மனநோய் தீரும்!

என் மகள் சி.ஏ., ஐசிடபிள்யூ இரண்டையும் படித்து நல்ல வேலையில் இருந்தார். சென்ற ஓராண்டாக மனஅழுத்தத்திற்கு ஆளாகி எல்லாவற்றிற்கும் பயம், அதீத வருத்தம் ஆகியவைகளுக்கு உள்ளாகி வேலைக்கும் செல்வதில்லை.

என் மகள் சி.ஏ., ஐசிடபிள்யூ இரண்டையும் படித்து நல்ல வேலையில் இருந்தார். சென்ற ஓராண்டாக மனஅழுத்தத்திற்கு ஆளாகி எல்லாவற்றிற்கும் பயம், அதீத வருத்தம் ஆகியவைகளுக்கு உள்ளாகி வேலைக்கும் செல்வதில்லை. அவள் கணவரும் சி.ஏ., படித்து நல்ல வேலையில் உள்ளார். பலரும் என் மகள் பெரிய ஆளாக வருவாள் என்று கூறினார்கள். இப்போது இந்த வயதான காலத்தில் பெற்றோர்களான நாங்களும் அவளுக்காக மிகவும் கஷ்டப்படுகிறோம். எப்போதும் அவளுக்கருகிலேயே இருக்க வேண்டும். இந்நிலை எப்போது சரியாகும்? ஆடிட்டராக தனித்து செயல்படலாமா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? 

வாசகி, சென்னை

உங்கள் மகளுக்கு மேஷ லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கதிபதியான சந்திரபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சுய சாரத்தில் (திருவோண நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். சந்திரபகவான் சுக ஸ்தானத்தை, தன் ஆட்சி வீட்டில் பலம் பெற்று பார்வை செய்வதினால் வாழ்க்கையில் வண்டி, வாகனம், குடும்பத்தில் நிம்மதி போன்ற சுகானுபவங்கள் கூடும்.  நான்காம் வீடு அன்னைக்குக் காரகம் வகிப்பதால் தாயின் நலமும் சீராகும். அதோடு கல்வி ஸ்தானமுமாவதால் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புக்கும் உத்திரவாதமுண்டு.  நல்ல கல்வி உண்டாகி அதன் மூலம் வருவாய் ஈட்டும் யோகமும் உண்டாகும்.  சமுதாயத்திற்குத் தொண்டாற்றும் யோகமும் உண்டாகும். லக்னமாகிய உயிர் ஸ்தானத்திற்கும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் லக்னத்தில் கேதுபகவானின் சாரத்தில் (அசுவினி நட்சத்திரம்) மூலதிரிகோணம் பெற்றமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். 

லக்னத்தில் செவ்வாய்பகவான் ஆட்சி பெற்றமர்ந்திருப்பது பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான ருசக யோகத்தைக் கொடுக்கிறது. அரசியல், பூமி, உத்தியோகம், கர்மம், சகோதரம், மூளை ஆகியவற்றுக்குச் செவ்வாய்பகவான் காரகம் வகிக்கிரார். ஒரு ஜாதகத்தில் செவ்வாய்பகவான் பலம் பெற்றிருந்தால் அந்த ஜாதகர் சிறப்பான வாழ்க்கை வாழ்வார் என்று கூற வேண்டும். அதோடு பலம் பெற்ற செவ்வாய்பகவான் வழக்குகளில் வெற்றியைத் தருவார். உடல்உரமும் சிறப்பாக அமைந்து அதன் மூலமும் சாதனைகளைச் செய்வார். முதல் தர அரசு கிரகமாக ஆவதால் அரசாங்கத்திலும் சட்டமன்றம், பாராளுமன்றம் ஆகியவற்றில் அங்கம் வகிக்கும் பதவிகள் கிடைக்கும். அதோடு தைரியத்திற்கு அதிபதி ஆவதால் காவல் துறையிலும் பொறுப்பு கிடைக்கும். நெருப்புக்கும் ஆதிபத்தியம் உண்டாவதால் எலக்ட்ரிகல் சம்பந்தப்பட்ட துறையிலும் பலம் பெற்ற செவ்வாய்பகவான் இட்டுச் செல்வார். செவ்வாய்பகவானின் நான்காம் பார்வை சுக ஸ்தானமான நான்காம் வீட்டின் மீதும் அங்கமர்ந்திருக்கும் உச்சம் பெற்றுள்ள குருபகவானின்  மீதும் படிகிறது. இதனால் சிறப்பான குருமங்கள யோகம் உண்டாகிறது.

