'தாகூரின் சொற்பொழிவுகள்': தாகூர் தரிசனம்! -மு.பழனி இராகுலதாசன்

தாகூரின் சொற்பொழிவுகள் என்னும் மொழிபெயர்ப்பு நூல்  1964 மே மாதம் காரைக்குடி அழகுப் பதிப்பகம் மூலம் முதலாவது பதிப்பாக வெளியிடப்பட்ட இந்த நூலின் ஆசிரியர் பேராசிரியர் சு.குழந்தைநாதன்.
ரவீந்திரநாத் தாகூர்
ரவீந்திரநாத் தாகூர்

மகாகவி தாகூர் இந்திய இலக்கியத்தில், சிந்தனையில், வாழ்வியலில் மிகப் பெரிய மாறுதலை நிகழ்த்திக் காட்டிய பெருமைக்குரியவர். மகாகவி பாரதியார் மூலமாகவும், வி.ஆர்.எம். செட்டியார், தண்டலம் சகோதரர்கள், சுத்தானந்த பாரதி, க.நா.சு., தொ.பொ.மீ., மு.வ., அ.ச.ஞானசம்பந்தன் முதலிய அறிஞர்கள் வழியாகவும் தாகூரின் இலக்கிய தரிசனம் தமிழ் மக்களுக்கு மிகத் தாராளமாகக் கிடைத்தது. இவற்றில் தாகூரின் சொற்பொழிவுகள் என்னும் மொழிபெயர்ப்பு நூல் குறிப்பிடத்தக்கது. 1964 மே மாதம் காரைக்குடி அழகுப் பதிப்பகம் முதலாவது பதிப்பாக வெளியிட்ட இந்த நூலின் ஆசிரியர் பேராசிரியர் சு.குழந்தைநாதன். மொழியாக்கம் என்ற உணர்வே தோன்றாமல் பழகு தமிழில் அழகு நடையில் வெகு சிறப்பாக அமைந்துள்ள இந்நூல் சுமார் 300 பக்கங்களைக் கொண்டுள்ளது. விலை ரூ.6 மட்டுமே.

கவியரசர் தாகூர் சீனா, அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி ஆகிய வெளிநாடுகளிலும் இந்தியாவிலும் ஆற்றிய பல்வேறு சொற்பொழிவுகளும் ’சாதனா’ இதழில் எழுதிய கட்டுரை ஒன்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நூலுக்கு ஓர் அறிமுகம் எழுதியுள்ள வி.ஆர்.எம். செட்டியார் குறிப்பிடுவதைப் போல தாகூரின் இந்தச் சொற்பொழிவுகள் இந்தியாவின் அறிவுச் செல்வத்தையும் ஆன்மிக செல்வத்தையும் உலகம் அறிய பெருமுழக்கம் செய்கின்றன. இன்று இந்தியாவும் தமிழ்நாடும் எத்தனையோ பல பிரச்னைகளுக்குள் வீழ்ந்து அமிழ்ந்து கொண்டிருக்கின்றன. தாய் மொழியிலேயே  பயிற்று மொழி, மத, இனமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்ட மனிதாபிமானம், மொழி, நாடு என்ற எல்லைகளைக் கடந்த பேரன்பு என்பன போன்ற வாழ்வியல் உயர் மதிப்பீடுகள் எல்லாம் கரைந்து காணாமல் போய்க்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் கவியரசர் தாகூரின் உயரிய செம்மாந்த சிந்தனைகள் மிகுந்த தொலைநோக்குப் பார்வையுடன் கலங்கரை விளக்கமாய், படிப்போரின் நெஞ்சங்களில் ஒளிபாய்ச்சுகின்றன.

கவியரசர் தாம் நிறுவிய பள்ளி பற்றியும் ஆசிரமம் பற்றியும் அவற்றின் மூலாதாரமான நோக்கங்கள் பற்றியும் குறிப்பிடுகையில் ‘’மனிதன் வாழும் இவ்வுலகமே இறைவனின் எழில் உலகம் என்று பள்ளியில் உணர்த்தப்படுகிறது. வானகம் மண்ணிலேயே தென்படுகிறது என்று தெளிவிக்கப்படுகிறது. ஆசிரமத்தின் அன்புச்சூழலில் இளைஞரும் பெரியோரும் ஆசிரியரும் மாணவரும் ஒரே பந்தியில் அமர்ந்து உண்கிறோம். அழிவற்ற வாழ்வுக்கு வேண்டிய ஆன்மிக உணவையும் ஒரு சேரப் பங்கிட்டு உண்டு மகிழ்கிறோம்’’ என்று பேசுகின்றார். நாகரிகம் என்பது என்ன? என்ற வினாவுக்குக் கவியரசர் தரும் விளக்கம் சிந்தனைக்குரியது. ‘’தற்செயலாகச் சமுதாயத்தில் சில நிகழ்ச்சிகள் விளைகின்றன. நாளடைவில் அந் நிகழ்ச்சிகள் ஒரு வகைக் கட்டுக்கோப்பும் உணர்ச்சியோட்டமும் பெறுகின்றன. இவற்றை நாம் மிகச் சிறந்தவை என்று கருதுகிறோம். இத்தகைய தற்செயலாகப் பெருகியுள்ள நிகழ்ச்சித் தொகுப்புகளை நாகரிகம் என்று கருதிவிடக் கூடாது. நல்லொழுக்க நெறியில் நம்மை வழிகாட்டி உணர்த்தும் பேராற்றலே நாகரிகம் எனப்படும்’’ என்கிறார் தாகூர்.

