கோஸ்பெல் ஆஃப் ஸ்ரீ ராமகிருஷ்ணா: ஒப்பற்ற பரிசு! - செளந்தரா கைலாசம்

என் வாழ்க்கைத் தடத்தில் குறுக்கிட்ட தடைக்கற்களைக் கடந்து முட்களையும் ஒதுக்கி மகிழ்ச்சிக் கனியைக் கொய்து சுவைக்க  உறுதுணையான ஒப்பற்ற பரிசு. ''கோஸ்பெல் ஆஃப் ஸ்ரீ ராமகிருஷ்ணா'' என்னும் நூல் தான் அது.
கோஸ்பெல் ஆஃப்  ஸ்ரீ ராமகிருஷ்ணா / செளந்தரா கைலாசம்
கோஸ்பெல் ஆஃப் ஸ்ரீ ராமகிருஷ்ணா / செளந்தரா கைலாசம்

திரு. தி.சு. அவிநாசிலிங்கம் பைந்தமிழ் மக்கள் பலருக்கும் பரிச்சயமான பெயர். காங்கிரஸ் கட்சி தமிழகத்தை ஆண்ட காலத்தில் கல்வி அமைச்சராக இருந்து அரும்பணியாற்றியவர். நேரிய பாதையில் நிதமும் நடந்தவர்.

அவர் பேரில் எனக்கும் என் கணவர் திருவாளர் ப.சா. கைலாசம் அவர்களுக்கும் அளவற்ற மதிப்பும் மரியாதையும் உண்டு.

1943 என நினைக்கிறேன். என் கணவரும் நானும் திரு. அவிநாசிலிங்கம் செட்டியாரவர்களைப் பார்க்கச் சென்றிருந்தோம்.

என்னை மகளாகவும், என் கணவரை மருமகனாகவும் எண்ணி மிகவும் அன்போடும் பாசத்தோடும் பேசிக்கொண்டிருந்தார். நெடுநேரம் அளவிளாவிய பின்னர் வீட்டிற்குப் புறப்பட்டோம். அப்போது அவர் எனக்கு ஒரு மிகச் சிறந்த பரிசு தந்தார். ஆம், உண்மையிலேயே மிகச் சிறந்த பரிசு.  என் வாழ்க்கைத் தடத்தில் குறுக்கிட்ட தடைக்கற்களைக் கடந்து முட்களையும் ஒதுக்கி மகிழ்ச்சிக் கனியைக் கொய்து சுவைக்க  உறுதுணையான ஒப்பற்ற பரிசு. ''Gospel of Shri Ramakrishna'' என்னும் நூல் தான் அது.

இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர்களில் ஒருவரான 'ம' என்ற ஓர் எழுத்தின் மூலமே தன்னை வெளிக்காட்டிக்கொண்ட ஸ்ரீ மஹேந்திர நாத குப்தர் எழுதிய இராமகிருஷ்ண கதாமிர்தத்தின் ஆங்கிலப் பதிப்பு. 

அந்த நூலைப் பரிசாகப் பெறும்போது எனக்கு ஸ்ரீ இராமகிருஷ்ணரைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. பெரியவர் கொடுத்த நூலைப் பெருமையுடன் பெற்றுக்கொண்டு வீடு திரும்பினோம்.

இரண்டொரு நாள் கழித்து அந்தப் புத்தகத்தை படித்து தான் பார்ப்போமே என்ற எண்ணம் தோன்றியது. படிக்கத் தொடங்கினேன்.

படிக்கப் படிக்க ஆவல் பெருகியது. படித்த பகுதியையே மறுபடி படித்துச் சுவைக்க விழைந்தது மனம்.

ஆங்கிலத்தில் படித்த அப்புத்தகத்தின் சில பகுதிகளை இங்கே தமிழில் தந்தால் பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்.

பரமஹம்சரைப் பார்க்கச் சென்று மஹேந்திர நாத குப்தரைப் பார்த்துக் கேட்கிறார் குருதேவர்: ''உன்னுடைய மனைவி எப்படிப்பட்டவள்? அறிவுள்ளவளா? அறிவில்லாதவளா?''