செவ்வாய்பகவானின் ஏழாம் பார்வை களத்திர ஸ்தானத்தின் மீதும், எட்டாம் பார்வை அஷ்டம, ஆயுள் ஸ்தானமான எட்டாம் வீட்டின் மீதும் படிகிறது. அஷ்டமாதிபதி அஷ்டம ஸ்தானத்தைப் பார்வை செய்வதால் ஆயுள் தீர்க்கம் என்று கூற வேண்டும். பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கதிபதியான சூரியபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் சுய சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்)  அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார். பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (பூசம் நட்சத்திரம்) உச்சம் பெற்றமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். குருபகவானின் ஐந்தாம் பார்வை அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டின் மீதும், ஏழாம் பார்வை தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டின் மீதும், அங்கமர்ந்திருக்கும் சந்திரபகவானின் மீதும் (கஜகேசரி யோகம்), ஒன்பதாம் பார்வை அயன ஸ்தானமான தன் ஆட்சி வீடான பன்னிரண்டாம் வீட்டின் மீதும் படிகிறது. 

குருபகவான் சுக ஸ்தானத்தில் கல்வி ஸ்தானத்தில் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் எதையும் ஆராய்ந்து பார்க்கும் நுண்ணிய அறிவு உண்டாகும். சந்திரபகவானைப் பார்வை செய்வதால் மனதில் உண்டாகும் சிந்தனைகளைச் சிறப்பாகச் செயல்படுத்தும் ஆற்றலும் உண்டாகும். பொதுவாக குருபகவான் வலுத்திருப்பதால் மற்றையோருக்கு அறிவுரை கூறும் பதவிகள் கிடைக்கும். மற்றையோருக்கு பயன்படுகிற வகையில் வாழ்கின்றவர்களுக்கு குருபகவான் வலுத்திருப்பார் என்று புரிந்து கொள்ள வேண்டும். குருபகவான் தன (பொருளாதாரம்) காரகர், புத்திரகாரகராவார். தர்மகாரியங்கள், டிரஸ்ட் ஆகியவைகளை நிர்வகிக்கும் யோகங்களும் உண்டாகும். லக்னாதிபதியும் பாக்கியாதிபதியும் வலுத்திருப்பதால் ஆன்மிகத்திலும் நிரந்தர ஈடுபாடு உண்டாகும். முகத்தில் பொலிவும் நடையில் கம்பீரமும் இயற்கையாகவே அமையும்.

தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் லக்னத்தில் கேதுபகவானின் சாரத்தில் (அசுவினி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான ரிஷப ராசியை அடைகிறார். ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரபகவான் நல்ல விதத்தில் அமைந்திருப்பதால் அவர் எப்போதும் மகிழ்ச்சிகரமாகக் காணப்படுவார். ஆடம்பர வாழ்க்கை வாழ்வார். இல்லறமும் இனிமையாகவே தொடரும். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் லக்னத்தில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி, உச்சம், மூலதிரிகோண வீடான கன்னி ராசியை அடைகிறார். கல்விக்காரகர் லக்னத்தில் அமர்ந்து பலம் பெற்றிருப்பது சிறப்பு. இதனால் அவர் பட்டயக் கணக்காளர், காஸ்ட் அக்கௌண்டன்ட் போன்ற கடினமான தேர்வுகளில் வெற்றி பெற்றிருப்பது ஆச்சரியம் அல்ல. கல்வி ஸ்தானமும் கல்வி ஸ்தானாதிபதியும் சிறப்பான சுப பலம் பெற்றிருப்பது சிறப்பு.

