சுக - பாக்கியாதிபதிகளின் பரிவர்த்தனை!

என் சகோதரியின் மகள் முதலாமாண்டு கல்லூரியில் படிக்கிறார். இந்த புத்தாண்டு தொடங்கியவுடன் திடீரென்று உடலில் சில இடங்களில் வீக்கம் ஏற்படத் தொடங்கியது.

என் சகோதரியின் மகள் முதலாமாண்டு கல்லூரியில் படிக்கிறார். இந்த புத்தாண்டு தொடங்கியவுடன் திடீரென்று உடலில் சில இடங்களில் வீக்கம் ஏற்படத் தொடங்கியது. நாளமில்லா சுரப்பிகள் அனைத்தும் சரியாக வேலை செய்யவில்லை என்று மருத்துவர்கள் கூறினார்கள். புற்றுநோயாக இருக்கும் என்றும் சந்தேகப் படுகிறார்கள். அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தற்சமயம் சிறிது முன்னேற்றம் உண்டாகி உள்ளது. இந்த நோய் வந்ததற்கு காரணமும் தெரியவில்லை. இது எப்போது தீரும்? ஆயுள் எவ்வாறு உள்ளது? நன்றாகப் படிக்கக்கூடிய பெண், எதிர்காலம் எவ்வாறு அமையும்? 

- வாசகர், சென்னை

உங்கள் சகோதரியின் மகளுக்கு கன்னி லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சூரியபகவானின் சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். சந்திரபகவான் தனு (உடல்) காரகராவார். பொதுவாக, சந்திரபகவான் ஆட்சி, உச்சம் பெற்றோ, கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமர்ந்தோ, நட்பு கிரகங்களுடன் இணைந்தோ அல்லது பார்க்கப்பட்டாலோ பலம் பெற்றவராவார். மற்ற வர்க்கங்களிலும் பலம் பெற்றிருந்தால் இறுதி வரை உடல் உபாதைகள் ஏற்படாமலும் கவர்ச்சி வசீகரம் குறையாமலும் ஆரோக்கியத்துடன் வாழ்வார் என்று கூறவேண்டும். அவருக்கு சந்திரபகவான் உச்சம் பெற்றிருப்பது சிறப்பென்றாலும் அயன ஸ்தானமான பன்னிரெண்டாம் அதிபதியின் சாரத்தில் அமர்ந்திருக்கிறார். 

சந்திரபகவானுடன் குருபகவான் (கேந்திராதிபதி), சனிபகவான் (திரிகோணாதிபதி) ஆகியோர் இணைந்திருக்கிறார்கள். செவ்வாய் பகவானும் ஏழாம் பார்வையாக பார்வை செய்கிறார். இதனால் குருசந்திர யோகம் , சந்திர மங்கள யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உண்டாகின்றன. சந்திரபகவான் 79 சதவீதம் பலம் பெற்றிருக்கிறார். ஷட் வர்க்கத்தில் 4 பரல்களும், சப்தவர்க்கத்தில் 4 பரல்களும் தச வர்க்கத்தில் 4 பரல்களும் ஷோடச வர்க்கத்தில் 6 பரல்களும் வருகின்றது. ஷட் பலத்தில் 8.1 ரூப பரல்களும் (சாதாரணமாக கிடைக்கவேண்டியது 6 ரூப பரல்கள்) , அஷ்ட வர்க்கத்தில் 5 பரல்களும், ரிஷப ராசிக்கு 21 பிந்துக்களும் கிடைத்துள்ளன. இப்படி, பலவிதமான அடிப்படையில் பார்க்கும்போது உடல் காரகரான சந்திரபகவான் பலம் பெறறிருக்கிறார் என்று கூற வேண்டும். 

லக்னம் மற்றும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான், ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (பூரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். புதபகவான் சுபகிரகமாகி கேந்திராதிபத்ய தோஷத்திற்கு ஆட்பட்டிருந்தாலும் லக்னாதிபத்யம் உண்டாவதாலும் ஆறாம் வீட்டில் மறைவு பெற்றிருப்பதாலும் கேந்திராதிபத்ய தோஷம் முழுமையாக மறைந்து விடுகிறது. ஆறாம் வீடு சர்வீஸ் (வேலை) வீடாகவும் ஆவதால் சிறப்பான நல்ல வேலை கிடைக்கும். மேலும் ஆறாம் வீடு உபஜய ஸ்தானம் என்பதால் நாளுக்கு நாள் வளர்ச்சி உண்டாகிக்கொண்டே போகும். 

