என் மகனின் ஜாதகப்படி குடும்பத்தில் பொருளாதார வளம் மேம்படுமா... அரசு வேலை கிடைக்குமா அல்லது தனியார் துறையில் வேலை அமையுமா...

என் மகனின் ஜாதகப்படி குடும்பத்தில் பொருளாதார வளம் மேம்படுமா... அவருக்கு எந்தத் துறையில் வேலை கிடைக்கும்... அரசு வேலை கிடைக்குமா அல்லது தனியார் துறையில் வேலை அமையுமா... 

என் மகனின் ஜாதகப்படி குடும்பத்தில் பொருளாதார வளம் மேம்படுமா... அவருக்கு எந்தத் துறையில் வேலை கிடைக்கும்... அரசு வேலை கிடைக்குமா அல்லது தனியார் துறையில் வேலை அமையுமா... ஆயுள் ஆரோக்கியம் பற்றியும் கூறவும்.

-உத்தமன், பள்ளமருதப்பட்டி. 

உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம் மூன்றாம் பாதம். லக்னம், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சுக்கிர பகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். 
புத பகவான் சுப கிரகமாகி, கேந்திர ராசிக்கதிபதி ஆவதால் கேந்திராதிபத்ய தோஷம் உண்டானாலும், லக்னாதிபத்யம் உண்டாவதாலும், மறைவு பெற்றிருப்பதாலும் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கி விடுகிறது. 
இருப்பினும் லக்னாதிபதி லக்னத்திற்கு எட்டாம் வீட்டில் (பாவாத் பாவ அடிப்படையில்) அமர்ந்திருப்பது சிறு குறை. தொழில் ஸ்தானத்திற்கு லாப ஸ்தானத்தில் இருப்பது நிறை என்று எடுத்துக்கொள்ள வேண்டும். பத்தாம் வீட்டோன் பலம் பெற்றிருப்பதால் சுய தொழிலிலும் ஈடுபட்டு வெற்றி பெறலாம். 
புத பகவானின் ஆதிக்கம் பெற்ற அச்சு, புத்தகம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளில் துரித வெற்றி உண்டாகும். பூர்வ புண்ணிய 
புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் செவ்வாய் பகவானின் சாரத்தில் (மிருகசீரிஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார். 
அதனால் சனி பகவானின் காரகத்துவம் பெற்ற இரும்பு, எஃகு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட இனங்களிலும் ஈடுபடலாம். பத்தாம் வீடும், பத்தாம் வீட்டோனும் பலம் பெற்றிருப்பதால் மனதிற்குப் பிடித்தமான வேலையும், அதில் நிறைவும் உண்டாகும் என்றும் புரிந்து கொள்ள வேண்டும். 
தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் (இரண்டு தன ஸ்தானங்கள்) அதிபதியான சுக்கிர பகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் சனி பகவானின் சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) உச்சம் பெற்றமர்ந்து நவாம்சத்தில் தன் மூலத்திரிகோண வீடான துலாம் ராசியை அடைகிறார். 
தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரிய பகவானின் சாரத்தில் (உத்திராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். 
சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் சனி பகவானின் சாரத்தில் (பூசம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். குரு பகவானின் ஐந்தாம் பார்வை தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டின் மீதும், அங்கமர்ந்திருக்கும் கேது பகவானின் மீதும், ஏழாம் பார்வை பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தின் மீதும், அங்கு உச்சம் பெற்றிருக்கும் செவ்வாய் (குரு மங்கள யோகம்) பகவானின் மீதும், ஒன்பதாம் பார்வை களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டின் மீதும் (தன் ஆட்சி வீடு) அங்கு உச்சம் பெற்றிருக்கும் சுக்கிர பகவானின் மீதும் படிகிறது. அயன ஸ்தானமான விரய ஸ்தானத்திற்கு அதிபதியான சூரிய பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் கேது பகவானின் சாரத்தில் (அசுவினி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். 
கேது பகவான் மூன்றாம் வீட்டில் சனி பகவானின் சாரத்தில் (அனுஷம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். ராகு பகவான் ஒன்பதாம் வீட்டில் சூரிய பகவானின் சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். 
அவருக்கு நான்கு கிரகங்கள் உச்சம் பெற்றிருப்பதும், பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான மாளவிகா யோகமும், சிறப்பான புத ஆதித்ய யோகமும் உள்ளன. அதிலும் யோக காரகரான சுக்கிர பகவான் உச்சம்பெற்று, உச்சம் பெற்றுள்ள குரு பகவானால் பார்க்கப்படுவதால் அவர் "வாழப் பிறந்தவர்' என்று கூறலாம். 
உச்சம் பெற்றுள்ள ஆயுள் ஸ்தானாதிபதியான செவ்வாய் பகவான் மீதும் குரு பகவானின் பார்வை படுவதால் அசையா சொத்துக்களின் சேர்க்கையும், உயர் பதவியும் தேடிவரும். தீர்க்காயுள் உண்டு. 
அதோடு சுகவாசியாக இறுதிவரை வாழ்வார். தனியார் துறையிலேயே வேலை அமையும். தற்சமயம் சனி மஹா தசையில் பிற்பகுதி நடப்பதால் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து குடும்பத்தில் பொருளாதார வளம் மேம்படும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com