''சுவாமி, அவள் நல்லவள், என்றாலும் அவளுக்கு அறிவு கிடையாது''

''அப்படியானால் நீ மட்டும் பெரிய அறிவுடையவனா?''

எழுதத் தெரிவதாலும் நூல்களைக் கற்பதாலுமே அறிவு ஏற்படுகிறது என எண்ணிக்கொண்டிருந்த மஹேந்திர நாத குப்தரின் அகங்காரத்துக்கு, ’’நீ மட்டும் பெரிய அறிவுடையவனா?’’ என்று குருதேவர் கேட்ட கணத்திலேயே ஒரு பலமான அடி விழுந்தது.

குருதேவர்: ’’சரி. உனக்கு எதில் நம்பிக்கை உள்ளது? உருவ வழிபாட்டிலா? அருவ வழிபாட்டிலா?’’

மஹேந்திர நாத குப்தர் ஆச்சரியத்துடன் தமக்குள்ளாகவே எண்ணிப் பார்த்தார். உருவ வழிபாட்டில் நம்பிக்கை உண்டானால் அருவத்தில் எப்படி நம்பிக்கை ஏற்படும்?. அருவத்தில் நம்பிக்கை கொண்டிருந்தால் உருவத்தை நம்பமுடியாதே.

இருப்பினும் தம் கருத்தை குருதேவரிடம் கூறினார்.

''அருவத்தை நம்புகிறேன்''.

குருதேவர்: ''சரிதான். ஏதாயினும் ஒன்றில் நம்பிக்கை இருந்தால் போதுமானது. ஆனால் அருவம் மட்டுமே உண்மை. உருவம் பொய் என்று மட்டும் எண்ணிவிடாதே.  ஆண்டவனின் அருவமும்  உண்மை. உருவமும் உண்மையே. இதை மறக்காமல் உனக்கு எதில் நம்பிக்கையோ அதைக் கடைப்பிடி’’.

மஹேந்திர நாத குப்தரிடம் பரமஹம்ஸர் கூறிய வார்த்தைகள் என்னிடம் எனக்காகவே கூறியவையாகவே எனக்குத் தோன்றியது.

''யானெனும் அகந்தைதான் எள்ளளவும் மாறவில்லை'' என்று உளமுருகப் பாடித் தன்னை ஒரு குணக்கேடராகவே பேசுவார் தாயுமான அடிகள்.

''நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்                                             மலையினும் மாணப் பெரிது'' என்பது வள்ளுவம்.

பரமஹம்சரின் இயல்பான உரையாடலின் வாயிலாகவே ஒருவருடைய அகந்தையை நீக்கி நன்னெறி சேர்ப்பிக்கும் திறனை வியந்து போனேன்.

உருவ வழிபாட்டைப் பற்றிய என் மனக்குழப்பத்தைப் போக்கி, அருவம், உருவம் ஆகிய இரண்டுமே உண்மை என எடுத்துக் கூறித் தெளிவு பெறச் செய்த அந்த வரிகள் என்றுமே எனக்கு ஒளி விளக்குகளாக விளங்குபவை.

''Gospel of Sri Ramakrishna'' என்னும் நூல் மனித மனங்களைப் பண்படுத்த வல்லது. மக்கள் மத்தியிலே மண்டிக் கிடக்கும் மாசினை அகற்றி, மருளினைப் போக்கி மாண்பு நிறைக்கக் கூடியது.

அந்த நூல் என் வாழ்வின் வழிகாட்டி, பலமுறை அதைப் படித்துவிட்டேன். இன்றும் படித்துக் கொண்டிருக்கிறேன். இனிமேலும் அதனைப் படிப்பேன்.

அந்த அருமையான நூலை எனக்கு அன்புடன் பரிசளித்த  பெரியவர் திரு. அவிநாசிலிங்கம் அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றியை உரித்தாக்குகிறேன். நாதன் தாள் வாழ்க.

                     (13.5.2001 அன்று தினமணி கதிரில் வெளிவந்தது)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com