என் வீட்டு சுற்றுச் சுவரை உடைத்து அடுத்த வீட்டுக்காரர் ஆக்கிரமிப்பு செய்து கட்டடம் கட்டிய வழக்கில் எனக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தும் இன்னும் அதை இடிக்கவில்லை. எப்பொழுது கோர்ட்டின் மூலம் இடித்து என் சொத்தை முழுமையாக அனுபவிக்கும் யோகம் உண்டாகும்? அந்த சொத்தை விற்று விடலாமா?
-வாசகர், மதுரை.
உங்களுக்கு விருச்சிக லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம். லக்னம் மற்றும் ஆறாம் வீட்டுக்கதிபதியான செவ்வாய் பகவான் லக்னத்தில் ஆட்சி பெற்றமர்ந்து பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றான ருசக யோகத்தைப் பெற்று, சூரியபகவானுடனும் (சிவராஜயோகம்) புத, சுக்கிரன் கேது பகவான்களுடன் இணைந்திருக்கிறார்.
தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் அயன ஸ்தானத்தில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக சுகஸ்தானமான நான்காம் வீட்டையும், ஏழாம் பார்வையாக ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டையும், ஒன்பதாம் பார்வையாக எட்டாம் வீட்டையும் பார்வை செய்கிறார். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், சுகஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சுய சாரத்தில் அமர்ந்து இருப்பது சிறப்பு. தற்சமயம் சனி மஹாதசையும் முடியும் தறுவாயில் உள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் கோர்ட் மூலமாக ஆக்கிரமிப்பு இடிக்கப்பட்டு விடும். சொத்து கைவிட்டுப் போகாது. அதனால் விற்க முயற்சி செய்ய வேண்டாம். ஆயுள் தீர்க்கமாக உள்ளது. பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும், முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.