அதாவது, இது நன்மைகளைக்கூட்டிக் கொடுக்கவும், தீமைகளைக் குறைத்துக் கொடுக்கவும் ஒரு கிரியா ஊக்கி போல அமைகிறது என்றால் மிகையாகாது.
 தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் சுய சாரத்தில் (பூரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டில் சுயசாரத்தில் (ரேவதி நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் அமர்ந்திருப்பதால் முழுமையான நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். கேதுபகவான் பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் ராகுபகவானின் சாரத்தில் (சதயம் நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் அமர்ந்து இருக்கிறார். ராகுபகவான் லாப ஸ்தானத்தில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூரம் நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு சந்திர, புதன், சனி, ராகு- கேது ஆகிய கிரகங்கள் வர்கோத்தமத்தில் இருக்கிறார்கள். புதன், சனி பகவான்களுக்கு முழுமையான நீச்சபங்க ராஜயோகம் உண்டாகிறது. சுக்கிரன், செவ்வாய் பகவான்கள் ராசியிலும் நவாம்சத்திலும் உச்சம் பெற்றிருக்கிறார்கள், பௌர்ணமி யோகம், சந்திரமங்கள யோகம், ருசக யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளன.
 அவருக்கு தற்சமயம் குருபகவானின் தசையில் சுய புக்தி நடக்கிறது. அவரை இந்திய குடிமைப் பணிக்கான தேர்வை எழுத, பயிற்சி வகுப்புகளில் சேர்த்து விடவும். மத்திய, மாநில அரசு வேலைக்கான போட்டித் தேர்வுகளை எழுத தயார் படுத்தவும். இன்னும் இரண்டாண்டுகளுக்குப்பிறகு சிறப்பான அரசு வேலை கிடைக்கும். எதிர்காலம் வளமாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com