வெளிநாடு செல்வீர்கள்!

நான் மருத்துவத்துறையில் உதவியாளராகப் பணிபுரிகிறேன். நான் வெளிநாடு சென்று பணிபுரிய வாய்ப்புள்ளதா? 

நான் மருத்துவத்துறையில் உதவியாளராகப் பணிபுரிகிறேன். நான் வெளிநாடு சென்று பணிபுரிய வாய்ப்புள்ளதா? அப்படி வாய்ப்பு இருந்தால் எப்பொழுது நடக்கும்? என் ஜாதகத்தில் சிறப்பான யோகங்கள் உள்ளதாகக் கூறுகிறார்கள். எங்கள் குடும்ப எதிர்காலம் பற்றி கூறவும். பரிகாரம் என்ன செய்ய வேண்டும்?

வாசகி, சென்னை

உங்களுக்கு சிம்ம லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். அயனஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டுக்கதிபதியான சந்திரபகவான் அஷ்டமஸ்தனமான எட்டாம் வீட்டில் சனி பகவானின் சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) விபரீத ராஜயோகம் (பன்னிரண்டாம்  அதிபதி எட்டாம் வீட்டில் இருப்பது) பெற்று நவாம்சத்தில் தன் நீச்ச ராசியான விருச்சி ராசியை அடைகிறார். ஒருவர் பிறந்த லக்னத்திற்கு பன்னிரண்டாமிடம் விரய ஸ்தானமென்றும், அயன, சயன மோட்ச ஸ்தானமென்றும் கூறப்படுகிறது. இதைக் கொண்டு ஜாதகரின் செலவினங்கள், தூக்கம், படுக்கை சுகம், பிரயாணம், நாணயம், வாழ்வின் இறுதி முதலியவைகளை நாம் தெரிந்து கொள்ள முடியும். 

உடலில் இது பாதங்களைக் குறிக்கும். அதோடு பன்னிரண்டாமிடம் இடக்கண்ணையும், இரண்டாமிடம் வலக்கண்ணையும் குறிக்கும் என்பதையும் அனைவரும் அறிந்ததே. எந்த ஒரு ஜாதகத்திலும் விரய ஸ்தானதிபதி உச்சம் பெற்றிருப்பதோ அல்லது வேறு ஏதாவது ஒரு வகையில் சிறப்பான பலம் பெற்றிருப்பதோ நண்மையாகும். 

இந்த விரயஸ்தானத்திற்கு அதிபதியாக சந்திரபகவான் அமைந்தால் என்ன பலன் உண்டாகும் என்று கூறப்பட்டுள்ளது. (இது சிம்ம லக்னத்திற்கு அமையும்). உடல் ஆரோக்கியத்திற்கும், அன்னை வர்க்கத்திற்கும் சற்று கூடுதல் செலவு செய்ய நேரிடும். அதே நேரம் சந்திர பகவான் சுப பலத்துடன் (விபரீத ராஜயோகம்) இருப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்பட்டும், அன்னைக்கும், அன்னை வழி உறவினர்களாலும் ஆதாயம் உண்டாகும் என்று புரிந்து கொள்ள வேண்டும். அதோடு ஒரு ஜாதகத்தில் எந்த கிரகம் எப்படி இருந்த போதிலும், பாக்கியாதிபதியான ஒன்பதாம் அதிபதியும், விரயாதிபதியான பன்னிரண்டாமதிபதியும் பலம் பெற்றிருந்தால் போதும், பிரபல ராஜயோகம் உண்டாகிவிடும். சமுதாயத்திற்குத் தொண்டாற்றும் வாய்ப்பும் தானாகவே அமைந்து விடும் என்பதும் அனுபவ உண்மை. சந்திரபகவான் நவாம்சத்தில் நீச்சம் பெற்றிருப்பது அவரின் சுப பலம் சிறிது குறைகிறது.

 லக்னாதிபதியான சூரியபகவான் பாக்கியஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சுய சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) உச்சம் பெற்றமர்ந்து நவாம்சத்தில் தன் மூலத் திரி கோண வீடான தனுசு ராசியை அடைகிறார். அதோடு உயிரைக் குறிக்கும் லக்னமும் சிம்ம ராசிக்கு அதிபதியான சூரியபகவானின் சாரத்தில் (உத்திரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் குருபகவானின் ராசியான தனுசு ராசியை அடைகிறார். இதனால் லக்னமும், லக்னாதிபதியும் முழு பலத்துடன் இருக்கிறார்கள் என்று கூற வேண்டும். லக்னம் ஒருவருடைய ஆயுளையும், ஆத்மாவையும் குறிக்கும். சூரியபகவானை ஆத்ம காரகர் என்றும் அழைக்கிறோம்.

லக்னாதிபதி (விதி) சூரியபகவான் பாக்கியஸ்தானத்தில் உச்சம், மதி என்கிற சந்திர ராசிக்கு அதிபதியான குருபகவான் லக்னத்தில் கதி என்கிற சூரியபகவான் பாக்கியஸ்தானத்தில் உச்சம் பெற்றும் அந்த வீட்டிற்கு அதிபதியான செவ்வாய் பகவான் லக்ன கேந்திரத்தில் அமர்ந்து இருக்கிறார். அதனால் விதி, மதி, கதி ஆகிய மூன்றும் உன்னதமாக அமைந்துவிட்டது என்று புரிந்து கொள்ள வேண்டும். 

பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அஷ்டமஸ்தனமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் லக்னத்தில் கேதுபகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். குருபகவானின் ஐந்தாம் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானமான தன் மூலத் திரிகோண ராசியான தனுசு ராசியையும், ஏழாம் பார்வையாக களத்திர நட்பு ஸ்தானத்தையும் அங்கமர்ந்திருக்கும் கேது பகவானையும், ஒன்பதாம் பார்வையாக பாக்கிய  ஸ்தானத்தையும் அங்கு உச்சம் பெற்றமர்ந்திருக்கும் சூரிய பகவானையும் (சிவராஜயோகம்) புத பகவானையும் பார்வை செய்கிறார். லக்னத்தில் உள்ள குருபகவானுடன் செவ்வாய் பகவான் (குரு மங்கள யோகம்) சனி, ராகு பகவான்களும் இணைந்திருக்கிறார்கள். 

சுகஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும், அதிபதியான செவ்வாய் பகவான் லக்னத்தில் கேது பகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். குரு, செவ்வாய் பகவான்கள் ஒரே நட்சத்திர பாகையில் இணைந்திருப்பது சிறப்பான குருமங்கள யோகத்தைக் கொடுக்கிறது. இத்தகைய நெருக்கத்தினால் வீடு, நிலம், வாகனம், உற்றார் உறவினர்களின் நேசம், அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளின் மூலம் நன்மை, மருந்து, மருத்துவம் சார்ந்த துறைகள், பங்கு வர்த்தகம் போன்ற துறைகளின் மூலமும் சிறப்பான ஆதாயம் கிடைக்கும். அதோடு செவ்வாய் பகவானின் நான்காம் பார்வை தன் ஆட்சி வீடான விருச்சிக ராசியின் மீதும், ஏழாம் பார்வை களத்திர நட்பு ஸ்தானத்தின் மீதும் அங்கமர்ந்திருக்கும் கேது பகவானின் மீதும், எட்டாம் பார்வை எட்டாம் வீட்டின் மீதும் அங்கமர்ந்திருக்கும் சந்திர பகவானின் மீதும் (சந்திர மங்கள யோகம்) படிகிறது.

தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், லாபஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சுக்கிர பகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். 

புத பகவான் உச்ச சூரிய பகவானுடன் இணைந்திருப்பதால் சிறப்பான புத ஆதித்ய யோகம் உண்டாகிறது. இதை நிபுணத்துவ யோகம் என்பார்கள். இதனால், தான் ஈடுபட்டுள்ள துறையில் அனைத்து விஷயங்களையும் புரிந்து கொண்டு முன்னிலை வகிக்கும் ஆற்றலும், திறமையும் இயல்பாகவே அமைந்திருக்கும். 

தைரியஸ்தனமான மூன்றாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் லாபஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் செவ்வாய் பகவானின் சாரத்தில் (மிருகசீரிஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். 

சுக்கிரபகவான் தொழில் ஸ்தானதிபதியாகி, பாக்கியாதிபதியின் சாரத்தில் அமர்ந்திருப்பது ஒரு வகையில் தர்மகர்மாதிபதி யோகத்தைக் கொடுக்கும். ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் லக்னத்தில் சூரிய பகவானின் சாரத்தில் (உத்திரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். 

ராகு பகவான் லக்னத்தில் கேது பகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். கேது பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் செவ்வாய் பகவானின் சாரத்தில் (அவிட்டம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். பொதுவாக ஒன்பதாம் வீடும், பன்னிரண்டாம் வீடும் வெளிநாட்டு பயணத்தைக் குறிக்கும் இடங்களாகும். அதோடு ஏழாம் வீடும் ஏழாம் வீட்டோனின் பலமும் அவசியமாகும். 

அனைத்து லக்னத்திற்கும் குரு, செவ், சனி மற்றும் சர்ப்பக் கிரகங்களின் சுப பலத்தால் வெளிநாட்டுப் பயணங்கள் கை கூடி வரும். மேலும் சாதகமான தசா புக்திகள் நடக்கும் காலங்களில் வெளிநாடு செல்ல வாய்ப்புகள் தானாகவே தேடி வரும். நீர் ராசிகளும்,    சர ராசிகளும் வலுத்திருந்தால் நிச்சயம் வெளிநாடு செல்வார் என்றும் கூறலாம்.

லக்னாதிபதி ஒன்பதாம் வீட்டில் அதிபலம் பெற்று உச்சம் பெற்று, லாபாதிபதியுடன் இணைத்திருப்பதாலும், ஒன்பதாம் வீடு சர ராசியாக ஆவதாலும், தற்சமயம் சுக்கிர பகவானின் தசையில், ஏழாமதிபதியான சனி பகவானின் புக்தி நடக்கத் தொடங்க உள்ளதாலும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு, கல்வி கற்பதற்காகவோ அல்லது உத்தியோகத்திற்காகவோ வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். தொடர்வதும் சூரிய பகவானின் தசையாகவும் இருப்பதால், நிரந்தரமாக வெளிநாட்டில் குறைந்தது பதினைந்து ஆண்டுகளாவது வாழும் நிலை உண்டாகும். மேலும் ஒன்றுக்கும் மேற்பட்ட இனங்களிலிருந்தும் வருமானம் கிடைக்கும். அதே நேரம், ஸ்திர லக்னமான சிம்ம லக்னத்தில் பலம் பெற்ற நான்கு கிரகங்கள் அமர்ந்திருப்பதால், தாய்நாட்டின் தொடர்பும் இருந்து கொண்டே இருக்கும். மற்றபடி எதிர்காலம் வளமாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com