Enable Javscript for better performance
தலைக்கு வந்தது....- Dinamani

சுடச்சுட

    

    தலைக்கு வந்தது....

    By DIN  |   Published on : 12th June 2020 07:58 PM  |   அ+அ அ-   |    |  

    என் மனைவி மருத்துவர். மார்பகப் புற்றுநோய் தொடங்கிய உடனே கண்டுபிடித்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்து எடுத்து விட்டார்கள். இதனால் ரேடியேஷன், கீமோ சிகிச்சை தேவையில்லை என்று சொல்லி விட்டார்கள். அவரின் ஜாதகம் எவ்வாறு உள்ளது? ஆயுள் பற்றியும் எதிர்காலம் பற்றியும் கூறவும். பரிகாரம் என்ன செய்ய வேண்டும்? 

    -வாசகர், மதுரை.

    உங்கள் மனைவிக்கு மீன லக்னம், கன்னி ராசி, உத்திரம் நட்சத்திரம். பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானாதிபதியான சந்திரபகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் சூரிய பகவானின் சாரத்தில் (உத்திரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார்.
    சந்திர பகவான் இரண்டாம் திரிகோண ஸ்தானத்திற்கு அதிபதியாக மூன்றாம் கேந்திரத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. கேந்திர ஸ்தானங்கள் என்பது விஷ்ணு ஸ்தானங்கள் என்று அழைக்கப்படுகின்றன. லக்ன கேந்திரத்தை விட சதுர்த்த கேந்திரமான நான்காமிடம் பலமுடையதாகும்.
    இதைவிட சப்தம கேந்திரமான ஏழாமிடமும், ஏழாமிடத்தை விட தசம கேந்திரமான பத்தாமிடம் மிகவும் பிரதானமாகும். இவற்றில் நின்ற கிரகங்கள் யாவும் ஆண் தன்மை கொண்டதாகவும், ஜீவன யோகம் செய்து அதன் வழியில் வருவாய் யோகம் பெறக்கூடியதாகவும் அமைகிறது. திரிகோண ஸ்தானங்கள் லட்சுமி ஸ்தானங்கள் என்றழைக்கப்படுகின்றன. இதில் லக்ன கோணத்தை விட பஞ்சம ஸ்தானமான ஐந்தாம் இல்லத் திரிகோணம் பலமுடையது. இதைவிட பாக்கிய ஸ்தானமான நவமத் திரிகோணம் பலமுடையது.
    திரிகோண ஸ்தானங்கள் பெண் தன்மையுடையது என்பதால், இந்த ஸ்தானங்களில் இடம் பெற்றுள்ள கிரகங்கள் யாவும் பொருள் சேர்ப்பதும், கையிருப்பில் உள்ள பொருட்களை விருத்தி செய்யக் கூடியதாகவும் இருக்கும். இவைகள் தர்மகர்மாதிபதி யோகம் என்றும், ராஜ்ய சம்பத்து தரும் மகாபாக்கிய யோகம் என்றும், பூர்வபுண்ணியாதிபதியின் சம்பந்தம் பெற்றால் சமத்துவ ராஜயோகம் என்றும் கூறப்பட்டுள்ளது.
    இத்தகைய பரிவர்த்தனை (அ) சேர்க்கை பெற்றிருக்கும் கிரகங்களை 3, 6, 8, 12-ஆம் அதிபதிகள் சேர்க்கை (அ) பார்வை செய்தால் யோகத்தின் முழுமையான பலம் கிட்டாது என்று கூற வேண்டும். மேற்கூறிய ஸ்தான பலத்தால் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான சந்திர பகவான் சுப பலம் பெற்றிருக்கிறார் என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.
    லக்னம் மற்றும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் அயன மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் ராகு பகவானின் சாரத்தில் (சதய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான மீன ராசியை அடைகிறார். குரு பகவான் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப் பெற்று ராசியிலும் நவாம்சத்திலும் சுப பலம் பெற்றிருக்கிறார். பொதுவாக குருபகவான் அரசாங்க பதவி, ஆதரவைப் பெற்றுத் தருவார். விரும்பியதை விரும்பியபடியே கிடைக்கச் செய்வார். நற்கருமங்கள், அறக்கட்டளைகள், தான தர்மங்கள், பொது காரியங்களில் ஈடுபாடு, ஆலய திருப்பணிகள் ஆகியவைகளில் ஈடுபடச் செய்வார். ஜோதிடம் போன்ற நுணுக்கமான கலைகளில் தேர்ச்சியைத் தருவார். ஸ்ருதி (நூல்களிலிருந்து அறிவது), யுக்தி (உபாயம்), அனுபவம் ஆகிய மூன்று நிலைகளிலும் சிறப்பான தேர்ச்சியை தருவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
    குருபகவானின் ஐந்தாம் பார்வை சுகஸ்தானமான நான்காம் வீட்டின் மீதும் அங்கமர்ந்திருக்கும் சுக்கிர பகவானின் மீதும் படிகிறது. இதனால் வீடு, வாகனம், ஆடம்பர வாழ்க்கை ஆகியவைகள் அமையும். வாழ்க்கைத்துணை நலம் மேம்படும். இது சுகம் தரும் சுக்கிரன் என்கிற நிலையை உருவாக்கும் என்றால் மிகையாகாது.
    குரு பகவானின் ஏழாம் பார்வை ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டின் மீதும், குருபகவானின் ஒன்பதாம் பார்வை அஷ்டம ஸ்தானம், ஆயுள் ஸ்தானம் (பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானம்) ஆகிய எட்டாம் வீட்டின் மீதும் படிகிறது.
    தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்திலேயே சுக்கிர பகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். செவ்வாய் பகவானின் நான்காம் பார்வை பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டின் மீதும் அங்கமர்ந்திருக்கும் ராகு பகவானின் மீதும், ஏழாம் பார்வை அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டின் மீதும், எட்டாம் பார்வை ஒன்பதாம் வீடான தன் ஆட்சி வீடான விருச்சிக ராசியின் மீதும் படிகிறது.
    தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் சுகஸ்தானமான நான்காம் வீட்டில் குரு பகவானின் சாரத்தில் (புனர்பூச நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே வீட்டில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார். 
    ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கதிபதியான சூரிய பகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் செவ்வாய் பகவானின் சாரத்தில் (மிருகசீரிஷ நட்சத்திரம்) விபரீத ராஜயோகம் பெற்று நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார்.
    சுகஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சந்திர பகவானின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். புத பகவான் சுப கிரகமாகி கேந்திர ராசிகளான நான்கு மற்றும் ஏழாம் வீடுகளுக்கு அதிபதியாக வருவதால் கேந்திராதிபத்ய தோஷம் உண்டாகும் என்பது பொதுவிதி.
    இத்தகைய புத பகவான் மறைவு பெற்றிருப்பதாலும் சுபாவ அசுப கிரகமான சூரிய பகவானுடன் இணைந்திருப்பதாலும் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப் பெறுகிறார். அதோடு புத ஆதித்ய யோகமும் உண்டாகிறது. இதனால் சூரிய பகவானின் சுப பலத்தால் மதிப்பு, கம்பீரம், அறிவு, வைராக்யம், கெளரவம், கண்டிப்பு, பராக்கிரமம் ஆகியவைகளும், புத பலத்தால் உண்டாகும் பொது அறிவு, கல்வியறிவு, யூகம், புத்திசாலித்தனம், நடுநிலைமை ஆகியவைகளும் பரிமளிக்கும்.
    லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் லாபஸ்தானத்தில் சந்திர பகவானின் சாரத்தில் (திருவோண நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். ராகு பகவான் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் புத பகவானின் சாரத்தில் (ஆயில்ய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். 
    கேது பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் சந்திர பகவானின் சாரத்தில் (திருவோண நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். உடல் உபாதைகளுக்கு ஆறாம் வீட்டின் பலத்தை லக்ன பலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து முடிவு செய்ய வேண்டும் என்று பலமுறை எழுதியிருக்கிறோம். 
    ஆறாம் வீட்டுக்கதிபதியான சூரிய பகவான் விபரீத ராஜ யோகம் பெற்றிருக்கிறார். எந்த ஒரு கிரகத்திற்கும் ராஜயோக அமைப்பு உண்டானால் அது அதீத பலத்தைக் குறிக்கும். 
    அதனால் அந்த பாவத்திற்குரிய நன்மை தீமை இரண்டுமே உண்டாகும் என்றும் கூற வேண்டும். லக்னாதிபதி சர்பக் கிரகத்தின் சாரத்தில் அமர்ந்திருப்பது சிறு குறை என்றும் பார்க்க வேண்டும். மார்பகப் புற்று நோய்க்கு சுக்கிரபகவான் காரணமாகிறார். சுக்கிர பகவான் தன் பரஸ்பரம் விரோதம் பெற்றுள்ள கிரகமான குரு பகவானின் சாரத்தில் அதீத பலம் பெற்றிருப்பதை அசுப நிலை என்றே பார்க்கவேண்டும்.
    குருபகவானின் பார்வையைப் பெறுவதனால் கஷ்டங்கள் ஏற்பட்டாலும் அவைகளிலிருந்து விடுபட்டு விடும் நிலை உண்டாகிவிடும் என்று உறுதியாகக் கூறலாம். மேலும் பூர்வ புண்ணியாதிபதியும், பாக்கியாதிபதியும் சுப பலம் பெற்றிருக்கிறார்கள். அதனால் புற்றுநோய் ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. அறுவை சிகிச்சை முடிந்து விரைவில் குணமடைந்து விடுவார். "தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று' என்று கூற வேண்டும்! சனி பகவான் ஆட்சி பெற்றிருப்பதால் தீர்க்காயுள் உண்டு. தற்சமயம் சனி பகவானின் தசையில் சுய புக்தி முடிந்து புத பகவானின் புக்தி நடப்பதால் சனிபகவானின் தசை யோக தசையாக அமைந்து படிப்படியான முன்னேற்றத்தைக் கொடுக்கும். இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு மருத்துவ சேவைக்குச் செல்வார். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும். 

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp