'அடிவாழை': அசாதாரண மனிதர்களின் சித்திரங்கள்! -வெங்கட் சாமிநாதன்

‘அடிவாழை’ என்னும் சிறுகதைத் தொகுப்பு, கிருஷ்ணசாமி என்பவர் ‘சகதேவன்’ என்னும் பெயரில் எழுதியது.
வெங்கட் சாமிநாதன்
வெங்கட் சாமிநாதன்

அந்நாளைய ’ஹிந்து’ ஆசிரியர் என்.ரகுநாதன் என்னும் ரசிகன், கதைகள், நாடகங்கள் எழுதியிருக்கிறார். கதாசிரியராகும் ஆசையும் இல்லை. எழுதித்தான் ஆக வேண்டும் என்ற நிர்பந்தமும் இல்லை அவருக்கு. கா.சி.வேங்கடரமணி அவர் நண்பர். இருவருக்கிடையேயும் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்ட ஓர் ஒப்பந்தம் – ஒருவர் பத்திரிகைக்கு மற்றவர் எழுதுவது என்று. அப்படித்தான் கா.சி.வேங்கடரமணி நடத்திய பத்திரிகைக்கு ரசிகன், கதைகள், நாடகங்கள் எழுதினார். 1947 – 48களில் இவற்றில் சில 50களின் கடைசியில் ‘ரசிகன் கதைகள்’, ‘ரசிகன் நாடகங்கள்’ எனத் தொகுக்கப்பட்டன. அப்படியும் கூட, ரசிகர்கனின் கற்பனையும், எழுத்துத் திறனும் வியக்கத்தக்கன. ஒரு காலகட்டத்திய வாழ்க்கையை நகைச்சுவையுடன் திறம்படச் சித்தரித்திருக்கிறார். தொடர்ந்து எழுதியிருக்கக் கூடுமானால் நம்மால் இன்று பேசப்படும் சிறுகதையாசிரியர்களில் ஒருவராக இருந்திருப்பார்.

இப்படித்தான் ஒரு பெங்களூர்க்காரர். தமிழாசிரியர். நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார், ‘அடிவாழை’ என்னும் சிறுகதைத் தொகுப்பை நம்முன் வைத்து. அவ்வபோது ‘சகதேவன்’ என்னும் பெயரில் எழுதி வந்த சிறுகதைகளின் தொகுப்பு இது. மொத்தம் 12 கதைகள். தமிழ் இலக்கணம் கற்றதன் பெறுபயனாக, தமிழாசிரியர்கள் வாழ்த்துப்பா எழுதும் விவகாரம் இல்லை இது. நுண்ணிய பார்வை பார்த்தவற்றில் விசேஷமானவற்றைத் தேர்ந்தெடுக்கும் உணர்வு, சிருஷ்டித் திறன் வாய்ந்த சொல்லாட்சி எல்லாம் அவருக்கு வாய்த்திருக்கிறது. ஒரு விஷேஷமான வியக்தியை, மனதைப் பாதித்த சம்பவத்தைத் தீட்டிவிடும் திறன் மிக இயல்பாக, சிரமமின்றி ஒரு நேர்த்தியுடன் ப.கிருஷ்ணசாமிக்கு வாய்த்திருக்கிறது. இவையெல்லாம் குறிப்பிடத்தக்க விஷயங்கள்தாம். நிறைய எழுதி, தம்மை ஒரு கதாசிரியராக ஸ்தாபித்துக் கொள்ளத் தேவையான வாழ்க்கை அனுபவங்களும், எழுத்துத் திறனும் இவரிடம் இருக்கின்றன. இதற்கெல்லாம் மேலாக, அவருடைய தனித்தன்மை என்று சொல்லத் தகுந்த இரண்டு அம்சங்கள். ஒன்று, தன்னையே நகையாடிக் கொள்ளும் மிகச் சிறந்த குணம். இரண்டு, சொல்ல வந்த விஷயத்தின் மையமான, இதுவுமில்லாத அதுவுமில்லாத ஒரு இருண்மை. முடிவுற்ற, தெளிவற்ற ஒரு திரிசங்கு நிலை. அத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் ஏதோ ஒன்றாக முடிவு கட்டி அதற்கு ஒரு புள்ளி வைத்தல் இவரிடம் இல்லை. அப்புள்ளி தனிச்சையான முடிவாகும். ஒருவரின் தர்மசங்கடமான நிலையோடு நின்றுவிடுகிறார். அதன் முடிவுக்குச் செல்வதில்லை. அந்த முடிவு, எப்படியும் சாயும். தீர்மானம் தனிச்சையான ஒன்றாகிவிடும். இந்த தர்மசங்கடம்தான் விசேஷமானது. முடிவல்ல.

