'இந்தியச் சிந்தனை மரபு': சாளரங்கள் திறக்கும்! -தமிழன்பன்

'இந்தியச் சிந்தனை மரபு' என்னும் அரிய அறிவு நூல், ஈழத்தைச் சார்ந்த கலாநிதி நா. சுப்பிரமணியனும் அவருடைய துணைவி கெளசல்யாவும் ஆக்கியுள்ளனர்.
தமிழன்பன்
தமிழன்பன்

தொடர் சிந்தனைகளுக்கும் விவாதங்களுக்கும் இடம் கொடுப்பதாக அமையும் நூல், அறிவுச் செழுமைக்கும் படிப்பவர் உரிமைகளைப் பேணும் பண்பாட்டிற்கும் அடையாளங்களைக் கொண்டது என்று மதிப்பீடு செய்யலாம். அன்றியும் நூல் நெஞ்சறிந்த நேர்மைத் தளத்தில் நின்றும், எதிர்பார்ப்புகளின் நிராகரிப்பு நிலைகளில் இருந்தும் எழுதிய ஆசிரியனின் அப்பழுக்கற்ற உண்மை நோக்கிய முயற்சிகளை உரக்க மொழிவதாகவும் இருக்கும்.

இத்தகைய கருத்தோட்டத்தைப் படிப்பவர் தமக்குள் வரவழைத்துக் கொள்ள வாய்ப்பாக அமைந்தது ‘இந்தியச் சிந்தனை மரபு’ (சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை -2) என்னும் அரிய அறிவு நூல். ஈழத்தைச் சார்ந்த கலாநிதி நா. சுப்பிரமணியனும் அவருடைய துணைவி கெளசல்யாவும் ஆக்கியுள்ள இந்நூல் தமிழில் முதல்முறையாக வரலாற்றுப் பார்வையில் வேத காலம் முதல் இக்காலம் வரையிலான பல்வேறு அகங்களோடும் முகங்களோடும் வெளிப்பட்டிருக்கும் சிந்தனைகளைத் தொகுத்துத் தருகிறது.

‘இந்நூல் இந்தியச் சிந்தனை மரபைத் தொகுத்து நோக்கும் முயற்சியே அன்றித் தத்துவ ஆய்வு முயற்சி அன்று’ என ஆசிரியர்கள் தந்திருக்கும் வாக்குமூலத்தைக் கடந்து ஆய்வுப் பார்வைகளும் அங்கங்குப் படர்ந்துள்ளன. முழுமைத்தன்மை ‘தொகுப்பு’ நிலையில் காணப்படினும் இப்படித் தொகுக்கும் முயற்சியை முதன்மையாகக் கொண்டுதான் ஆய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும் என்பதால் இந்நூல் ஆய்வுத் தரவுகளின் களஞ்சியம் என்று சொல்லலாம். ஆய்வுக்கான மூலக்கூறுகளைக் கண்டறிவதும் ஆய்வின் ஒரு பகுதிதானே?

இந்நூலில்,

1.வேத மரபும் அதற்குப் புறம்பான சிந்தனைகளும்

2. கீதையும் குறளும்

3. பக்தி நெறியும் தத்துவ விரிவும்

4. மரபு – தேசியம் – ஆன்மநேயம் – என்று நான்கு இயல்களில் பல்வேறு வகைச் சிந்தனைப் போக்குகளும் அவற்றுக்கு உரிய பின்னணியில் வைத்துத் தேவையான அளவு சொல்லப்பட்டுள்ளன.

முதன்மையான இந்நான்கு இயல்களுக்குப் பின்னால் ‘நிறைவுரைக்குப் பதிலாக’ என்கிற பகுதியும், ’இணைப்புரைப் பகுதியும்’ முற்கூறிய இயல்கள் மீது எழுப்பப்பட்ட வினாக்கள் சிலவற்றை ஆய்வதாகவும், விடுபாடுகளான சிந்தனைப் போக்குகளை ஓரளவுக்கு கருதிப் பார்ப்பதாகவும் அமைந்துள்ளன.

மெய்யியல், அறம், ஒழுக்கம் என்னும் மூன்றின் மீதான பார்வையை இந்தியச் சிந்தனைகளில் தொன்மையானவை என்று ஆசிரியர்கள் கருதும் வேதங்களிலிருந்து, மார்க்சியம், பெரியாரியம் வரை படரவிட்டிருப்பது பாராட்டத்தக்க முயற்சியே.

