'என் சரித்திரம்': இன்னமும் படிக்கிறேன்! -இரா.முருகன்

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் ’என் சரித்திரம்’ என்ற புத்தகத்தின் தமிழ் நடை எத்தனை எளிமையும் சுவையுமாக இருக்கிறது பாருங்கள்.
உ.வே.சாமிநாதய்யரின் ’என் சரித்திரம்’ / இரா.முருகன்
உ.வே.சாமிநாதய்யரின் ’என் சரித்திரம்’ / இரா.முருகன்

சொந்தக் கவலை, நாட்டுக் கவலை, சென்னைவாசியாக இருந்தால் தண்ணீர் கவலை ஆகிய ’சின்னச் சின்னக் கவலைகள்’ என்னைத் தின்னத் தகாதே என்று எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளுங்கள். வாருங்கள். இரு நூற்றைம்பது வருடம் முந்தைய தமிழகத்துக்குப் போவோம்.

நீங்கள் வந்து சேர்ந்திருக்கும் இடத்தின் பெயர் உத்தமதானபுரம். ’’இந்தக் காலத்தில் உள்ள பல செளகரிய அமைப்புகள் அந்தக் காலத்தில் இல்லை. ரோடுகள் இல்லை. கடைகள் இல்லை. உத்தியோகஸ்தர்கள் இல்லை. ரெயிலின் சப்தம் இல்லை. ஆனாலும் அழகு இருந்தது. அமைதி இருந்தது. ஜனங்களிடத்தில் திருப்தி இருந்தது, பக்தி இருந்தது. அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி இருந்தது. வீடுகளில் லக்ஷ்மிகரம் விளங்கியது.’’

இப்படி அன்பொழுக வார்த்தை சொல்லிக் கையைப் பிடித்துக் கொண்டு வந்திருப்பவர் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர். தமிழில் மகாபண்டிதர் மகாவித்வான்களிடம் குருகுல வாசம் செய்து பாடம் கேட்டவர். யாப்பு, யமகம், திரிபு என்று சொல்லி அறியாச்சீவன்களை நெட்டோட்டம் ஓடவைக்கும் கவிராயரல்ல இவர். இவரது ’என் சரித்திரம்’ என்ற இந்தப் புத்தகத்தின் தமிழ் நடை எத்தனை எளிமையும் சுவையுமாக இருக்கிறது பாருங்கள்.

கிட்டத்தட்ட எழுநூற்றைம்பது பக்கத்துக்கு விரியும் இந்தப் புத்தகத்தை கட்டி நிறுத்துவது அற்புதமான நடையழகு மட்டுமில்லை, சுபாவமாக நடந்து வந்து நம்மைச் சந்திக்கிற அந்தக்கால மனிதர்கள். சரசரவென்று நேர்த்தியாக விரியும் காட்சிகள். மனதுக்கு இதமான மண்ணின் மணம். அகிரோ குரசோவாவின் ஜப்பானிய வாழ்க்கைப் படங்களைப் பார்க்கும்போது ஏற்படும் அற்புதமான உணர்வைத்தான் இதற்கு கொஞ்சம் போல இணையாகச் சொல்ல முடியும். ஒரு வாழ்க்கை வரலாற்றை இதை விடச் சிறப்பாக இனியும் யாராவது எழுத முடியும் என்று தோன்றவில்லை.

உ.வே.சா.வின் வாத்தியார் மீனாட்சி சுந்தரம்பிள்ளை வருகிற அழகைப் பாருங்கள். ’’ஒரு யானை மெல்ல அசைந்து நடந்து வருவதைப் போல் அவர் வந்தார். நல்ல வளர்ச்சியடைந்த தோற்றமும், இளம் தொந்தியும், முழங்கால்வரை நீண்ட கைகளும், பரந்த நெற்றியும், பின்புறத்துள்ள சிறிய குடுமியும், இடையில் உடுத்தி இருந்த வெள்ளை ஆடையும் அவரை ஒரு பரம்பரைச் செல்வர் என்று தோன்றச் செய்தன. ஆயினும் அவர் முகத்தில் செல்வர்களுக்கு உரிய பூரிப்பு இல்லை; ஆழ்ந்து பரந்த சமுத்திரம் அலையடங்கி நிற்பது போன்ற அமைதியே தோன்றியது’’.

