'ஒரு பிடி சோறு':மாற்றங்கள் இல்லையேல்…! -காவியா புகழேந்தி

கல்லூரியில் காலடி எடுத்து வைத்த கொஞ்ச நாள்களில் நான் படித்த முதல் புத்தகம் ஜெயகாந்தனின் ’ஒரு பிடி சோறு’.
’ஒரு பிடி சோறு’ / ஜெயகாந்தன்
’ஒரு பிடி சோறு’ / ஜெயகாந்தன்

பள்ளிக் கூடத்தில் நான் டீடெயில்களாகப் படித்த ராபின்சன் குரூசோ, கலிவர்ஸ் டிராவல், தீரன் சின்னமலை தவிர்த்து எங்கள் ஊர் நூலகத்தில் படித்த தமிழ்வாணனின் சங்கர்லால் கதைகள் தவிர்த்து, கல்லூரியில் காலடி எடுத்து வைத்த கொஞ்ச நாள்களில் நான் படித்த முதல் புத்தகம் ஜெயகாந்தனின் ’ஒரு பிடி சோறு’.

அந்த ’ஒரு பிடி சோறு’ என்னுள் போய் எழுப்பிய அகோரப்பசியில் பாடங்கள் கசந்தும் படிப்பது சுகமாகவும் மாறிப்போய் தமிழில் முக்கிய எழுத்தாளர்களின் முக்கியப் படைப்புகளைப் படித்தேன்.

திசை மாறிய சக்கரமாய் ராணுவத்துக்குப் போய் என் படிப்பு தொடர எல்லையோர வான்படை நிலையத்தில் தமிழ் வார இதழ்களும் புத்தகங்களும் கிடைக்காத சூழலில் பார்வை மெல்ல ஆங்கிலப் படைப்புகளுக்குத் தாவ எல்லோரையும்போல கேம்ஸ் ஹார்ட்லி சேஸ், ஹெரால்ட் ராபின்ஸ் என்று துவங்கியது.

தீவிர வாசிப்பு கொண்ட மலையாளி நண்பர் ஒருவர் Ayn Rand-ன் ‘The Fountain Head’-ஐ எனக்குக் கொடுத்துப் படிக்கச் சொன்னார்.

ஹோவார்ட் ரோர்க் என்ற கட்டடக் கலைஞனை முக்கியக் கதாபாத்திரமாகக் கொண்ட நாவல். சுதந்திரச் சிந்தனையும், நாம் வாழும் காலத்தை நம் கட்டடங்கள் பிரதிபலிக்க வேண்டும் என்கிற தீவிர முற்போக்கு  எண்ணமும் கொண்ட அந்தக் கதாபாத்திரத்தில் என்னை நான் அடையாளம் கண்டது இன்றும் மகிழ்ச்சிக்குரிய விஷயமே.

The Reasoning mind cannot work under any form of compulsion என்கிற அந்தக் கதாபாத்திரத்தின் சித்தாந்தம் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வளைய வருவது சிரமம் என்று நான் எண்ணுகிற அளவுக்கு என்னை மாற்றிவிட்டது. இந்தக் கதாபாத்திரத்தின் ஒரு சாயலை நம் ஊர்க் கலைஞர் ஒருவரிடம் பார்க்க முடியும். அவர்தான் சத்தீஷ் குஜ்ரால். நமது முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ராலின் சகோதரர் என்பது கூடுதல் தகவல்.

1983 – 84 ஆம் வருடத்தில் சதீஷ் குஜ்ரால் வடிவமைத்த பெல்ஜியம் தூதரகம் அவரது திறமைக்கு ஒரு சான்று. சொங்கற்களை அடுக்கி வைத்தாற்போன்ற அமைப்பில் அவர் கட்டிய பெல்ஜியம் தூதரகத்தைப் புதுதில்லியில் பார்க்கலாம்.

ஒரு தூதரகத்தைப் போன்ற அமைப்பில் அது இல்லையே? என்று கேட்டதற்கு அவர் கொடுத்த பதில்: ‘’ஒரு தூதரகம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று யார் முடிவு செய்தார்கள்?’’

கதையில் ஹோவார்ட் ரோர்க்கிடம் ஒரு கோவில் கட்டும் பணியைக் கொடுப்பார்கள். அவரும் தன் சிந்தனைக்கேற்ப மிகவும் வித்தியாசமான ஒரு கோவில் கட்டுவார். கோவில் மாதிரி இல்லையே என்ற கேள்விக்கு, ‘’நம் முன்னோர்கள் மாதிரியே கோவில் கட்ட நாம் எதற்கு?’ என்பார்.

கோவில் மேல் இருந்த மரியாதையையே ஹோவார்ட் கெடுத்துவிட்டார் என்று அவர் மேல் வழக்குப் போட்டுவிடுவார்கள். கதையின் கடைசியில் ஒரு கட்டடத்தைக் குண்டு வைத்துத் தகர்த்த வழக்கில் அவர் நீதிமன்றத்தில் ஒரு பெரிய உரை நிகழ்த்துவார். ’பராசக்தி’யில் கோர்ட் சீன் மாதிரி.

நடைமுறையில் நம்மால் ஒரு ஹோவார்ட் ரோர்க்காக இருக்க முடியாமல் போகலாம். ஆனாலும் ஒரு லட்சியம் என்ற அளவில் அவரை, அந்த நாவலை ரசிக்கலாம். அப்படி இருக்க முயற்சிக்கலாம்.

ஐரோப்பாவில் பிறந்து ஒன்பது வயதில் எழுத முடிவு செய்து சுதந்திரமாக எழுத அமெரிக்காதான் சிறந்த தேசம் என்கிற காரணத்தால் அங்கே புலம் பெயர்ந்து, ‘’எழுத்தின் மூலம் பொருளாதார ரீதியாக வெற்றியடையும் வரை யாரும் எனக்கு உதவியதில்லை. அவ்வாறு உதவுவது யாருடைய கடமை என்றும் நான் எண்ணவில்லை’’ என்று சொன்ன Ayn Rand-ன் முக்கியப் படைப்புகள் The Fountain Head’, ‘Atlas Shrugged’, ‘We the Living’.

மொத்தத்தில் ஒவ்வொரு புத்தகமும் என்னை ஏதோ ஒரு வகையில் மாற்றிக் கொண்டேதான் இருக்கின்றன. மாற்றங்கள் இல்லையேல் நாம் அழுகிவிடமாட்டோமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com