வேதகாலச் சிந்தனை மரபுக்கு எதிரான சமய வடிவம் பெற்ற சமண, பெளத்த சிந்தனைகள் என்னென்ன என்பதை இந்நூல் சுருக்கமான அளவில் சொல்கிறது. உலகம் என்பது படைக்கப்பட்டது அன்று; எனவே படைத்தவனைப் பற்றிச் சமணம் கவலைப்படவில்லை என்பதை சொல்வதோடு பெளத்த மெய்யியலுக்குக் கடவுள் என்ற ஒருவரின் நிலை தேவைப்படவில்லை என்பதையும் இந்நூல் சொல்கிறது. பிரம்மம் என்ற கருத்துநிலை அறிவுப்பூர்வமானதன்று என்ற புத்தரின் திட்டவட்டமான கருத்தை வெளிப்படுத்தி விவாதிக்கும் ‘வேதமரபும் அதற்குப் புறம்பான சிந்தனைகளும்’ என்னும் பகுதி. சிந்தனைக் களஞ்சியங்களாக உள்ள சாந்தோக்கியம். பிரகதாரண்யகம் ஆகியன உள்ளடங்கிய 13 உபநிடதங்கள் பற்றியும் அரிய கருத்துகளை வெளிப்படுத்துகின்றது.

என்னை இந்நூலுள் மிகுதியும் ஈர்த்தது ‘கீதையும் குறளும்’ என்னும் தலைப்பில் உள்ள இயல். இவ்விரண்டு நூல்களின் கருத்து நிலைகள் மீது கவனமாக பார்வை செலுத்திச் சில கணிப்புகளையும் ஆசிரியர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

’சமுதாயத்தின் ஒட்டுமொத்த நலனுக்காகத் தனிமனிதன் தன்னை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்’ என்று கதையின் தொனிப்பொருளை எடுத்துச் சொல்லும் ஆசிரியர்கள், ’ஒரு பண்பட்ட உயர்ந்த வாழ்வியலைக் கட்டி அமைத்துக் காட்டும் முயற்சியாகத் திருக்குறள் அமைந்துள்ளது’ என்று திருக்குறளின் வெளிப்படைப் பொருளை விதந்து பேசுகின்றனர்.

கீதை, குறள் ஆகிய இரு நூல்களின் தோற்றச் சூழல், தோன்றிய நோக்கம் ஆகியன குறித்த சிந்தனைகளால் அடிப்படையில் இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகளை ஆசிரியர்கள் கண்டறிந்தும் ஐயம் அறக் கூறியுள்ளனர்.

’தமிழ் மரபின் மனிதநேய விழுமியங்களில் காலூன்றி நின்று அயல் மரபுகளின் உயரிய பண்புகளை உள்வாங்கிக் கொண்டு அனைத்துலக மானுடத்துக்கும் பொதுவானதாகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட நூலே திருக்குறள்’.

இப்படி நுட்பச் சிந்தனைகள் நூல் நெடுகத் தொடர்ந்து மின்னலடிக்கின்றன – வினாக்களின் பிடரிகளை உசுப்பிவிட்டபடி.

மரபுச் சிந்தனைகள், மாற்றுச் சிந்தனைகள், எதிர்மறைச் சிந்தனைகள் என வரலாற்றுத் தாழ்வாரத்தில் இடம்பிடித்துக் கொண்டிருக்கும் எல்லாமே ஒரு நூலுள் தொகைபட முடியாது என்பது எவருக்கும் எளிதாகப் புரியும் உண்மை. ஆயினும் தனித்தனி மெய்யியல் போக்குகள் தடம்போட்டு, சமூகத்தில் நுழைந்து வளர்ந்தும் தளர்ந்தும் வென்றும் வீழ்ந்தும் மக்கள் வாழ்வியல்களோடு முரண்பட்டும் உடன்பட்டும் இந்திய வரலாற்றில் சுவடு பதித்துள்ளதை, பொறுப்புணர்ச்சியோடு ஆசிரியர்கள் அணுகியுள்ளனர்.

படிப்பாளிகளாக வளர்ந்தவர்களும், வளர விரும்புகிறவர்களும் இந்நூலை ஒரே அமர்வில் விழுங்கிட முற்படாமல், நின்று நிதானித்துப் படித்தால், முடிவில் மூடிய புத்தகம் பல சாளரங்களைத் திறந்து வைப்பதைப் பார்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com