‘’உங்கள் பெயர் என்ன?’’ ஆசிரியர் கேட்கிறார். ‘’என் பெயர் வேங்கடசுப்பன். இவன் பெயர் வேங்கடராமன்’’ என்று உ.வே.சா. அவர்களின் தந்தையார் சொல்கிறார். ‘’வேங்கடசுப்பன் என்பது நல்ல பெயர், திருவேங்கட மலையில் முருகக் கடவுள் கோயில் கொண்டிருக்கிறார் என்பதற்கு இந்த வழக்கு ஓர் ஆதாரம்.’’

வேங்கடராமன் சாமிநாதனானது அந்தத் தமிழறிஞரால்தான். ‘நந்தன் சரித்திரம்’ எழுதிய கோபாலகிருஷ்ண பாரதியார், இசை விற்பன்னர்கள் கனம் கிருஷ்ணய்யர், மகா வைத்தியநாதய்யர், காதில் ஆறுகட்டி, சுந்தரவேடம் காவியுடை, தலையில் கழுத்தில் ருத்ராட்ச மாலையோடு திருவாவடுதுறை மகாசந்நிதானம் சுப்பிரமணிய தேசிகர், ராத்திரி பன்னிரண்டு மணி வரை பாராயணம் செய்து விட்டு நடுராத்திரிக்கு இலை போட்டுத் தமிழ்ப் பாடம் சொல்லிக் கொண்டு சாப்பிடவும், கேட்கவும், ஏற்பாடு செய்து தமிழ் வளர்த்த ஆறுமுகத்தாபிள்ளை போன்ற பிரபுக்கள், குற்றாலத்துக்கு வரும் வெள்ளைக்கார பெனிங்டன் துரை, ‘’துங்கம் சார்தருதுரைசை யில்வளர் சுப்பிரமணிய தயாநிதியே’’ என்று இங்கிலீஷ் மெட்டில் கவனம் செய்த பாட்டைப் பூஜை நேரத்தில் பாடும் ஓதுவார்கள், மகாசந்நிதானம், சாமிநாதய்யருக்குக் கொடுத்த புத்தகத்தைப் பிடுங்கி வைத்துக் கொள்கிற தவசிப்பிள்ளை, கல்லும் மண்ணுமாகக் கோயில் பிரசாதம் தரும் காரியஸ்தர், சுருட்டுக் குடிக்கத் தனியிடம் தேடி நடக்கும் தமிழ்ப் பண்டிதர், காவேரிக் கரையில் நீர் ஊற்றுக்குக் காவல்காரன், வீட்டு வாசலில் மாக்கோலம் போட்டு, வாழை மரம் கட்டி சீவக சிந்தாமணியைப் பாராயணம் செய்யும் தமிழ்ச் சமணர்கள்…. ஒன்றரை நூற்றாண்டுக்கு முந்தைய தமிழ்ச் சமுதாயம் நம்முடையதை விட வெகு சுவாரஸ்யமானது.

அந்தக் காலப் பேச்சுத் தமிழின் சுவையும் அலாதிதான். சைவமடத்துத் தம்பிரான்களைக் ’குட்டிகள்’ என்கிறார்கள். உபாத்தியாயர்கள் மாணவர்களை ’நீர்’ என்று அன்பும் அரை மரியாதையுமாக அழைக்கிறார்கள். ‘சன்னிதானம் வந்தது’ என மடாதிபதியை மரியாதையோடு குறிப்பிடுகிறார்கள். உரையாடல் ’சல்லாபம்’ என்று சொல்லப்படுகிறது.

‘என் சரித்திர’ த்தில் லயித்துப் பத்து வருடம் முன்னால் இந்தப் புத்தகத்தை முக்கியக் கதாபாத்திரமாக்கி ‘ராத்திரி வண்டி’ என்று ஒரு குறுநாவல் எழுதினேன். இன்னும் அவ்வப்போது படிக்கிறேன். படிக்கப் படிக்க ஈர்ப்பு கூடிக் கொண்டேதான் போகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com