முகப்பு ஜோதிடம் ஜோதிட கேள்வி பதில்கள்
என் மகன் பொறியியல் படிப்பு படித்து விட்டு பெங்களூருவில் நல்ல வேலையில் உள்ளார். பல மாதங்களாக திருமண முயற்சிகள் செய்தும் தடைபடுகிறது. எப்பொழுது திருமணம் கைகூடும்?
By DIN | Published On : 10th December 2021 07:13 PM | Last Updated : 10th December 2021 07:13 PM | அ+அ அ- |

என் மகன் பொறியியல் படிப்பு படித்து விட்டு பெங்களூருவில் நல்ல வேலையில் உள்ளார். பல மாதங்களாக திருமண முயற்சிகள் செய்தும் தடைபடுகிறது. எப்பொழுது திருமணம் கைகூடும்?
-ஸ்ரீதர், நெய்வேலி.
உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், தனுசு ராசி, பூராடம் நட்சத்திரம். லக்னம், சுக ஸ்தானம் ஆகிய இரண்டு வீடுகளுக்கதிபதியாகிய புத பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப் பெற்று, ஆட்சி பெற்றுள்ள அஷ்டம பாக்கியாதிபதியான சனி பகவானுடனும், தைரிய ஸ்தானாதிபதியான சூரிய பகவானுடனும் இணைந்திருப்பது சிறப்பு.
பூர்வ புண்ணிய புத்திர புத்தி மற்றும் அயன ஸ்தானங்களுக்கு அதிபதியான சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் ஆட்சி பெறுகிறார்.
களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் நான்காம் வீட்டிலமர்ந்து நவாம்சத்தில் உச்சமடைகிறார்.
குரு பகவானின் ஐந்தாம் பார்வை அஷ்டம ஸ்தானத்தின் மீதும், அங்கமர்ந்திருக்கும் புதன், சனி, சூரிய (சிவராஜயோகம்) பகவான்களின் மீதும் படிகிறது. குரு பகவானின் ஏழாம் பார்வை தன் ஆட்சி வீடான தொழில் ஸ்தானத்தின் மீதும், ஒன்பதாம் பார்வை அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டின் மீதும் அங்கமர்ந்திருக்கும் கேது பகவானின் மீதும் படிகிறது. ராகு பகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பது அஷ்டலட்சுமி யோகத்தைக் கொடுக்கிறது.
ஆறு, பதினொன்றாமதிபதி செவ்வாய் பகவான் லக்னத்திலமர்ந்து களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டையும், அங்கமர்ந்திருக்கும் சந்திர (சந்திர மங்கள யோகம்) பகவானையும் பார்வை செய்கிறார். இந்த ஆண்டு மே மாதத்திலிருந்து பலம் பெற்றுள்ள ராகு பகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது சிறப்பு.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையில், சம அந்தஸ்திலுள்ள பெண் அமைந்து திருமணம் நடக்கும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.