எனக்கு எப்பொழுது எந்த திசையிலிருந்து பெண் அமையும்? நான் மருத்துவத்துறையில் உள்ளேன். சுய தொழில் செய்யலாமா? அரசு வேலை கிடைக்குமா? எந்தக் கடவுளை வணங்க வேண்டும்? கடன் தொல்லைகள் எப்போது தீரும்?
-வாசகர், மதுரை -16
உங்களுக்கு தனுசு லக்னம், தனுசு ராசி, உத்திராடம் நட்சத்திரம். லக்னம் மற்றும் சுகஸ்தானமான நான்காம் வீட்டிற்கு அதிபதியான குரு பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில், தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவானுடனும், ருணம் ரோகம் சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவானுடனும் இணைந்திருக்கிறார். குரு பகவானின் ஐந்தாம் பார்வை தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டின் மீதும் அங்கமர்ந்திருக்கும் கேது பகவானின் மீதும், ஏழாம் பார்வை சுகஸ்தானமான தன் ஆட்சி வீட்டின் மீதும், ஒன்பதாம் பார்வை ருணம், ரோகம், சத்ரு ஸ்தானத்தின் மீதும் படிகிறது.
பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் லக்னத்தில் அஷ்டமாதிபதியான சந்திர பகவானுடன் (சந்திரமங்கள யோகம்) இணைந்து இருக்கிறார். செவ்வாய் பகவானின் நான்காம் பார்வை சுகஸ்தானத்தின் மீதும், ஏழாம் பார்வை களத்திர நட்பு ஸ்தானத்தின் மீதும், எட்டாம் பார்வை அஷ்டம ஸ்தானத்தின் மீதும் படிகிறது.
களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில், நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கதிபதியான சூரிய பகவானுடன் இணைந்திருக்கிறார். இதனால் புத ஆதித்ய யோகம், தர்மகர்மாதிபதி யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உண்டாகின்றன. தற்சமயம் ராகு பகவானின் தசையில் செவ்வாய் பகவானின் புக்தி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நடக்கும். இந்த காலகட்டத்திற்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். தனியார் துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுயதொழில் செய்யக்கூடாது குரு மஹாதசை யோக தசையாகவே செல்லும். மற்றபடி வாழ்க்கையில் பெரியதாக கடன் பிரச்னை என்று எதுவும் ஏற்படாது. பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானை வழிபட்டு வரவும்.