உத்தியோகம் பார்த்துக்கொண்டே சொந்தத் தொழிலும் செய்யலாம். பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் ருணம் ரோகம் சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சூரியபகவானின் சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். கன்னி லக்னத்திற்கு சனிபகவான் ஆறாம் வீட்டிற்கு ஆதிபத்யம் பெற்றிருந்தாலும் பூர்வபுண்ணியாதிபதி ஆவதால் லக்ன சுபராகவே கருதப்படுகிறார். சனிபகவான் உச்சம் பெற்ற சந்திரபகவான் மற்றும் குருபகவானுடன் இணைந்திருப்பது சிறப்பு. சனிபகவானின் மூன்றாம் பார்வை லாப ஸ்தானத்தின் மீதும், ஏழாம் பார்வை தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டின் மீதும், அங்கு அமர்ந்திருக்கும் செவ்வாய்பகவானின் மீதும், பத்தாம் பார்வை ஆறாம் வீட்டின் மீதும், அங்கு அமர்ந்திருக்கும் லக்னாதிபதி மற்றும் தொழில் ஸ்தானாதிபதி புதபகவானின் மீதும் படிகிறது. பூர்வபுண்ணியம் என்கின்ற ஐந்தாம் வீடு விதி என்று சொல்லப்படுகின்ற வீடாகும். இந்த ஐந்தாம் வீடு வலுத்திருந்தால் குருட்டு அதிர்ஷ்டம் உண்டாகும். சனிபகவான் பாக்கிய ஸ்தானத்திலிருந்து ஆறாம் வீட்டைப் பார்வை செய்வதால் அந்த வீட்டின் ஆதிபத்யங்கள் பெரிதாகப் பாதிக்கப்படாது என்று கூறவேண்டும்.

தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) உச்சம் பெற்று அமர்ந்து பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான மாளவிகா யோகத்தைப் பெற்று நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். சுக்கிரபகவான் அமர்ந்திருக்கும் மீன ராசிக்கு அதிபதியான குருபகவான் சுக்கிரபகவானின் ஆட்சி வீடான ரிஷப ராசியில் அமர்ந்திருப்பதால் பர்வர்த்தனை ராஜயோகம் உண்டாகிறது. இதனால் குரு, சுக்கிர பகவான்களின் ஆதிபத்யங்களான சுகம், களத்திரம் தனம், பாக்கியம் ஆகிய நான்கும் சிறப்பாக பரிமளிக்கும் என்று கூறவேண்டும். நான்காம் வீட்டிற்கதிபதியும் ஒன்பதாம் வீட்டிற்கதிபதியும் பெற்றுள்ள பரிவர்த்தனை இந்திரனுக்கொப்பான சுகமுண்டாகும் என்று கூறப்பட்டுள்ளது.  தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் புதபகவானின் சாரத்தில் (கேட்டை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். இதனால் விபரீத ராஜயோகம் உண்டாகிறது. சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சந்திரபகவானின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்)  அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். 

குருபகவானின் ஐந்தாம் பார்வை லக்னத்தின் மீதும், ஏழாம் பார்வை தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டின் மீதும், அங்கு அமர்ந்திருக்கும் செவ்வாய்பகவானின் மீதும் (குருமங்களயோகம்) படிகிறது. ஒன்பதாம் பார்வை பூர்வபுண்ணிய ஸ்தானத்தின்மீதும் படிகிறது.  ஓடினவனுக்கு ஒன்பதில் குரு என்பது ஜோதிட வழக்கு. குரு, சுக்கிர பகவான்களின் பரிவர்த்தனையினால் பொன், பொருள் சேர்க்கை, அரசாங்க ஆதரவு, பொதுமக்களிடம் செல்வாக்கு , வீடு, வாகன யோகம் ஆகியவை சிறப்பாக அமையும். அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டுக்கு அதிபதியான சூரியபகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் சனிபகவானின் சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். பொதுவாக, லக்னம் அல்லது ராசி எதுவாக இருந்தாலும் அதற்கு 3, 6, 10, 11 ஆகிய ஸ்தானங்களில் எதிலாவது சூரியபகவான் இருந்தால் அந்த ஜாதகர் சிரமமின்றி திறமையாக பணம் சம்பாதிக்கக் கூடியவராவார்.  சகல வசதிகளையும் ஏற்படுத்திக்கொண்டு நீண்ட காலம் சுக ஜீவியாக வாழக்கூடியவராவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அவருக்கு உச்சம் பெற்றுள்ள சந்திரபகவானுக்கு (ராசி) லாப ஸ்தானத்தில் சூரியபகவான் இருப்பதால் மேற்கூறிய பலன் உண்டாகும் என்று கூறவேண்டும். 

கேதுபகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். ராகுபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சுய சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். 
நாளமில்லா சுரப்பிகளுக்கு சுக்கிரபகவான் ஆதிக்கம் பெறுகிறார் என்பதை பலமுறை எழுதியிருக்கிறோம். இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து ராகு மகா தசை நடக்கத்தொடங்கியிருக்கிறது. ஒரு ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் சர்ப்ப கிரகங்கள், சனிபகவானின் தசை புக்திகளில் வெளிப்படும் என்றும் பலமுறை எழுதியிருக்கிறோம். 

காரணம் கண்டு பிடிக்க முடியாத வியாதிகளுக்கு சர்ப்ப கிரகங்கள் காரணமாகின்றன. குறிப்பாக , நஞ்சு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு ராகுபகவானே காரணமாகிறார். ராகு பகவானின் தசை நடக்கத் தொடங்கிய காலகட்டத்தில் அவருக்கு இத்தகைய உடலுபாதைகள் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குப்பிறகு உபாதைகள் அனைத்தும் வைத்தியத்திற்கு கட்டுப்பட்டு சீரடைந்து விடும். படிப்பை நல்லபடியாக முடித்து வேலைக்குச் சென்று விடுவார். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையம்மனை வழிபட்டு வரவும். தினமும் முடிந்தவரை "ஜய ஜய துர்க்கா' என்று ஜபித்து வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com