'பாரதி கைதி எண்:253': பாரதியின் உயிர்ச் சித்திரம்! -டாக்டர் பெ.சுபாசு சந்திரபோசு

வ.ரா.வின் 'மகாகவி பாரதியார்' நூலுக்குப் பிறகு பாரதி இலக்கியத்துக்கு உயிர்ப்பும் வனப்பும் தந்திருக்கும் ஓர் உன்னதப் படைப்பு கவிஞர் சிற்பியின் 'பாரதி கைதி எண்:253'.
'பாரதி கைதி எண்:253' /  மகாகவி பாரதியார்
'பாரதி கைதி எண்:253' / மகாகவி பாரதியார்

வ.ரா.வின் 'மகாகவி பாரதியார்' நூலுக்குப் பிறகு பாரதி இலக்கியத்துக்கு உயிர்ப்பும் வனப்பும் தந்திருக்கும் ஓர் உன்னதப் படைப்பு கவிஞர் சிற்பியின் 'பாரதி கைதி எண்:253'.

பாரதியின் வாழ்க்கைப் பக்கங்களில் பலருக்கும் தெரியாத ஒரு பகுதி கடலூர் சிறையில் அவர் இருந்த 25 நாள்கள். 1918 நவம்பர் 25 முதல் டிசம்பர் 14 வரை அந்த விடுதலைக் குயில் சிறைப்பட்டுக் கிடந்தது. அந்த நாள்களை மையமாகக் கொண்டு மறக்க முடியாத அந்த மகாகவியின் வாழ்க்கையை மறுவாசிப்புச் செய்கிறது இந்த வரலாற்றுக் கதைக் காவியம்.

ஒவ்வொரு நாளும் சிறையில் நிகழ்கிற சின்னச் சின்ன சலனங்களிலிருந்து அதிரடித் திருப்பங்கள் நிரம்பிய தன் வாழ்க்கையைப் பாரதி திரும்பிப் பார்க்கிறார். வருங்காலத்தையும் அவர் மனம் கணக்குப் போட்டுப் பார்க்கிறது.  முன்னும் பின்னுமாக இயங்கும் கவிஞரின் மன ஓட்டங்களை நனவோடை உத்தியில் சிறைக் குறிப்பு போல் அமைத்துள்ள ஒரு வித்தியாசமான படைப்பு இது. தமிழ்க் கவிதையில் இதுவரை வெளிவராத ஒரு புதிய உத்தியைக் கையாளுகிறது கவிஞர் சிற்பியின் பேனா. நாள்குறிப்புப் போலவும், நனவோடைப் பெருக்குப் போலவும் அடுக்கடுக்கான நிகழ்வுகளைக் காட்சிப்படுத்துகிறது இந்த நெடுங்கதைக் காவியம்.

கடலூர்ச் சிறையின் கனத்த இருளில், கொட்டும் மழையில் தொடங்குகிறது நாடக நயமும் காப்பிய அழகும் கொண்ட இந்தக் கதைக் கவிதை.

ஈரம் கசியும் சிறையின் அறைக்குள் பாரதி கனவும் நனவும் அலை பாய்கிற மனத்துடன் திடுக்கிட்டு விழித்துக் கொள்கிறார். தன் மகள் சகுந்தலாவைக் கடல் அலைகள் இழுத்துக் கொண்டு போவதாக ஒரு கணம் தடுமாறிப் போய்விடுகிறார். பின்னர் முகத்தில் அறைவதுபோல் சிறையின் உண்மை அவருக்கு விளங்குகிறது. இப்படித் தொடங்கும் கவிதை அலை அலையான வாழ்க்கைச் சம்பவங்களையும் ஏக்கங்களையும் பெருமூச்சுகளையும் நம்பிக்கைகளையும் சோகங்களையும் கோபங்களையும் சொல்லிக் கொண்டே போகிறது.

பாரதியின் வரலாற்று நிகழ்ச்சிகள் மெல்லிய கற்பனைச் சரட்டில் தொகுத்துத் தொடுத்து அமைக்கப்பட்டிருப்பதால் உண்மை வரலாறு எங்கே முடிகிறது... கற்பனை எங்கே தொடங்குகிறது என்று கண்டுபிடிக்க முடியாதபடி ஊடும் பாவுமாய் ஒன்றிக் கிடக்கிறது.

கற்பனைப் பாத்திரமாய் வரும் மன்னாரு நம் கண்களைக் குளமாக்கும் ஓர் அற்புதப் பாத்திரம். சுதேசிகளை நேசிக்கும் சிறை வார்டன். இந்த எளிய மனிதனையும் அவர் குழந்தைகளையும் பாரதி அரவணைத்துக் கொள்ளும் உணர்ச்சிச் சித்திரங்கள் அழியாத ஓவியமாய்த் தட்டுப்படுகின்றன. ஆயினும் வரலாற்று ஆதாரங்களில் எந்தச் சேதாரமும் இல்லாமல் இந்நூல் எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

எட்டையபுரமும், கங்கை பாயும் காசியும், கடல் பட்டினமான புதுவையும், பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்ட சென்னையும் மாறி மாறி பாரதியின் மனத்தில் உலா வருகின்றன. குவளைக் கண்ணனும், அரவிந்தரும், பாரதிதாசனும், வ.உ.சி.யும், வ.வே.சு. அய்யரும் வந்து வந்து போகின்றனர்.

பாரதியின் கவிதைக்கு ஊற்றுக் கண்ணாய் இருந்த எட்டையபுரத்துச் சின்ன வயதுக் காதலியையும் கவிதையை வளர்த்து வடிவம் தந்த மனைவி செல்லம்மாளையும் ஒப்பிட்டுப் பேசியிருக்கும் இடங்கள் சிற்பி என்னும் கவிஞருக்குள் மறைந்திருக்கும் திறனாய்வுக் கலைஞனை ஞாபகப்படுத்துகின்றன. "அவள் தந்ததுதான் கவிதை நெருப்பு. செல்லம்மாள் அதை வளர்த்த காற்று" எனக் கொள்ளை அழகோடு கவிஞர் இதைக் குறிப்பிடுகிறார்.

கடலூர்ச் சிறையிலிருந்து பாரதியார் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுதலை பெற்றார் என்பது வரலாறு. ஆனால் அந்த நிபந்தனைகளுக்கு மகாகவி இசைந்தமைக்கான காரணங்களை மனம் கொள்ளும் வகையில் இந்த நூல் எடுத்துப் பேசுகிறது. கவிஞன் சொல்லும் காரணத்தை வரலாற்று அறிஞர்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ... இலக்கிய வாசகர்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள்.

'பாரத நாட்டின் புதிய புண்ணிய ஸ்தலங்கள்' என்ற கட்டுரையில் திலகரும், சிதம்பரம் பிள்ளையும், காந்தியும் சிறையிருந்த இடங்கள் புண்ணிய ஸ்தலங்கள் என்று குறிப்பிடுகிறார் பாரதி. இவ்வாறு மகாகவி சிறைப்பட்டிருந்த கடலூர்ச் சிறையை அடையாளம் கண்டு, புனித நினைவுச் சின்னம் ஆக்குவதுதான் இந்த நூலைப் படிப்பவர்கள் செய்ய வேண்டிய திருப்பணி என்று நூலாசிரியர் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மட்டுமல்ல; பாரதியை உயிர்ச்சித்திரமாகத் தந்திருக்கும் அற்புதத்திற்காகவும் இந்நூலைத் தமிழர்கள் ஒவ்வொருவரும் படித்துப் பாதுகாக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com