தன் வீட்டு நெல்லை வேலம்மாள் திருடிவிட்டதாகப் புகார் செய்யும் கோபாலு. பஞ்சாயத்தின் முன் குற்றம் சாட்டப்பட்டு நிற்கும் வேலம்மாள், கடைசியில், ‘’சரிடா, மதகுக்கு மேல் தட்டி கட்டி மறைச்சி வச்சுக்க’’ என்று சொல்லி, கேஸ் தள்ளுபடியாகிறது. சற்றுப்பின் கோபாலு வேலம்மாளுக்கு முறுக்கு வாங்கித் தருகிறாள். வேலம்மாள் அழுகிறாள். அவன் ஏன் முறுக்கு வாங்கித் தந்தான்; இவள் ஏன் அழுகிறாள் என்று ஏதும் விளக்கம் இல்லை. இந்த உறவு என்ன? எவ்வகையானது என்பது எல்லாம் சொல்லப்படாத விஷயங்கள்.

நல்ல செல்வாக்கில் இருந்த நாச்சியப்ப கவுண்டருக்கு இப்போ நசிவு காலம். தன்னால் போஷாக்கு தந்து வளர்க்கப்பட்ட ரங்கனிடம் கதவை மாற்றி வைக்கச் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறார். ஆனால் தன்னிடம் பணம் இல்லை. தன்னால் ரங்கன் வளர்ந்து செழித்த கதைகளை மனம் அசைபோடுகிறது. ரங்கன் வந்தால் அவனிடம் என்ன பேசுவது என்று திகைத்து நிற்கிறார் கவுண்டர். என்ன சொல்வார்? கிருஷ்ணசாமிக்கும் தெரியாது. கவுண்டருக்கும் தெரியாது. ரங்கன் வந்த பிறகுதான் தெரியும். அதற்குள் கதை முடிந்து விடுகிறது.

இப்படியான மனித வாழ்க்கையின் திரிசங்கு நிலைகளைச் சித்தரிக்கிறார் கிருஷ்ணசாமி. இன்னும் சில கதைகளில் சில அசாதாரண மனிதர்களின் சித்திரங்கள். ‘அப்பாவுக்கு நடந்த ஆபரேஷன்’. தன் பிரியத்தைக் காட்டிக் கொள்ள முடியாது பணத்தின் மேல் குறியாக இருக்கும் கருமி அப்பாவின் சித்திரம். அவர் செய்துகொண்ட ஆபரேஷன், பரம்பரைக் குத்தகைக்காரனிடம் கறாரான குத்தகை பேரம் உறவை மறந்த பணத்தாசை எனத் தோன்றும். கடைசியில் அப்படியும் இல்லை. இங்கு பணம் – உறவு என்ற ஊசலாட்டம். காதல் தம்பதிகளின் – ஒரு பிரிவின் முன்னதான சம்பாஷணை, மலையாளக் காதலி, தமிழ்க் கவுண்டர் காதலன், தமிழிலும் மலையாளத்திலுமாகச் சம்பாஷணை. இந்த உறவின் மெல்லிய இழைகள் வெகு நேர்த்தியானவை. இப்படி 12 கதைகள்.

இவ்வளவு அழகாக எழுதும் ப.கிருஷ்ணசாமி என்னும் சகதேவன் ஏன் இன்னமும் தமிழாசிரியராகவே தன்னைக் குறுக்கிக் கொள்ள வேண்டும்? ஏன் தன்னை ஒரு சிருஷ்டி கர்த்தாவாக உலாவச் செய்யவில்லை?. 

            (தினமணி கதிரில் 26.08.2001 அன்று வெளியானது)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com