எனக்கு 42 வயதாகிறது. இரண்டு பெண் குழந்தைகள். கணினி மென்பொருள் துறையில் நல்ல வேலையில் இருந்தேன். திடீரென்று ஆறு மாதத்திற்கு முன் வேகமாக நடக்க முடியாமல் போயிற்று. பிறகு படிப்படியாக நடை குறைந்து பிடிக்காமல் நிற்கவே முடியாமல் போயிவிட்டது. தலையிலிருந்து உடல் முழுவதும் செல்லும் நரம்புகளின் மேல் ஒட்டிக்கொண்டிருக்கும் ஜவ்வு கரைந்து விட்டதாகவும் இதற்குப் பெயர் இஐஈட என்றும் கூறுகிறார்கள். வேலையை ராஜினாமா செய்யச் சொல்லி விட்டார்கள். வீட்டிலிருந்தே என்ன தொழில் செய்யலாம்? நான் செய்த வேலையையே செய்யலாமா? ஜோதிட

உங்களுக்கு சிம்ம லக்னம், துலாம் ராசி, சித்திரை நட்சத்திரம். அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கதிபதியான சந்திரபகவான் தைரிய முயற்சி வைராக்ய ஸ்தானமான மூன்றாம் வீட்டில்

உங்களுக்கு சிம்ம லக்னம், துலாம் ராசி, சித்திரை நட்சத்திரம். அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கதிபதியான சந்திரபகவான் தைரிய முயற்சி வைராக்ய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (சித்திரை நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே வீட்டில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார். சந்திரபகவானை "தனு' (உடல்) காரகர், மனோகாரகர் என்று அழைக்கிறோம். மன நலமும், உடல் நலமும் சீராக அமைய சந்திரபகவானின் சுபபலம் அவசியம். சந்திரபகவானுக்கு இரண்டு புறமும் அல்லது சந்திரபகவானுடன் கிரகங்கள் இணைந்தோ இருக்க வேண்டும். சந்திரபகவானுக்கு பன்னிரண்டாம் வீட்டில் ராகுபகவான் இருப்பதை மகாசக்தி யோகம் என்றழைப்பார்கள். இந்த யோகத்தினால் அம்பிகையின் அருள் கிடைக்கும். சந்திரபகவானுக்கு ஆறு, ஏழு, எட்டாம் வீடுகளில் சுப கிரகங்கள் இருப்பதை சுப ஆதியோகம் என்றும் அசுபக்கிரகங்கள் இருப்பதை அசுப ஆதியோகம் என்றும் சுப அல்லது அசுப கிரகங்கள் கலந்து இருப்பதை மிஸ்ர ஆதியோகம் என்றும் அழைக்கப்படுகிறது.
 உங்களுக்கு சந்திரபகவானுக்கு ஆறாம் வீட்டில் கேதுபகவானும் ஏழாம் வீட்டில் செவ்வாய், சுக்கிரபகவான்களும் எட்டாம் வீட்டில் குருபகவானும் இருப்பதால் மிஸ்ர ஆதியோகம் உண்டாகிறது. பன்னிரண்டாமதிபதி மூன்றாம் வீட்டில் இருப்பதால் விபரீத ராஜயோகம் உண்டாகிறது. இதனால் பலவிதமான செல்வங்களையும் சுபிட்சங்களையும் அதிர்ஷ்ட வசமாகப் பெறுவார்கள் என்றும், எந்த ஒரு காரியமானாலும் அதை சாதிக்கக் கூடிய வல்லமையும் உண்டாகிவிடும் என்றும், எதிரிகளை வெற்றி கொள்ளும் ஆற்றலும் உண்டாகிவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. சந்திரபகவானும் குருபகவானும் சஷ்டாஷ்டகத்தில் (ஒருவருக்கொருவர் ஆறு, எட்டாம் வீடுகளில் இருப்பது) இருந்தால் சகட (சக்கரம்) யோகம் என்று பெயர். இதனால் வாழ்க்கை சக்கரம்போல் ஏற்ற இறக்கமாகச் செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 சந்திரபகவானுக்கு இரண்டு புறமும் எந்த கிரகமும் இல்லாமலும் அவரை எந்தக் கிரகமும் பார்வை செய்யாமலும் இருந்தால்தான் அது கேமத்துரும யோகம் வகையை அடையும். மேலும் குருபகவான் சந்திரபகவானுக்கு கேந்திரத்தில் இருந்து கஜகேசரி யோகம் உண்டானால் கேமத்துரும யோகம் அடிபட்டுவிடும் என்றும் கூற வேண்டும். இப்படி பல வகையிலும் சந்திரபகவானின் பலத்தைச் சீர்தூக்கிப் பார்த்து அவர் பெற்றிருக்கும் சுப, அசுப பலன்களில் எது கூடுதலாக உள்ளது என்றுணர்ந்து முடிவு செய்ய வேண்டும். ஒருவருக்கு மேற்கூறிய வகையில் சுப பலன்கள் முழுமையாக உண்டாக வாய்ப்பில்லை என்பதும் உண்மை. உங்களுக்கு உடல்காரகரான சந்திரபகவான் மூன்றில் இரண்டு சுப பலம் பெற்றிருக்கிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
 லக்னாதிபதி சூரியபகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் ராகுபகவானின் சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார். லக்னாதிபதி லாப ஸ்தானத்திற்குச் செல்வது சிறப்பு. சூரியபகவான் ஆத்மகாரகராகி ராகுபகவானின் சாரத்தில் இருப்பதால் அமானுஷ்யமான விஷயங்களைச் சுலபமாகப் புரிந்து கொள்ளும் ஆற்றலும் உண்டாகும். இதனால் ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், பஞ்சபட்சி சாஸ்திரம், மச்ச சாஸ்திரம், வேதம், வேதாந்தம் போன்ற ரகசியமான கலைகளை புரிந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும். குறிப்பாக, ஜீவாத்மா, பரமாத்மா தொடர்பு, பஞ்சபூத தத்துவ அறிவு ஆகியவை சுலபமாகக் கைகூடும்.
 பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (மிருகசீரிஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் நட்பு வீடான சிம்ம ராசியை அடைகிறார். குருபகவானின் ஐந்தாம் பார்வை இரண்டாம் வீட்டின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் ராகுபகவானின் மீதும், ஏழாம் பார்வை நான்காம் வீட்டின் மீதும், ஒன்பதாம் பார்வை ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டின் மீதும் படிகிறது.
 தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சுய சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்திலேயே மூலதிரிகோணம் பெற்று அமர்ந்து தன் நான்காம் பார்வையால் அயன ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்து இருக்கும் சனிபகவானையும்; ஏழாம் பார்வையாக தைரிய ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் சந்திரபகவானையும் (சந்திரமங்கள யோகம்); எட்டாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். சுகாதிபதி சுகஸ்தானத்தைப் பார்வை செய்வது சிறப்பு.
 ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் புதபகவானின் சாரத்தில் (ஆயில்ய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான மகர ராசியை அடைகிறார். களத்திர நட்பு ஸ்தானாதிபதி பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்திருப்பது சிறு குறை என்றாலும், ஆறாமதிபதி பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்து இருப்பது விபரீத ராஜயோகத்தைக் கொடுக்கும் என்றும் புரிந்துகொள்ள வேண்டும். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் லாப ஸ்தானத்திலேயே செவ்வாய்பகவானின் சாரத்தில் (மிருகசீரிஷ நட்சத்திரம்) ஆட்சி பெற்றமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். சனிபகவானின் மூன்றாம் பார்வை தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் ராகுபகவானையும் ஏழாம் பார்வை ருணம், ரோக, சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டையும் பத்தாம் பார்வை பாக்கிய ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் செவ்வாய், சுக்கிரபகவான்களையும் பார்வை செய்கிறார்.
 பொதுவாக, உத்தியோகத்திற்கு ஆறாம் வீட்டையும் தொழிலுக்கு பத்தாம் வீட்டையும் பார்க்க வேண்டும். இந்த ஆண்டு வீடுகளின் பலத்தைப் பொறுத்து உத்தியோகம் பார்ப்பது நலமா அல்லது தொழில் செய்யலாமா என்றும் ஆராய வேண்டும். அதோடு களத்திர, நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டையும் ஏழாம் வீட்டு அதிபதியின் பலத்தையும் ஆராய வேண்டும். ஏழாம் வீடு நண்பர்களின் வீடு. ஒருவருக்கு நண்பர்களால் நன்மை கிடைக்குமா, கிடைக்காதா என்பதை ஏழாம் வீட்டின் பலத்தைப் பார்த்து முடிவு செய்ய வேண்டும். ஏழாம் வீடு பலம் குறைந்து பத்தாம் வீடு சுப பலம் பெற்றிருந்தால் சொந்தமாகத் தனித்து தொழில் செய்யலாம். ஏழாம் வீடும் பத்தாம் வீடும் ஆறாம் வீடும் சுப பலம் பெற்றிருப்பதால் நீங்கள் படித்துள்ள துறையில் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம். சைபர், செக்யூரிட்டி, வங்கி, நிதி முறைகேடுகளைக் கண்டு பிடித்தல் போன்ற கணினி துறைகளில் ஈடுபடலாம். நண்பர்களோடு ஹோட்டல், மளிகை ஸ்டோர் போன்ற தொழில்களையும் பகுதி நேரமாகச் செய்யலாம். மேலும் ஜோதிடத்திலும் ஈடுபட்டு வெற்றியடையலாம். குருபகவான் புத்திர காரகர் புத்திர ஸ்தானாதிபதியாக ஆவதால் உங்கள் குழந்தைகள் இருவரும் நல்ல முறையில் முன்னேறிவிடுவார்கள்.
 பொதுவாக, நரம்பு சம்பந்தமான வியாதிகளுக்கு புதபகவான் காரணமாகிறார். உங்களுக்கு ஆறாமதிபதி விபரீத ராஜயோகம் பெற்றிருப்பதும் புதபகவான் தன் ஆட்சி வீட்டில் பலம் பெற்று அமர்ந்திருப்பதும் குறையாகும். லக்னாதிபதி லாப ஸ்தானத்தில் அதிபலம் பெற்றிருந்தாலும் சார பலத்தால் சுபபலம் குறைந்தவராகிறார். குடும்ப ஸ்தானத்தில் ராகுபகவான் வர்கோத்தமத்தில் அமர்ந்து குருபகவானின் பார்வையை பெற்றிருப்பதால் ஆறாம் வீட்டையும் குருபகவான் பார்வை செய்வதாலும் சூரியபகவானுக்கு உண்டான சுப பலம் கூடுகிறது. தற்சமயம் சனிபகவானின் தசையில் அஷ்டம ஸ்தானத்தில் வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கும் கேதுபகவானின் புக்தி நடப்பதால் இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப்பிறகு தொடங்கும் சுக்கிரபகவானின் புக்தியிலிருந்து உங்கள் ஆரோக்கியம் சீர்படத்தொடங்கும். ஆயுர் வேத சிகிச்சை முறை பயனளிக்கும். படிப்படியாக சனி மகாதசையில் வாழ்க்கைத் தரம் உயரத்தொடங்கும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com