நான் 25 வருடங்களாக தொழில் செய்து, சொந்த நிறுவனத்தை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ளேன். இதைத்தொடர்ந்து நடத்தலாமா இல்லை விற்று விடலாமா? ஜாதகம் எவ்வாறு உள்ளது? எதிர்காலம் பற்றியும் கூறவும்! 

நான் 25 வருடங்களாக தொழில் செய்து, சொந்த நிறுவனத்தை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ளேன். இதைத்தொடர்ந்து நடத்தலாமா இல்லை விற்று விடலாமா? ஜாதகம் எவ்வாறு உள்ளது? எதிர்காலம் பற்றியும் கூறவும்! 

நான் 25 வருடங்களாக தொழில் செய்து, சொந்த நிறுவனத்தை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ளேன். இதைத்தொடர்ந்து நடத்தலாமா இல்லை விற்று விடலாமா? ஜாதகம் எவ்வாறு உள்ளது? எதிர்காலம் பற்றியும் கூறவும்! 

-வாசகர், ஆற்காடு.

உங்களுக்கு சிம்ம லக்னம், சிம்ம ராசி, மகம் நட்சத்திரம். பொதுவாக லக்னம், ராசி இரண்டும் ஒன்றாக அமைவது சிறப்பாகும். லக்னத்திற்கு சுபத்துவம் பெற்ற கிரகங்கள் ராசிக்கு அசுபமாக இருக்கலாம். அதேபோல் ராசிக்கு சுபத்துவம் பெற்ற கிரகங்கள் லக்னத்திற்கு அசுபமாக அமையலாம். லக்னத்திலிருந்து கிரகங்கள் பலமற்று இருந்தால், ராசியை வைத்து பலன் கூறவேண்டும் என்பது சத்யாச்சாரியாரின் வாக்கு. அதனால் லக்னமும் ராசியும் ஒன்றாக அமைந்தவர்களுக்கு சராசரிக்கும் சற்று கூடுதலான அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும் என்று கூற வேண்டும். லக்னாதிபதி சூரிய பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சந்திர பகவானின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே இடத்தில் அமரும் நிலை) திக்பலம் பெற்று அமர்ந்திருப்பது சிறப்பு. 

லக்னாதிபதி, ராசியாதிபதி இருவரும் சூரிய பகவானாவதால் அவரின் சுபபலம் இரட்டிப்பாகிறது. சூரிய பகவான் வலுவாக இருப்பதால் ஆத்ம பலமும், உடலில் எலும்புகள் வலுவாகவும் அமையும். நீண்ட தூர பயணத்தால் லாபம் உண்டு. அரசுத் துறையில் மதிப்பு, சுயமுயற்சியால் செல்வச் சேர்க்கை ஆகியவை உண்டாகும். பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சனி பகவானின் சாரத்தில் (அனுஷம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். 

குரு பகவானின் ஐந்தாம் பார்வை அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டின் மீதும், ஏழாம் பார்வை தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டின் மீதும் அங்கமர்ந்திருக்கும் சூரிய (சிவராஜயோகம்) பகவானின் மீதும், சனி பகவானின் மீதும் படிகிறது. 

ஒன்பதாம் பார்வை அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டின் மீதும், அங்கமர்ந்திருக்கும் கேது பகவானின் மீதும் படிகிறது. 

எந்த கிரகமும் தன் வீட்டைப் பார்வை செய்வது சிறப்பு. தன் ஆட்சி வீடான அஷ்டம, ஆயுள், புதையல் ஸ்தானமான எட்டாம் வீட்டை குரு பகவான் பார்வை செய்வதால் தீர்காயுள் மட்டுமின்றி, அதிர்ஷ்டவசமாக பிறர் பொருள் கை வந்து சேரும் அம்சமும் உண்டாகும்.

அதோடு சுக ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் குரு பகவான் தேகபலம், விவேகம், சிறப்பான முன்யோசனை  ஆகியவற்றை உண்டாக்குவார். 

சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டில் சந்திர பகவானின் சாரத்தில் (திருவோணம் நட்சத்திரம்) உச்சம் பெற்று நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். 

ஸ்திர லக்னங்களுக்கு ஒன்பதாம் வீடு பாதக ஸ்தானமாக அமைந்து அந்த கிரகம் மறைவு பெற்று உச்சம் பெறுவதால் செவ்வாய் பகவானின் ஆதிபத்யங்களான சுகம், பாக்கியம் ஆகியவை மேன்மையுறும் என்றும், அவரின் காரகத்துவங்களான உடன் பிறந்தோர் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றம் அடைதல், தேக ஆரோக்கியத்தில் சிறப்பு, நேர்முக, மறைமுக எதிரிகள் இல்லாத வாழ்வு, எதிர்பாராத தனலாபம் ஆகியவை உண்டாகும்.

ஆறாம் வீட்டில் செவ்வாய் பகவானுடன் ராகு (அஷ்ட மஹா நாக யோகம்) பகவான் இணைந்திருப்பது சிறப்பான அஷ்டலட்சுமி யோகத்தைக் கொடுக்கிறது. 

அதோடு ராகு பகவான் செவ்வாய் பகவானின் சாரத்தில் (அவிட்டம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைவதால், அஷ்ட மஹா நாக யோகத்தால் செவ்வாய் பகவானின் ஆதிபத்யம், காரகத்துவம் ஆகிய இரண்டும் சிறப்பாக வேலை செய்யும் என்றும் புரிந்து கொள்ள வேண்டும். 

ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில், சூரிய பகவானின் சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். 

தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும்  லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சுக்கிர பகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். 

தைரிய, தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சுய சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் மூலத்திரிகோண வீடான துலாம் ராசியை அடைகிறார். 

புத பகவான் வலுத்திருப்பதால் அறிவு, ஞானம், பாண்டித்தியம் ஆகியவை இயற்கையிலேயே அமையும். 

சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் தெளிவான மனநிலையும், பொருள் சேர்ப்பதில் திறமையும், சுய முயற்சியில் செல்வம் சேர்த்தல் ஆகியவையும் உண்டாகும். 

உங்களுக்கு தற்சமயம் ராகு மஹா தசையில் குரு பகவானின் புக்தி நடப்பதால் உங்கள் தொழிற்கூடத்தை நல்ல லாபத்தில் விற்க முடியும். அந்த வருமானத்தில் முக்கால் பகுதியை விவசாய நிலம், பூமி போன்ற அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்யலாம். கால் பகுதியில் சிறிய அளவுக்கு வேறு தொழில் தொடங்கலாம். அந்தத் தொழிலும் சிறப்பாக வளர்ச்சி அடையும். 

ராகு மஹாதசை யோக தசையாகவே செல்லும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com