"திருமணத்திற்கு முக்கிய பாவங்கள்'

என் மகளுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்? எல்லோரும் வலுவான ஜாதகம் என்கிறார்கள்.

என் மகளுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்? எல்லோரும் வலுவான ஜாதகம் என்கிறார்கள். நல்ல படிப்பு படித்து நல்ல வேலையிலும் உள்ளார். திருமணத்திற்கு எந்தெந்த பாவங்கள் முக்கியமாகப் பார்க்க வேண்டும் என்று கூறவும். என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? 

வாசகர்.....

உங்கள் மகளுக்கு சிம்ம லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம் முதல் பாதம். லக்னாதிபதி சூரிய பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் உச்சம் பெற்றமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியில் நீச்சமடைகிறார். 
ஆத்ம காரகரான சூரிய பகவான் உச்சம் பெற்றிருப்பது சிறப்பு. பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் லக்னத்தில் திக் பலம் பெற்று நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார். குரு பகவானின் ஐந்தாம் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் மீதும் அங்கமர்ந்திருக்கும் ராகு பகவானின் மீதும் படிகிறது. போக, பயண காரகரான ராகு பகவானை குரு பகவான் பார்வை செய்வதால் வாழ்க்கையில் யோக பாக்கியங்களை அனுபவிக்கும் அதிர்ஷ்டங்கள் உண்டாகும்.
குரு பகவானின் ஏழாம் பார்வை களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டின் மீது படிகிறது. இதனால் மண வாழ்க்கை சிறப்பாக அமையும். குரு பகவானின் ஒன்பதாம் பார்வை பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டின் மீதும் அங்கமர்ந்திருக்கும் சூரிய பகவானின் மீதும் (சிவராஜ யோகம்), சுக்கிர பகவானின் மீதும் படிகிறது. 
பொதுவாக குருபகவான் வலுத்து லக்னம், லக்னாதிபதியுடன் சம்பந்தம் பெற்றால் ஆன்மிகத்தில் ஈடுபாடு நிலைத்திருக்கும். "குரு பார்க்க கோடி புண்ணியம்; கோடி பாப நிவர்த்தி' என்பது விதி. 
அதனால் குருபகவானின் பார்வை படும் இடங்கள் சுபத்துவம் பெறும் என்றும், மேலும் குரு பகவான் லக்னத்திற்கு யோக காரகராவதும் கூடுதல் நன்மை என்றும் புரிந்து கொள்ள வேண்டும். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். 
தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சுய சாரத்தில் நீச்ச பங்க ராஜயோகம் பெற்று நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். 
ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்றமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். சனி பகவான் செவ்வாய் பகவானின் சாரத்திலும், செவ்வாய் பகவான் சனி பகவானின் சாரத்திலும் அமர்ந்திருப்பது சார பரிவர்த்தனையாகும். அதாவது கேந்திர திரிகோணாதிபதிகளின் பரிவர்த்தனை என்று புரிந்துகொள்ள வேண்டும். 
அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டுக்கதிபதி தொழில் ஸ்தானத்தில் சுய சாரத்தில் உச்சம் பெற்றிருப்பதும் சிறப்பாகும். இதனால் முழுமையான "கஜகேசரி யோகம்' உண்டாகிறது. பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் ராகு பகவான் அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். லாப ஸ்தானத்தில் கேது பகவான் அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். 
திருமணத்திற்கு லக்னம், இரண்டாம் வீடு, ஏழாம் வீடுகளின் பலத்தை முதலில் பார்க்க வேண்டும். இரண்டாவதாக நான்கு, எட்டு, பன்னிரண்டாம் வீடுகளைப் பார்க்க வேண்டும். இத்துடன் லக்ன சுபர்களின் தசையும் நடந்தால் விரைவில் திருமணம் நடந்தேறும் என்று கூற வேண்டும்.  
ஏழாம் வீட்டுக்கதிபதியான சனிபகவான் தன் வீட்டிற்கு பன்னிரண்டாம் வீட்டில் (பாவாத் பாவம்) அமர்ந்திருப்பது சிறு குறையே என்றாலும் ஏழாம் வீட்டிற்கு குரு பகவானின் அருட்பார்வை கிடைப்பது குறையை நீக்கும் அம்சமாகும். அதேபோல் லக்னாதிபதியும் ராசி கட்டத்தில் உச்சம் பெற்றிருந்தாலும் நவாம்சத்தில் நீச்சம் பெறுவதை பெரிய குறையென்று கூற முடியாது.
சயன சுகத்தைக் குறிக்கும் பன்னிரண்டாமதிபதி சந்திரபகவான் தொழில் ஸ்தானத்தில் சுய சாரத்தில் உச்சம் பெறுகிறார். சுகாதிபதியும், குடும்பாதிபதியும், அஷ்டமாதிபதியும் சுப பலம் பெற்றிருக்கிறார்கள். 
தற்சமயம் ராகு பகவானின் தசையில் சுக்கிர பகவானின் புக்தி நடக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த சிறப்பான வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும், முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com