மனித உண்மை என்பது எது? அவனுடைய பொருட்செல்வமா? அல்லது அவனுடைய அருட் செல்வமா? என்று கவிஞர் விவாதிக்கும் இடம் அபூர்வமான இடம். ‘’ மனிதனைப் பற்றிய அடிப்படை உண்மை அவனது அறிவாற்றலிலோ, பொருட்செல்வத்திலோ பொருந்தி நிற்பதில்லை. அவனுக்கு இரக்க உணர்வு, இதயக் கனவு, தியாகச் செயல்கள், சாதி, இன வரம்புகளைக் கடந்து உலக மக்களிடமெல்லாம் அன்பைப் பரப்பும் திறம் முதலியவற்றிலேயே மனித உண்மை துலங்குகிறது. இயந்திர ஆற்றல்களைச் சேர்த்து வைத்துள்ள படைக்கலக் கொட்டிலாக இவ்வுலகைக் கருதாமல் நிரந்தர அழகுப்பெண்ணும் தெய்வீக இருக்கையின் உள்ளொளியும் பொருந்திய மனிதனுடைய ஆன்மா அகம் மகிழ்ந்து தங்கியிருக்கும் அன்பாலயமாக இவ்வுலகை மனிதன் உணரும்போதுதான் அவனுடைய பேருண்மை பெருமையடைகிறது’’ என்று கவியரசர் உருக்கமுடன் சுட்டிக்காட்டுகிறார்.

உலக நாடுகளிடையே ‘தேசியம்’ என்ற உணர்வு பெருகிப் பின்னர் வெறியாகி அதுவே உலகப் பெரும் போர்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணமாகிவிட்டது என்பதை கவியரசர் மிகுந்த வேதனையோடு அறிவிக்கிறார். ‘’உலக மானுடநேய உணர்ச்சிக்குத் ’தேசியம்’ என்ற எல்லைக்கோடு தடையாக அமைந்து வருகிறதே’’ என்று கவலைப்பட்டார். இன்று உலகெங்கும் நடப்பது இதுதான். தேசியம் என்ற ஒரே மாதிரிப்போக்கு மக்களுடைய தனித்தன்மைகளை இறுக்கி அழித்து வருகிறது……தேசியம் என்ற உணர்வு தலைதூக்கி நிற்கும் போதெல்லாம் அது இரக்கத்தையும் எழிலையும் அழித்துவிடுகிறது….. தாராளமான உறவு நெறிகளை மக்களது இதயத்திலிருந்து விரட்டி ஓட்டிவிடுகிறது…..’’ என்று வேதனைப்படுகிறார்; எச்சரிக்கிறார்.

நம்முடைய வாழ்க்கையை ஒரு நதியின் ஓட்டம் என்று உருவகிக்கும் தாகூர் அந்த நதியானது கடலாகி பிரம்மத்தோடு கலந்துவிடுவதுதானே நியாயம், இயற்கை என்று கேட்கிறார். ‘’கடலை நோக்கிப் புரண்டு ஓடும் ஓடையின் ஓசையில் ‘நான் கடல் ஆகி விடுகிறேன்’ என்ற ஆனந்த உறுதியே ஒலிக்கிறது….. இதை விட்டால் ஆற்றுக்கு மாற்றுவழி கிடையாது; ஆற்று நீர் அது ஓடி வரும் பாதையில் ஓராயிரம் பொழுதே தன்னுடைய பயணத்தின் முடிவை எட்டுகிறது…… ஆறு கடலாவதைப்போல நமது ஆன்மாவும் பிரம்மமாக முடியும்’’ என்று தாகூர் தரும் வாழ்க்கைப் பயண விளக்கம் தாகூருக்கு மட்டுமே உரிய தரிசனம் ஆகும்.

மகாகவி தாகூரைத் தரிசனப்படுத்திக் கொள்வதற்காக ஒருமுறையும் பேராசிரியர் சு.குழந்தைநாதன் அவர்களுடைய ஆற்றொழுக்கான அழகுதமிழ் மொழிபெயர்ப்புச் செழுமைக்காக ஒரு முறையும் சிந்திக்க விரும்பும் இளைஞர்கள் கட்டாயம் பயின்று உணரவேண்டிய நூல் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com