பொதுவாக, லக்னாதிபதியும் ஏழாமதிபதியும் இணைந்திருந்தோ, பரஸ்பரம் பார்வை செய்தாலோ அவர்களுக்கு சம அந்தஸ்தில் வரன் அல்லது வது அமையும் என்பது அனுபவ உண்மை. அதனால் அவரின் கணவரும் பட்டயக் கணக்காளர் படிப்பை படித்து நல்ல வேலையில் உள்ளார். இது மேற்கூறிய ஜோதிட விதிக்கு ஒத்துவருவதையும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கதாக அமைகிறது. தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூரம் நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார். ஒரு கேந்திராதிபதி மற்றொரு திரிகோண வீட்டில் அதிபலம் பெற்றமர்ந்திருப்பதும் சிறப்பு. ராகுபகவான் பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூரம் நட்சத்திரம்)  அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். கேதுபகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (பூரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார்.

பொதுவாக, மன அழுத்தம், மன பீதி, சஞ்சலம், கவனம் சிதறல் ஆகியவைகளுக்கு சூரிய, சந்திர, புத, குரு, ராகு, கேது பகவான்கள் காரணமாகிறார்கள். சூரியபகவான் தலையையும் குருபகவான் மூளையையும் புதபகவான் மூளை இடும் கட்டளைகளை எடுத்துச் செல்லும் நரம்பு மண்டலத்தையும், ராகு- கேது பகவான்கள் நம் கர்மவினையின் பலன்களை நமக்கு அளிக்கக்கூடியவர்களாகவும் ஆவார்கள். அவருக்கு சூரியபகவான் லக்ன சுபராகி தன் சுயசாரத்தில் இருப்பது சிறப்பென்றாலும் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் சூரியபகவானுக்கு விரோதம் பெற்ற கிரகங்களான சனி, ராகு பகவான்கள் அமர்ந்திருக்கிறார்கள். பொதுவாக, சனி, ராகு பகவான்களின் சேர்க்கையில் பல நேரங்ககளில் ராகுபகவான் வெற்றி பெறுகிறார். அதாவது, ராகுபகவானின் தசை மிகவும் மேன்மையாகச் செல்கிறது. சனிபகவானின் தசையின் இறுதிப்பகுதியில் சில அசம்பாவிதங்கள் நடந்துவிடுகின்றது. இது அஷ்டமகா நாக யோகத்தின் விளைவு என்று புரிந்து கொள்ள வேண்டும். மற்றபடி, மூன்று திரிகோணாதிபதிகளின் சுபத்துவம் இத்தகைய கஷ்டங்களிலிருந்து நம்மை மீட்டுவிடும். 

தற்சமயம், குருமகா தசையில் லக்னாதிபதியான செவ்வாய்பகவானின் புக்தி நடக்கத்தொடங்கியுள்ளது. சந்திரபகவான் மனோகாரகர் என்று அனைவரும் அறிந்ததே. அதோடு அவருக்கு தற்சமயம் ஏழரை நாட்டுச் சனியில் இரண்டாம் சுற்றில் ஜன்ம சனியின் காலம் நடக்கிறது. சந்திரன், செவ்வாய், குரு ஆகிய மூவரும் ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அதனால் அவரின் மன பீதி, குழப்பம் ஆகியவை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து தீர்ந்துவிடும். குரு மகா தசை ராகுபகவானின் புக்தியில் மறுபடியும் நல்ல வேலைக்குச் செல்வார். சுயமாக ஆடிட்டர் தொழிலையும் செய்யலாம். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com