அகத்தில் உதித்த ஆலயம்!

அறுபத்து மூன்று நாயன்மார்கள் வரிசையில் இடம் பெற்றவர் பூசலார் நாயனார். சேக்கிழார் பெருமானின் பெரியபுராணம் இவரின் வரலாற்றை அழகாக விவரிக்கும்.
அகத்தில் உதித்த ஆலயம்!

அறுபத்து மூன்று நாயன்மார்கள் வரிசையில் இடம் பெற்றவர் பூசலார் நாயனார். சேக்கிழார் பெருமானின் பெரியபுராணம் இவரின் வரலாற்றை அழகாக விவரிக்கும்.
சென்னை அருகில் உள்ள திருநின்றவூர் (தின்னனூர்) என்ற திருத்தலத்தில் ஓர் அந்தணர் குலத்தில் பூசலார் அவதரித்தார். நான்கு வேதங்களையும் நன்கு கற்றுணர்ந்து, நாளும் பொழுதும் சிவ சிந்தனையாக இருந்தார். சிவனடியார்களிடம் மிக்க அன்பு பூண்டவராய்த் திகழ்ந்தார். 
அவர் சிவ பெருமான் எழுந்தருளுவதற்காக ஒரு திருக்கோயிலை புதிதாக நிர்மாணிக்க விரும்பினார். ஆனால் அதற்கான நிதி வசதி, இட வசதி அவரிடம் இல்லை. மனம் தளராமல் ஒரு தீர்க்கமான முடிவிற்கு வந்தார். "புறத்தே ஆலயம் அமைக்க முடியாமல் போனால் என்ன அகத்தே அமைக்கலாம் அல்லவா?' என்றெண்ணி செயல்படுத்த ஆரம்பித்தார். திடமான பக்தியுடன் ஓர் இலுப்பை மரத்தடியில் அமர்ந்து சிவபெருமானை வேண்டியபடியே மனதில் ஆலயம் எழுப்பலானார். 
முதலில் ஆலயம் கட்டுவதற்குத் தேவைப்படும் திரவியங்கள், உபகரணங்கள், தச்சர்கள், ஸ்தபதிகள், வேலையாட்கள் என அனைத்தையும் கற்பனையாக சேகரித்துக் கொண்டார். ஒரு நல்ல முகூர்த்த நாளை தேர்ந்தெடுத்து பந்தக்கால் நட்டு திருப்பணி வேலைகளை முறைப்படி ஒவ்வொரு கட்டமாக மேற்கொண்டார். 
நாளடைவில் ஆகமவிதிப்படி ஒரு சிவாலயம் மனதிலேயே உருவானது. வேலைகள் பூர்த்தியாகி கும்பாபிஷேக நாளையும் குறித்துவிட்டார். இது இவ்வாறு இருக்க, பல்லவ அரசன் காஞ்சிபுரத்தில் ஒரு கற்கோயிலை (கைலாசநாதர் கோயில்) நிர்மாணித்து குடமுழுக்கு விழாவிற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டான். அவன் கும்பாபிஷேகம் நடத்தவிருந்த நாளும், பூசலார் குறித்திருந்த நாளும் ஒன்றாக அமைந்திருந்தது. 
இந்நிலையில், கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முதல் நாள் இரவில் சிவபெருமான் பல்லவ மன்னனின் கனவில் தோன்றி, "தான் திருநின்றவூரில் பூசலார் என்ற அன்பன் நீண்ட நாள்களாக நினைத்து உருவாக்கிய ஆலய குடமுழுக்கிற்கு செல்ல இருப்பதாகவும், காஞ்சி கோயில் பிரதிஷ்டை விழாவை பிரிதொரு நாளில் வைக்குமாறு'ம் அருளினார்.
இறைவன் ஆணையை சிரமேற்கொண்ட பல்லவ மன்னன் மறுநாள் திருநின்றவூர் சென்று பூசலாரை சந்தித்தான். "இறைவன் கூறியது பூசலார் மனதில் கட்டிய கோயில்' என்று அறிந்தான். அவரை கௌரவப்படுத்தும் விதமாக பூசலார் மனதில் உதித்த மாதிரி ஒரு நிஜ ஆலயத்தையே கட்டி குடமுழுக்கு விழாவை சிறப்பாக நடத்தினான். பின்னர் காஞ்சி திரும்பி கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்தியதாக வரலாறு.
பூசலாரின் பெருமையை பறைசாற்றும் "இருதயாலீஸ்வரர் சிவன் கோயில்' திருநின்றவூரில் பக்தவத்சலப் பெருமாள் கோயில் அருகில் உள்ளது. இங்கு நாயனாரின் கற்திருமேனி கருவறையில் மூலவருடன் சேர்ந்து வழிபடப்படுகிறது. ஆண்டுதோறும் இங்கு ஐப்பசி மாதம் அனுஷம் நன்னாளில் பூசலார் நாயனாரின் குருபூஜை இறைவனிடம் அவர் ஐக்கியமாகும் விழாவாக நடத்தப்படுவது வழக்கம். 
இவ்வாண்டு அக்டோபர் 19-ஆம் தேதி (திங்கள்கிழமை) ஐப்பசி - அனுஷம் நட்சத்திரம் கூடிய நாளாகும். தற்போதைய சூழலில் இல்லத்தில் இருந்தபடியே திருவருளையும், குருவருளையும் வேண்டுவோமாக..!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com